Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 221 கோடி குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்

Print PDF

தினமணி             13.02.2014

ரூ. 221 கோடி குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்

 திருச்சி மாநகரில் அனைவரும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் ரூ. 221 கோடியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.

 திருச்சி காஜாமலை அரசு அலுவலர் குடியிருப்புப் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன், மாநகர மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 3 பேர் காணொலிக் காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 திருச்சி மேற்குத் தொகுதி எம்எல்ஏ மு. பரஞ்சோதி, அரியமங்கலம் கோட்டத் தலைவர் ஜெ. சீனிவாசன், பொன்மலை கோட்டத் தலைவர் என். மனோகரன், கோ-அபிசேகபுரம் கோட்டத் தலைவர் ஆர். ஞானசேகர், சிரீரங்கம் கோட்டத் தலைவர் எம். லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதில் பொதுமக்கள் சார்பில் பேசிய 52ஆவது வார்டைச் சேர்ந்த இந்திராணி, வாரத்துக்கு ஒரு முறை லாரியில் தண்ணீர் கிடைத்து வந்த நிலை, தற்போது இந்தப் புதிய திட்டத்தால் மாறியிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

கலை அறிவியல் கல்லூரிக் கட்டடம்:

 சிறீரங்கத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு- கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடம்  நவலூர் குட்டப்பட்டிலுள்ள வேளாண் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 5.40 கோடியில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தையும் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சிமூலம் திறந்து வைத்தார்.

 கடந்த 2011-ல் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கல்லூரியின் வகுப்புகள் இதுவரை இனாம்குளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

சேதுராப்பட்டியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்:

 சிறீரங்கம் தொகுதியில் புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்படும் என 2011 பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி, திருச்சி சேதுராப்பட்டியில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் ரூ. 128 கோடியில் 56.37 ஏக்கரில் இந்த நிறுவனம் அமையவுள்ளது.

 இந்த நிலையில் தாற்காலிகமாக அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்நிறுவனத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

 கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மென்பொருள் பொறியியல் மற்றும் தரவு தள அமைப்புத் துறையில் முதுநிலை பட்டப் படிப்பு தலா 20 மாணவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. வரும் ஆண்டுகளில் இளநிலை பட்டப் படிப்புகளும் தொடங்கப்படவுள்ளன.