Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விளம்பர தட்டிகள் வைக்க என்னென்ன விதிமுறைகள்?பட்டியல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Print PDF

தினமலர்              11.02.2014

விளம்பர தட்டிகள் வைக்க என்னென்ன விதிமுறைகள்?பட்டியல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி

சென்னை : சென்னையில் விளம்பர தட்டிகள் வைக்க என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மாதம் 9ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், ஒரு குழு அமைத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சீராய்வு கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டது.

இதன்படி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தலைமையில் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் சென்னையில் 2,099 விளம்பரதட்டிகள் அகற்றப்பட்டன. அரசாணைப்படி விளம்பர தட்டிகள் வைக்க வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகள்: விளம்பர தட்டிகள் வைப்போர், 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியருக்கு 'படிவம் 1' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • அந்தந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • நிலத்தை பொறுத்து தனியாரிடமோ, அரசு உதவி செயற்பொறியாளர்களிடமோ தடையில்லா சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  • பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என, காவல்துறையிடமும், விளம்பர தட்டிகள் வைக்கும் இடத்தில் வரைபடம் ஒன்றையும் படிவத்துடன் இணைக்க வேண்டும்.
  • விண்ணப்பம் கொடுத்த நாளில் இருந்து ஆறு நாட்களுக்கு மிகாமல் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்குவார்.
  • விளம்பரத்தின் கீழ்பகுதியில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் எண், அனுமதி காலம், விளம்பர தட்டிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஒரு அங்குல உயரத்திற்கு குறையாமல் அச்சிட வேண்டும்.
  • ஒரு விளம்பர தட்டிக்கு திரும்ப வழங்கப்படாத தொகை 200 ரூபாயும், திரும்ப வழங்கும் தொகை 50 ரூபாயும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி கருவூலத்தில் செலுத்தி, படிவத்துடன் ரசீதை இணைக்க வேண்டும்.
  • 10 அடி முதல் 20 அடி வரை அகலம் கொண்ட சாலையில் 4 அடி உயரம் 2.5 அடி அகலம் கொண்டதாகவும், அதிகபட்ச அளவாக 100 அடி அகலத்திற்கு மேல் உள்ள சாலைகளில் 15 அடி உயரம், 25 அடி அகலம் கொண்டதாகவும் விளம்பர பலகைகள் வைக்கலாம்.
  • சாலை ஓரங்கள், நடைபாதைகளில் விளம்பர வைக்க அனுமதி இருந்தால், சாலை மத்தியில் அனுமதி கிடையாது. சாலை மத்தியில் அனுமதி இருந்தால், நடைபாதை, சாலை ஓரங்களில் அனுமதி கிடையாது.
  • கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், சாலை, தெரு முனை சந்திப்புகள், போக்குவரத்து தீவு உட்பட 100 மீட்டர் நீளம் கொண்ட பகுதிகள், நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள், சுற்றுலா தலங்கள், உருவ சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் விளம்பர தட்டிகளுக்கு அனுமதி கிடையாது.
  • அனுமதி காலம் முடிந்ததும் விளம்பர தட்டிகள் முறையாக அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.