Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்கிறது

Print PDF

தினத்தந்தி                27.03.2017

தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்கிறது


தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்கிறது
தாம்பரம், பல்லாவரம், ஆவடி நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்று தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகங்கள் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளன.
சென்னை, 

தமிழ்நாட்டில், தலைநகர் சென்னை உள்பட மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. இதில், சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெருநகர சென்னை மாநகராட்சி அமைந்துள்ளது.

தற்போது, சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம், பல்லாவரம், ஆவடி ஆகிய 3 நகராட்சிகளையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்று அந்தந்த நகராட்சி நிர்வாகங்கள், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளன. அதாவது, தாம்பரம், பல்லாவரம், ஆவடி ஆகிய நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருந்து, அதே துறையின் முதன்மை செயலாளருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இணையும் பகுதிகள் எவை?

ஆவடி மாநகராட்சியில், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளையும், திருநின்றவூர் நகர பஞ்சாயத்தையும், நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுபாக்கம் உள்பட 11 கிராம பஞ்சாயத்துகளையும் இணைக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி உருவானால், 80 முதல் 100 வார்டுகள் இடம் பெறும். அதன் பரப்பளவும் 148 சதுர கிலோ மீட்டராக விரிவடையும். மக்கள்தொகையும் 6 லட்சத்து 12 ஆயிரம் என்ற அளவில் இருப்பார்கள்.

இதேபோல், பல்லாவரம் மாநகராட்சியில், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளையும், கவுல் பஜார் கிராம பஞ்சாயத்தையும் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தாம்பரம் மாநகராட்சியில், தாம்பரம், செம்பாக்கம் நகராட்சிகளையும், பெருங்களத்தூர், பீர்க்கண் காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம் ஆகிய 4 நகர பஞ்சாயத்துகளையும், மேடவாக் கம், வேங்கைவாசல், முடிச்சூர் உள்பட 7 கிராம பஞ்சாயத்துகளையும் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது, அரசு அதிக நிதியை ஒதுக்கும். பாதாள சாக்கடை, குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் - திடக்கழிவு மேலாண்மை வசதி, போக்குவரத்து வசதி போன்றவை செய்துகொடுக்கப்படும். மாநகராட்சி பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் உருவாக்கப்படும். ஊழியர்கள் அதிகம் நியமிக்கப்படுவார்கள். கட்டுமானங்கள் முறைப்படுத்தப்படும். நிலத்தின் மதிப்பும் அதிகரிக்கும்.

தாம்பரம், பல்லாவரம், ஆவடி நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து வரப்பெற்றுள்ள பரிந்துரை கடிதங்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.
Last Updated on Monday, 27 March 2017 09:14