Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீசு

Print PDF

தினத்தந்தி            05.02.2014

விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீசு

விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது என்று திட்டக்குழும உதவி இயக்குனர் ஜி.ஈசுவரன் கூறினார்.

சங்க கூட்டம்

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சங்க துணை தலைவர் டி.ஆர்.தமிழரசு வரவேற்றுப் பேசினார்.

தூத்துக்குடி உள்ளுர் திட்டக் குழும உதவி இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர் (பொறுப்பு) ஜி.ஈசுவரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

25 ஆயிரம் சதுர அடிக்குள்ளான வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கு உரிய ஆவணங்களை முறைப்படி எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் உள்ளுர் திட்டக் குழும அலுவலகத்துக்கு சமர்ப்பித்தால், 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டு விடும். 25 ஆயிரம் சதுர அடிக்கு மேல் கட்டிடங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதி பெறுவதற்கு உள்ளுர் திட்ட குழுமத்துக்கு முறையான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், அவைகள் சரியாக இருந்தால், சென்னையில் உள்ள நகர ஊரமைப்பு ஆணையருக்கு திட்ட அனுமதி வழங்க சமர்ப்பிக்கப்படும். காலி இடங்களில் கட்டிடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி பெறுவது எளிது.

அனுமதி வழங்கப்பட்ட பின்பு கட்டிடங்களில் ஏதேனும் அனுமதிக்கு புறம்பாக இருந்தால் 50 சதவீதம் வரை விதிவிலக்கு அளிக்கப்பட்டு, உரிய கட்டணம் செலுத்தி அனுமதி பெறலாம். 50 சதவீதத்துக்கு மேல் அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்டு இருந்தால் திருத்தப்பட்ட திட்ட அனுமதி, அதற்குரிய கட்டணம் செலுத்தி சென்னையில் உள்ள நகரமைப்பு ஆணையரிடமிருந்து திட்ட அனுமதி பெற வேண்டும்.

நடவடிக்கை

திட்ட அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்படும். விதிகளை மீறிய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, இடிக்கப்பட்டதற்கு ஏற்பட்ட எல்லா செலவுகளையும் கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து திட்ட விதிமுறைகளின் படி வசூலிக்கப்படும்.

கோர்ட்டில் கட்டிட உரிமையாளர்கள் தொடந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும், திட்ட அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கலாம். மேலும் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தில் இருக்கக்கூடிய கட்டிட தளவாட சாமான்களையும் திட்டக் குழுமம் அபகரித்துக் கொள்ளும்.

மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் வீடு கட்டுவதற்கு என்று வரையறுக்கப்பட்ட இடங்களில் தொழிற்சாலை கட்ட வேண்டும் என்று கருதினால், அதற்குரிய திட்ட அனுமதி பெறுவதற்கு, உரிய ஆவணங்களுடன் உள்ளுர் திட்ட குழுமம் மூலமாக சென்னையில் உள்ள நகர ஊரமைப்பு ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் தமிழக அரசின் அரசாணையிலும் வெளியிடப்பட வேண்டும். ஆனால், இதற்கு சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். 4 ஆயிரம் சதுர அடிக்குள்ளாக கட்டிடம் கட்டுவதற்கு மாநகராட்சியிடம் இருந்து திட்ட அனுமதி பெறலாம்.

நோட்டீசு

தற்சமயம் திட்ட விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பைபாஸ் ரோட்டில் அமைந்திருக்கும் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கு முறைப்படியாக திட்ட அனுமதி பெற்று, அனுமதிக்கு புறம்பாக கட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு உள்ளூர் திட்டக்குழும உதவி இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர்(பொறுப்பு) ஜி.ஈசுவரன் கூறினார்.

கோரிக்கை

தொடர்ந்து உறுப்பினர் செயலர் ஈசுவரனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதில் உள்ளுர் திட்டக் குழும அனுமதி பெறுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படுகிறது. தேவையற்ற இடையூறுகள் ஏற்படுவதாகவும் தகவல் வருகின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், உள்ளுர் திட்டக் குழும அனுமதி பெறுவதற்கு கால நிர்ணயம் வரையறுக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எந்த விதமான இடையூறுகளும் விளைவிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.