Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொதுமக்களின் மனுக்கள் மீது மாநகராட்சி வருவாய்த்துறை எடுக்கும் நடவடிக்கை

Print PDF

தினகரன்              07.02.2014

பொதுமக்களின் மனுக்கள் மீது மாநகராட்சி வருவாய்த்துறை எடுக்கும் நடவடிக்கை

சென்னை, : மாநகராட்சி வருவாய்த்துறை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு கணினி வழி ஒப்புகை சீட்டு வழங்கிடவும், பெறப்படும் மனுக்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டும் தனியே மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளின்படி, புதிய கட்டிடத்திற்கான சொத்துவரி மதிப்பீடு, கூடுதல் கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் சொத்துவரி விதிப்பு, சிறப்பு வகை கட்டிடங்களுக்கான சொத்துவரி மதிப்பீடு, உரிமை பாத்தியம் இல்லாத நிலங்களின் மீது கட்டப்பட்ட கட்டிடத்திற்கான சொத்துவரி விதிப்பு, பெயர் மாற்றம் செய்தல், சொத்துவரி விதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து ஆட்சேபணை மனு, ஏற்கனவே விதிக்கப்பட்ட சொத்துவரி மதிப்பீடு ஆணையில் பிழை திருத்தங்கள் மேற்கொள்ளுதல், விண்ணப்பதாரரின் பெயர் விவரம் மற்றும் விண்ணப்பதாரரின் கோரிக்கை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் தொடர்பு மையத்தின் உதவியாளரால் கணினியில் பதிவு செய்யப்பட்டு, கணினியால் தானாகவே வரிசை எண் இடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு உடனே ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.

மேலும், விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒப்புகை எண், விவரம் மனுதாரரின் கைபேசிக்கு குறுந்தகவல் மூலமும் உடன் அனுப்பப்படும். ஒவ்வொரு நாளின் முடிவில் பொதுமக்கள் தொடர்பு மையத்தின் மூலம் பெறப்படும் அனைத்து மனுக்களும் மண்டல அலுவலரின் ஒப்புதலுடன் வருவாய்த்துறை பிரிவின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட கள ஆய்வாளரின் அறிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, குறிப்புரைகள் பெறப்பட்டு, கணினி வாயிலாகவே பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பதாரருக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்ட பின்னர், மனுவின் விவரமானது நிலுவையிலிருந்து தானாகவே சுழிக்கப்படும். ஒவ்வொரு நாளும் எத்தனை மனுக்கள், என்னென்ன கோரிக்கைகளுக்காக பெறப்பட்டன என்பதை உதவி வருவாய் அலுவலர், மண்டல அலுவலர், வட்டார இணை/துணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் முதன்மை செயலர்/ஆணையர் ஆகியோர் எளிதில் கணினி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

மண்டல வாரியாக பெறப்பட்ட மனுக்கள் எத்தனை, நடவடிக்கை எடுக்கப்பட்ட மனுக்கள் எத்தனை என்பன போன்றவற்றை கண்காணிக்கலாம். வார்டு வாரியாகவும் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை, நடவடிக்கை எடுக்கப்பட்ட மனுக்கள் எத்தனை என்பதையும் அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு வார்டுகளிலும் எத்தனை மனுக்கள் பெறப்பட்டன, எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டன, நிலுவையில் உள்ள மனுக்கள் விவரத்தையும் எளிதில் அறிந்து உடனுக்குடன் ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்கலாம். இத்திட்டம் முதலில் வருவாய்த்துறையில் பெறப்படும் கோரிக்கை மனுக்களை பரிசீலிக்க தொடங்கப்படுகிறது.

பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சியின் அனைத்து துறை பிரிவுகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய வசதிகளை கொண்ட மென்பொருள் பயன்பாட்டினை மேயர் சைதை துரைசாமி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கணினி மூலம் அறியும் வசதி மேயர் தொடங்கி வைத்தார்.