Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகர பகுதியில் 21 கோடியில் தார் சாலைகள், கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்படும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தகவல்

Print PDF

தினத்தந்தி           19.11.2013

நெல்லை மாநகர பகுதியில் 21 கோடியில் தார் சாலைகள், கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்படும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தகவல்

நெல்லை மாநகர பகுதியில் 21 கோடி செலவில் தார் சாலைகள், கழிவு நீர் ஓடைகள் சீரமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தெரிவித்தார்.

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் விஜிலா சத்யானந்த் தலைமையில் நடந்தது. துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், ஆணையாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் படித்தார். தொடர்ந்து அவர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தில் கூறி இருப்பதாவது:–

அருட்தந்த சேவியர் தனி நாயகம்

அருட்தந்தை சேவியர் தனி நாயகம் அடிகளார் இலங்கையில் 2–8–1913–ம் ஆண்டு பிறந்தார். அவர், தமிழ்மொழி குறித்த தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, தமிழ் அறிஞர்களை இணைத்து முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் 1966–ம் ஆண்டு நடத்தினார்.

அவர் நெல்லை மாநகர பகுதியில் வசித்தார். மேலும் அவர், 1940 முதல் 1945 வரை வடக்கன் குளம் புனித தெரசா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காகவே வாழ்ந்த சேவியர் தனிநாயகம் நூற்றாண்டு விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர், தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்காகவும், நெல்லையில் வசித்தாலும் நெல்லை பொருட்காட்சி திடலின் நினைவு நடுகல் அமைத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. அந்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது.

தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

தெருவிளக்கு

சேகர் (அ.தி.மு.க.):– எனது வார்டு பகுதியில் 3 நாட்களாக இரவும், பகலும் தெரு விளக்குகள் எரிந்தன. இன்று (அதாவது நேற்று) காலை 10 மணிக்கு தான் அந்த விளக்குகள் அணைக்கப்பட்டன. மின்சாரம் அதிக அளவு தேவைப்படும் இந்த காலத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தெரு விளக்குகள் எரிந்தால் எப்படி? அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

உதவி ஆணையாளர் (பொறுப்பு) சாந்தி:– எனது கவனத்துக்கு வந்தது. மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தேன். மின் இணைப்பில் பழுது ஏற்பட்டதாக கூறினார். அதை சரி செய்து தெரு விளக்கை அணைத்து இருக்கிறார்.

எல்.இ.டி. பல்புகள்

மேயர்:– நெல்லை மாநகர பகுதியில் எல்.இ.டி. பல்புகள் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த விளக்குகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரகாசமாக எரியும். அதற்கு மேல் குறைந்த அளவு ஒளியில் எரியும். இதனால் மின் சிக்கனம் ஏற்படும். அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் நெல்லை மாநகராட்சி பகுதியில் எல்.இ.டி. பல்புகள் பெருத்தி விடலாம்.

சுப்பிரமணியன் (தி.மு.க.):– எல்.இ.டி. பல்புகளை சோதனை செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் மத்தியில் சோதனை ஓட்டம் நடத்த வேண்டும்.

மேயர்:– கவுன்சிலர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்படும். அதன் பிறகு மாநகராட்சி பகுதியில் பொருத்தலாம்.

போக்குவரத்து நெரிசல்

பரமசிவன் (அ.தி.மு.க.):– நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்:– நெல்லை டவுனில் இருந்து குலவணிகர்புரம் வரையும், நெல்லை சந்திப்பு அண்ணா சிலையில் இருந்து பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வரையும் இருபுறமும் சாலைகளை அகலப்படுத்தப்படும். பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடை மேடை அமைக்கப்படும்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் சாலைகளை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், கழிவு நீர் ஓடைகளை சரிசெய்ய வேண்டும் என்று பேசினார்கள்.

21 கோடியில் புதிய திட்டம்

இதற்கு பதில் அளித்து பேசிய மேயர், “நெல்லை மாநகர பகுதியில் தார் சாலைகள், கழிவு நீர் ஓடைகள் சீரமைக்க ரூ.21 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது. அந்த திட்டம் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரசு அனுமதி வழங்கிய உடன் பணி தொடங்கும்.

இந்த பணி நிறைவடைந்தால், மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. கழிவு நீர் தண்ணீர் ஓடைகளில் தங்காது“ என்று பேசினார்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.

தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.