Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடியில் ரூ. 10 கோடியில் ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கும் விழா

Print PDF

தினமலர் 02.03.2010

தூத்துக்குடியில் ரூ. 10 கோடியில் ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 10 கோடி ரூபாயிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்னும் 10 நாளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு மட்டும் இரண்டரை கோடி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக கலெக்டரிடம் மனு அளித்தனர்.நிகழ்ச்சியின் போது சுனாமி நிவாரண திட்டத்தின் கீழ் அரசு சார்பில் இலவசமாக கட்டப்பட்ட 49 பேருக்கு வீட்டின் சாவியை கலெக்டர் வழங்கினார்.

மீனவர் நலவாரியத்தின் கீழ் திருமணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு நிதி உதவிகள், மீனவர் விபத்து காப்புறுதி நிவாரணம் மொத்தம் 8 பேருக்கு சுமார் மூன்றரை லட்ச ரூபாய் வழங்கினார். பின்னர் கலெக்டர் கூறியதாவது;சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. 4 பேக்கேஜ்களாக இதற்கான பணிகள் நடந்தது. மொத்தம் மாவட்டத்தில் 798 வீடுகள் கட்டும் பணி நடந்தது. ஒரு வீட்டிற்கு 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் அரசு வழங்கியது. இதில் இதுவரை 681 பேருக்கு வீடுகளின் சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டன. அதில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இன்னும் 117 வீடுகள் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இம் மாத இறுதிக்குள் அவர்களுக்கு வீட்டின் சாவி ஒப்படைக்கப்படும்.தூத்துக்குடி மாவட்டத்தில் 2009-2010ம் ஆண்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் பெரும்பாலும் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. இந்த நிதியாண்டு முடிவுக்கு வருவதால் இறுதியாக பாக்கியுள்ளவர்கள் அனைவருக்கும் நலத்திட்டங்கள் வரும் 15ம் தேதியை ஒட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடியில் வைத்து வழங்கப்படுகிறது. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்டங்களை வழங்குகிறார்.

மொத்தம் சுமார் 10 கோடிக்கு மேல் அன்று நலத்திட்டம் சில துறைகள் சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுழல்நிதி, பொருளாதார கடன், நேரடி கடன்கள், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் மட்டும் கர்ப்பிணி பெண்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் உதவித் தொகை, மூன்று ஆண்டுகள் வரை குடியிருப்போருக்கு பட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நலத்திட்டம் மட்டும் பத்து கோடி ரூபாயிற்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இந்த நிதியாண்டின் நலத்திட்டங்கள் முழுவதும் முடிவுக்கு வந்துவிடும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.டி.ஆர்.ஓ துரை.ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி வீரனன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமா, மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சுசீலா, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கலைச்செல்வன், வேளாண்மை துணை இயக்குநர் தனசிங்டேவிட், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 02 March 2010 06:54