Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மணலி, மறைமலைநகரில் 255 மனைகள் விற்பனை: குலுக்கல் முறையில் ஒதுக்க சி.எம்.டி.ஏ., முடிவு

Print PDF

தினமலர்              11.12.2013

மணலி, மறைமலைநகரில் 255 மனைகள் விற்பனை: குலுக்கல் முறையில் ஒதுக்க சி.எம்.டி.ஏ., முடிவு

சென்னை : மறைமலை நகர், மணலி, சாத்தாங்காடு, கோயம்பேடு பகுதிகளில் உள்ள, 255, குடியிருப்பு, வணிக மனைகள் மற்றும் கடைகள், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு, செய்யப்படும் என, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) அறிவித்து உள்ளது. சென்னை, பெருநகர் பகுதியில், புதிதாக துணை நகரங்களை ஏற்படுத்தும் நோக்கில், மறைமலை நகர், மணலி புது நகர் பகுதிகளில், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டன.

இதே போன்று, சாத்தாங்காடு இரும்பு எஃகு அங்காடி, கோயம்பேடு காய், கனி மொத்த விற்பனை அங்காடி ஆகியவற்றில் கடைகளும், வணிக மனைகளும் விற்பனையாகாமல் உள்ளன. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், இவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனைகள், பல ஆண்டுகளாக ஒதுக்கப்படாமல், உள்ளன. இதனால், சி.எம்.டி.ஏ.,வுக்கு, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்படுவதாக, தணிக்கை அறிக்கைகளில், சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

255 மனைகள் இதில், மறைமலை நகர் பகுதியில், குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கான, 105 மனைகள், மணலி புது நகரில், 82 மனைகள், சாத்தாங்காடு பகுதியில், 64 மனைகள், கோயம்பேடு அங்காடி பகுதியில் நான்கு கடைகள் என, மொத்தம், 255 மனைகள் மற்றும் கடைகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றை, குலுக்கல் முறையில், ஒதுக்கீடு செய்வதற்கான, அறிவிப்பை சி.எம்.டி.ஏ., வெளியிட்டு உள்ளது.

இதன்படி, குடியிருப்பு, வணிக மனைகளை பெறவும், கடைகள் ஒதுக்கீடு பெற விரும்புவோர், விண்ணப்பிக்கலாம். இதற்கான, விண்ணப்பங்களை சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட, விண்ணப்பங்களுடன் 'முதன்மை செயல் அலுவலர், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட, 1,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை இணைத்து, அனுப்ப வேண்டும். இந்த பதிவு கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் வழிகள்....

பூர்த்தி செய்யப்பட்ட, விண்ணப்பங்கள் அனைத்தும், 2014 ஜனவரி, 6ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இதுகுறித்த, கூடுதல் விவரம் பெற, சென்னை, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் முது நிலை உடைமை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். குலுக்கல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சி.எம்.டி.ஏ., அறிவித்து உள்ளது.