Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ.82 கோடியில் பாதாள சாக்கடை புனரமைப்பு

Print PDF

 தினமணி         23.12.2014

மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ.82 கோடியில் பாதாள சாக்கடை புனரமைப்பு

மதுரை மாநகராட்சியில், முந்தைய 72 வார்டு பகுதிகளில் விடுபட்ட 8 பகுதிகளில் ரூ.82.72 கோடியில் பாதாள சாக்கடை அமைத்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மணிநகரம் பாதாள மாரியம்மன் கோயில் அருகில் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சியில் முந்தைய 72 வார்டு பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் கீழ் 5 திட்டங்கள் ஒப்புதல் செய்யப்பட்டு, வைகை 2-வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மீதமுள்ள பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளுக்கு திட்டமிட்ட சுமார் ரூ.600 கோடியையும் தாண்டி பலமடங்கு நிதி செலவிடப்பட்டும், பணிகள் முடியாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. இத்திட்டத்தை மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றாததால், அந்நிறுவனத்துக்கான வேலை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் புனரமைக்கும் பணி 9 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ரூ.82.72 கோடிக்கான திட்டம் புதிதாக தயாரிக்கப்பட்டு, வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக, மேயர் விவி ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இத்திட்டப்படி சந்தைப்பேட்டை, தவிட்டுச்சந்தை, பெரியார் பேருந்து நிலையம், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, தமிழ்ச்சங்கம் சாலை, தானப்பமுதலி தெரு, தைக்கால் தெரு, ஆரப்பாளையம் சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு பகுதிகளில் பாதாள சாக்கடை புனரமைத்தல் மற்றும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்தல் பணி நடைபெறும்.

பழைய பாதாள சாக்கடை பணியில் புனரமைப்பு பணி 100 கிமீ தொலைவுக்கும், தெருக்களில் 450 கிமீ தொலைவுக்கும் இணைப்பு பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் 12 மாதங்களில் முடிக்கப்படும். இதன் மூலம் இப்பகுதிகளில் கழிவுநீர் கசிவு முற்றிலும் தடுக்கப்படும், என்றார்.

முன்னதாக நடைபெற்ற பாதாள சாக்கடை புனரமைப்பு பூமி பூஜை விழாவில், ஆணையாளர் சி.கதிரவன், சுந்தர்ராஜன், எம்எல்ஏ, உதவி ஆணையாளர் அ.தேவதாஸ், நகரப்பொறியாளர் ஆ.மதுரம், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், செயற்பொறியாளர்கள் அரசு, ராஜேந்திரன், உதவிப் பொறியாளர்கள் தேவராஜன், சொக்கலிங்கம், பிஆர்ஓ சித்திரவேல், வேலைக்குழுத் தலைவர் கண்ணகி பாஸ்கரன், மாமன்ற உறுப்பினர்கள் முருகேஸ்வரி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.