Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துணை கமிஷனருக்கு கமிஷனர் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்

Print PDF

தினமலர்             04.02.2014

துணை கமிஷனருக்கு கமிஷனர் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்

மதுரை: மாநகராட்சி துணை கமிஷனர் பொறுப்பிற்கு, அனைத்து அதிகாரங்களையும் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் கமிஷனர் கிரண் குராலா.

மதுரை, மாநகராட்சியில் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள துணை கமிஷனர்கள் அனைவருமே, சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஆனாலும், அவர்களுக்கான அதிகாரத்தை இதுவரை இருந்த கமிஷனர்கள் வழங்கவில்லை. மாறாக, வருவாய் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க மட்டுமே, துணை கமிஷனர்களை பயன்படுத்தினர்.

முன்பு, நந்தகோபால் கமிஷனராக இருந்த போது, துணை கமிஷனராக இருந்த சாம்பவி, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போது, 'அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை,' எனக்கூறி, நோட்டீஸ் அனுப்பும் அளவிற்கு, 'டார்ச்சரை' அனுபவித்தார். இதுதான், அனைத்து மாநகராட்சிகளிலும் இருக்கும் 'எழுதப்படாத' நடைமுறை.தற்போது மதுரை துணை கமிஷனராக உள்ள லீலாவின் அதிரடி செயல்பாடுகள், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், கவுன்சில் கூட்டத்தில் நேருக்கு நேர் அவருடன் விவாதம் செய்து, நெருக்கடி அளித்து வருகின்றனர். தவிர, கமிஷனர் கிரண் குராலாவிற்கு, மாநகராட்சியின் உண்மை நிலையை தெரிவித்து, தவறுகளுக்கு தடுப்புகள் அமைத்த வகையிலும், துணை கமிஷனர் மீதான கோபம், பலருக்கு.

இந்நிலையில்தான், கமிஷனர் கிரண் குராலா, நகராட்சிகளின் நிர்வாகத்தின் சட்டப் பிரிவு 18ன் கீழ், அனைத்து பொறுப்புகளையும், துணை கமிஷனருக்கு வழங்கியதோடு, அதை உடனே நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, பொது நிர்வாகம், சட்டம், கல்வி, மாமன்ற பிரிவு, தகவல் மையம், கம்யூட்டர் பிரிவு, பொதுப்பிரிவு, மத்திய வருவாய், நகர்நலம், பொறியாளர் பிரிவுகள் மற்றும் அதன் தலைமை அதிகாரிகள், துணை கமிஷனரின் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் இனி செயல்படுவர்.

அனைத்து ஆய்வுகள், கோப்புகள், அனுமதி, பரிந்துரை என, மொத்தம் 25 அதிகாரங்களை துணைகமிஷனருக்கு வழங்கியுள்ளார். உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கமிஷனரின் இந்த பெருந்தன்மை, பிற மாநகராட்சிகளுக்கு, மதுரையை முன்னுதாரணமாக்கியதுடன், இதுநாள் வரை, துணை கமிஷனரை 'கட்டம்' கட்டி வந்த பிற துறையினர், இனி அவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டும்.