Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆம்னி பஸ் ஸ்டாண்ட் நீலம்பூருக்குஇடம் மாறுகிறது

Print PDF

தினகரன்                31.01.2014

ஆம்னி பஸ் ஸ்டாண்ட் நீலம்பூருக்குஇடம் மாறுகிறது

கோவை, : கோவை மாநகரில் செயல்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையம் நீலம்பூருக்கு இடமாற்றம் செய்யப்படும் என மேயர் அறிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் லதா, துணை மேயர் லீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், பாதாள சாக்கடை, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் குழாய் பராமரிப்பு, சுகாதார மேம்பாடு உள்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், மேயர் செ.ம.வேலுசாமி பேசியதாவது:

கோவை காந்திபுரம் நஞ்சப்பாரோடு-சத்திரோடு சந்திப்பில் நெடுஞ்சாலைதுறை சார்பில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மேம்பாலத்தையொட்டி, சத்தி ரோட்டில் இருபுறமும் 30அடி அகலத்தில் சர்வீஸ்ரோடு அமைக்கப்பட உள்ளது.

இதற்காக, இடம் ஒதுக்கி தரும்படி நெடுஞ்சாலைதுறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சத்தி ரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து 30 அடி நிலம் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது.

எனவே, ஆம்னி பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, விளாங்குறிச்சி கிராமம் கொடிசியா வளாகத்தில் 8.44 ஏக்கர் பரப்பில் ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், அது கைவிடப்பட்டு விட்டது. நீலாம்பூர் கிராமத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமாக 10.38 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்துக்கு ஆம்னி பஸ் நிலையம் இடமாற்றம் செய்யப்படும்.

மாநகரில் பல்வேறு இடங்களில் கலப்பட டீத்தூள் விற்கப்படுவதாக புகார்வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ரெய்டு நடத்தி, பறிமுதல் செய்யப்படும். மாநகரில் உள்ள பல்வேறு குளக்கரையோரம் மற்றும் சங்கனூர் கால்வாய் பகுதிகளில் அதிகளவு ஆக்கிரமிப்பு குடிசை உருவாகிக்கொண்டே போகிறது. இவை அனைத்தும் காலி செய்யப்படும். இவர்களுக்கு, வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் இடம் ஒதுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பேஸ்-1, 2 பணி நிறைவடைந்து விட்டது.

இதில், 30 கோடி ரூபாய் மீதி உள்ளது. இந்த பணத்தில் கணபதி பகுதியில் பேஸ்-3 பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளப்படும். மாநகரில் 100 வார்டுகளிலும் ஆக்கிரமிப்பில் உள்ள ரிசர்வ் சைட் மீட்கப்பட்டு, அனைத்து தரப்பினரும் தெரிந்துகொள்ளும் வகையில் மாநகராட்சி வெப்சைட்டில் வெளியிடப்படும். மாநகரில், 40 மைக்ரான் தடிமண் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோவையில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள், தங்களது குடோன்களில் பதுக்கிவைத்து விற்பனை செய்துவருகிறார்கள். இவை அதிரடியாக பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.

இருமுறை கைவிடப்பட்டது

கோவை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சத்தி ரோடு ஆம்னி பஸ் நிலையம், உக்கடம் லாரிப்பேட்டை ஆகியவற்றை புறநகருக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் தலா இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆம்னி பஸ் நிலையத்தை கொடிசியா வளாகத்திற்கும், லாரிப்பேட்டையை மதுக்கரைக்கும் இடமாற்றம் செய்யலாம் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுக்காத காரணத்தால் இரண்டு திட்டங்களும் நிறைவேறவில்லை.

தற்போது, மாநகராட்சி கூட்டத்தில் மூன்றாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆம்னி பஸ் நிலையம் நீலாம்பூருக்கு இடமாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறையாவது நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

நஞ்சப்பா ரோடு சந்தை காலியாகிறது

சத்தி ரோடு ஆம்னி பஸ் நிலையம் வளாகத்தில் சர்வீஸ் ரோடு பணிக்காக 30 அடி விட்டுக்கொடுத்தது போக மீதமுள்ள இடத்தில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என திமுக குழு தலைவர் நந்தகுமார் கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசுகையில், நஞ்சப்பா ரோட்டில், வாரச்சந்தை என ஞாயிற்றுகிழமை மட்டும் துவக்கப்பட்ட கடைகள் தற்போது நிரந்தரமாக அமைந்துவிட்டன. இது, போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே, இந்த கடைகளை ஆம்னி பஸ் நிலைய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என்றார். இதை, அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய மேயர் உத்தரவிட்டார்.

புற்றுநோய் உருவாக்கும் கலப்பட டீத்தூள்


கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி பேசுகையில், ‘‘மாநகரில் பல்வேறு டீக்கடை மற்றும் ஓட்டல்களில் 100 சதவீதம் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுகிறது. புளியங்கொட்டை, கெமிக்கல், ஏற்கனவே பயன்படுத்திய சக்கை டீத்தூள் கலந்து விற்கப்படுகிறது.

சாதாரண டீத்தூள் கிலோ 400 ரூபாய் என்றால், கலப்பட டீத்தூள் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், பெரும்பாலான வியாபாரிகள் இவற்றையை வாங்குகின்றனர். இது, வயிற்று உபாதையை உருவாக்குவதுடன், புற்றுநோயையும் வரவழைக்கிறது. எனவே, இவற்றை அடியோடு தடுக்க வேண்டும். புட்டுவிக்கி, உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் பணியை விரைவில் துவக்க வேண்டும்‘‘ என்றார். இதற்கு பதிலளித்த மேயர், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கலப்பட டீத்தூள் ரெய்டு நடத்தப்படும் என்றார்.