Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க ஒரு மணி நேரம் விளக்குகளை அணைக்க மக்களுக்கு அழைப்பு

Print PDF

தினமணி 27.03.2010

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க ஒரு மணி நேரம் விளக்குகளை அணைக்க மக்களுக்கு அழைப்பு

சென்னை, மார்ச் 26: பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் ஒரு மணி நேரம் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைக்க மின்சார வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

"டபிள்யு.டபிள்யு.எப். } இந்தியா' என்ற அரசு சாரா நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை வீடுகளில் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைக்குமாறு, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய தலைவர் சி.பி. சிங், எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் டேவிதார் ஆகியோர் கூறியது:

தமிழகத்தில் 2004}ம் ஆண்டு மார்ச் மாதம் 3,800 கோடி மெகா வாட்டாக இருந்த மின் பயன்பாடு, 2009}ம் ஆண்டு மார்ச்சில் 5,300 கோடி மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.

தேவையைக் கருத்தில் கொண்டு, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், சனிக்கிழமை மேற்கொள்ளவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்ற ஒரு மணி நேரம் தேவையற்ற விளக்குகளை அணைக்க முன்வரவேண்டும். இதன் மூலம் 60 மெகா வாட் மின்சாரம் சேமிக்கப்படும்.

தமிழகத்தில் இப்போது 1,100 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்படுவது உண்மைதான்.

இப்போது நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு, கோடை காலத்தில் உயர்த்தப்படாது. இதே அளவில்தான் மின்வெட்டு இருக்கும். மே 15}ம் தேதிக்குப் பின் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கிவிடும். அதன்பிறகு மின் பற்றாக்குறை ஒரளவு குறையும்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி: பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் வனத்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய வன கொள்கையின் படி நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப் பகுதி இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்ட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் மூலம், கூடுதலாக 24 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வனப் பரப்பு அதிகரித்துள்ளது.

இதன்படி இப்போது தமிழகத்தில் 22 சதவீத நிலப்பரப்பு, வனப் பகுதியாக உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்த, 2010}11 நிதியாண்டில் ரூ. 25 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது என்றார்.

Last Updated on Saturday, 27 March 2010 07:55