Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் மேலும் 2 நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் திறப்பு

Print PDF
தினமணி     11.11.2014  

சென்னையில் மேலும் 2 நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் திறப்பு

சென்னையில் கூடுதலாக இரண்டு நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நகர்ப்புறங்களில் பொதுமக்கள் வருவாய்த் துறை, சமூக நலத் துறை, சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பெறவும், மின் கட்டணத்தைச் செலுத்தவும் வசதியாக எழும்பூர், மாம்பலம், மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், தண்டையார்பேட்டை, அமைந்தகரை, கிண்டி, வேளச்சேரி ஆகிய இடங்களிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் முதல் கட்டமாக 9 நகர்ப்புற அரசு பொது இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன.

இந்த நகர்புற பொது இ-சேவை மையங்களின் மூலமாக இதுவரை 23,620 ஜாதிச் சான்றிதழ்கள், 33,759 வருமானச் சான்றிதழ்கள், 1,613 இருப்பிடச் சான்றிதழ்கள், கணவனால் கைவிடப்பட்டோர் 7 பேருக்கு சான்றிதழ்கள், 2,935 முதல் பட்டதாரிச் சான்றிதழ்கள் என மொத்தம் 61,934 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அயனாவரம் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் மேலும் இரண்டு நகர்ப்புற பொது இ-சேவை மையங்களை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.