Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொத்து வரி நிலுவை: அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு

Print PDF
தினமணி         10.10.2014

சொத்து வரி நிலுவை: அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு

சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் வீடு, சொத்து உள்ளவர்களிடம் சொத்து வரியை சென்னை மாநகராட்சி வசூலிக்கிறது. மாநகராட்சிக்குக் கிடைக்கும் வருவாயில் கணிசமான அளவுக்குச் சொத்து வரியின் பங்கு உள்ளது. நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சுமார் ரூ.276 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரியை பொதுமக்கள் சரிவரச் செலுத்துவதில்லை என்ற புகார் உள்ளது. மாநகராட்சிப் பணியாளர்கள் சொத்து வரியைச் செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் அவை முழுமையாகப் பலன் தராத நிலை உள்ளது.

மாநகராட்சியின் கடும் நடவடிக்கை என்பது, வாசலில் போஸ்டர் ஒட்டுவது, குப்பைத் தொட்டியை தள்ளி வைப்பது என்ற அளவிலேயே உள்ளது. மற்ற மாநகராட்சிகளில் உள்ளது போல அபராதம் விதிக்கும் நடைமுறை சென்னையில் இல்லை.

இந்த நிலையில், சென்னையிலும் சொத்து வரி செலுத்தாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க தமிழக அரசிடம் மாநகராட்சி அனுமதி கோரியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

இப்போது சொத்து வரியை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல வசதிகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். ஆனாலும், சொத்து வரி செலுத்தும் ஆர்வம் குறைவாகவே உள்ளது.

இதற்குக் காரணம், கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே ஆகும். நாட்டில் உள்ள பிற மாநகராட்சிகளில் சொத்து வரி செலுத்தாதோரிடம் இருந்து 10 முதல் 15 சதவீதம் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலும் இது போன்ற கடுமையான நடவடிக்கை தேவை என்று கருதப்படுகிறது. சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்களிடம் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரிக்கு அபராதம் வசூலிக்க வேண்டுமென்றால், தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும். அதற்காக அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.

இதற்கான சட்டத் திருத்தத்தை அரசு மேற்கொண்டால், சென்னையிலும் அபராதம் வசூலிக்கப்படும். இப்போது உத்தேசிக்கப்பட்டுள்ள அபராதம் மிகக் குறைவு. ஆனாலும் இந்த நடவடிக்கை ஓரளவு வரி வசூலை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியில் சுமார் 14 ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.