Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Print PDF

தினமணி             07.02.2014

குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கோடை கால குடிநீர் தேவையைச் சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனதன் விளைவாக சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் போதிய நீர் இருப்பு இல்லை. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 3,142 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது.

மேலும் நகரில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே வரும் கோடை காலத்தில் நகரில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் எனத் தெரிகிறது. இதைத் தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: நெய்வேலி, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மறுசீரமைக்கப்பட்டு கூடுதலாக 11 மில்லியன் லிட்டர் நீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பூண்டி, தாமரைப்பாக்கம், மீஞ்சூர் பகுதியில் ரூ.14 கோடியில் 250 விவசாய ஆழ்துளைக் கிணறுகளில் தினமும் 40 மில்லியன் லிட்டர் நீர் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சோழவரம், புழல் ஏரிகளின் அடிமட்ட நீர் இருப்பையும் வீணாக்காமல் பம்புசெட் மூலம் உறிஞ்சி உபயோகப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் தேவை அதிகம் உள்ள 10,245 இடங்களில் 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சேதமடைந்த 500 தொட்டிகளுக்கு பதிலாக புதிய தொட்டிகளை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் வாரியம் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.