Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு மேலாண்மை பணி இன்று துவங்கும்

Print PDF

தினமலர்                30.01.2014

திடக்கழிவு மேலாண்மை பணி இன்று துவங்கும்

சேலம்: சேலம் மாநகராட்சிக்கும், திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இன்று முதல் செட்டிச்சாவடியில், திடக்கழிவு மேலாண்மை பணிகள் துவங்க உள்ளது. சேலம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து, பயன்படுத்தும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்கப்பட்டது. அஞ்சர் என்ற நிறுவனத்தின் மூலம், செட்டிச்சாவடியில் மையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. இங்கு மின்சார கட்டணம், 5.70 லட்ச ரூபாய் செலுத்தாமல் நிலுவையில் இருந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால், கடந்த சில நாட்களாக இந்நிறுவனம் செயல்படவில்லை. இதனால், குப்பைகள் ஏராளமாக தேங்க துவங்கியது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் அசோகன், ஆர்.டி.ஓ., சதீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில், திடக்கழிவு மேலாண்மை திட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று மாலை வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையில், நிலுவை மின் கட்டணத்தை மாநகராட்சி செலுத்தி விட்டு, அந்நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையில் பிடித்தம் செய்து கொள்வது, என உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று காலை முதல், செட்டிச்சாவடியில், திடக்கழிவு மேலாண்மை பணிகள் துவங்கும், என அறிவிக்கப்பட்டுள்ளது.