Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேனி புதிய பஸ் நிலையத்துக்கு வழித்தடங்கள் அறிவிப்பு

Print PDF

தினமணி              30.12.2013

தேனி புதிய பஸ் நிலையத்துக்கு வழித்தடங்கள் அறிவிப்பு

தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக திறக்கப்பட உள்ள கர்னல். பென்னிகுயிக் நினைவு பஸ் நிலையத்தில் இருந்து நகர் பகுதி வழியாக பஸ்கள் இயக்கப்பட உள்ள புதிய வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறியது:

தேனியில் இருந்து மதுரை, ராமநாதபுரம், ராஜபாளையம், நெல்லை, திண்டுக்கல், பழனி, திருச்சி, திருப்பூர், கோவை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் புறநகர் மற்றும் விரைவு பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த பஸ்கள் அன்னஞ்சி விலக்கு மற்றும் மதுரை சாலையில் இருந்து, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை வழியாக திரும்பவும் புதிய பஸ் நிலையத்தை வந்தடையும்.

மதுரை பகுதியில் இருந்து தேனி வழியாக போடி, கம்பம், குமுளி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள், மதுரை சாலையில் இருந்து தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை வழியாக தேனி புதிய பஸ் நிலையத்துக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மதுரை சாலை, பங்களாமேடு, தேனி பஸ் நிலையம் வழியாக அந்தந்த ஊர்களுக்குச் செல்லும்.

திண்டுக்கல் பகுதியில் இருந்து தேனி வழியாக போடி, கம்பம், குமுளி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள், அன்னஞ்சி விலக்கில் இருந்து தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை வழியாக தேனி புதிய பஸ் நிலையத்துக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மதுரை சாலை, பங்களாமேடு, தேனி பஸ் நிலையம் வழியாக அந்தந்த ஊர்களுக்குச் செல்லும். போடி, கம்பம், குமுளி பகுதிகளில் இருந்து தேனி வழியாக மதுரை, திண்டுக்கல் பகுதிகளுக்குச் செல்லும் புறநகர் பஸ்கள், தேனி நகர் பகுதியில் இதே வழித் தடத்தில் இயக்கப்படும்.

மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில், பெரியகுளத்தில் இருந்து தேனி மற்றும் தேனி வழியாக பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், தேனி பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை வழியாக புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லும். குமுளி, கம்பம், போடி ஆகிய பகுதிகளில் இருந்து தேனி மற்றும் தேனி வழியாக இயக்கப்படும் பஸ்கள் பழனிசெட்டிபட்டி, தேனி பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை வழியாக புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லும். ஆண்டிபட்டி, வருஷநாடு ஆகிய பகுதிகளில் இருந்து தேனிக்கு இயக்கப்படும் பஸ்கள், மதுரை சாலை, பங்களாமேடு, பழைய பஸ் நிலையம் சென்று விட்டு, அங்கிருந்து மீண்டும் பங்களாமேடு வழியாக தேனி- பெரியகுளம் புறவழிச் சாலையில் புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லும். தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இதே பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் நகர் பகுதியில் இதே வழித் தடத்தில் இயக்கப்படும்.

 நகர ப் பேருந்துகள்: தேனி நகர் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்குச் செல்வதற்கு அன்னஞ்சி விலக்கு பகுதியில் இருந்து பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், பங்களாமேடு, மதுரை சாலை, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை, புதிய பஸ் நிலையம், மீண்டும் அன்னஞ்சி விலக்கு வழித் தடத்தில் 4 நகர பேருந்துகளும், பழனிசெட்டிபட்டியில் இருந்து கம்பம் சாலை, பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, மதுரை சாலை, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை, புதிய பஸ் நிலையம் ஆகிய வழித் தடங்களில் 3 நகர பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்து சிக்னல்: புதிய பஸ் நிலைய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை முறைப்படுத்த மதுரை சாலை, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை மும்முனை சந்திப்பில் போக்குவரத்து சிக்கனல் மற்றும் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவை செயல்பட உள்ளன. இதே போல, புதிய பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் உள்ள மும்முனை சந்திப்பு, அன்னஞ்சி விலக்கு மும்முனை சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்கனல் மற்றும் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவை செயல்பட உள்ளன.

புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் இயக்கப்படுவதில் நடைமுறையில் ஏற்படும் இடர்பாடுகளை ஆய்வு செய்து தேவைக்கேற்ப ஒருவழிப்பாதை மற்றும் புதிய போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்றனர்.