Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

தமிழகம் முழுவதும் பிளாட்பாரவாசிகளின் விவரம் புகைப்படத்துடன் சேகரிப்பு

Print PDF

தினகரன்                  01.11.2010

தமிழகம் முழுவதும் பிளாட்பாரவாசிகளின் விவரம் புகைப்படத்துடன் சேகரிப்பு

வேலூர், நவ.1: தமிழகம் முழுவதும் பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள் குறித்த தனிநபர் விவரங்கள் புகைப்படத்துடன் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் பிளாட்பாரத்தில் தனியாகவும், குடும்பங்களாவும் பலர் வசிக்கின்றனர். மழை, குளிர் காலங்களில் எந்த பாதுகாப்பும் இன்றி தவிக்கும் இவர்களுக்கு வாழ்வுரிமை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தந்த மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி மாநகராட்சி மற்றும் நகராட்சி பிளாட்பாரங்களில் வசிப்பவர்களை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

மேலும், இவர்கள் தங்குவதற்காக மாநகராட்சி, நகராட்சி சார்பில் விடுதிகள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அங்கு ஒவ்வொருவருக்கும் உடைகள், பொருட்கள் வைத்துக் கொள்ள தனி லாக்கர், குளியலறை, கழிவறை வசதி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பிளாட்பாரங்களில் வசிப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஜூலை மாதம் நடத்தி முடிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 115 பேர் பிளாட்பாரங்களில் வசிப்பது தெரிய வந்தது. இவர்களுக்காக இன்பென்டரி சாலையில் ரூ.9.80 லட்சத்தில் தங்கும் விடுதி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பிளாட்பாரத்தில் வசிப்பவர்களின் தனி நபர் விவரங்கள் புகைப்படத்துடன் சேகரித்து அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 25 கேள்விகள் அடங்கிய பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

அதில் தனி நபரின் பெயர், வயது, பாலினம், எந்தப்பகுதி பிளாட்பாரத்தில் தங்குகிறார், திருமணம் ஆனவரா, தங்கும் விடுதியில் சலுகை கட்டணம் செலுத்த முடியுமா?, தொழில், வாக்காளர் அட்டை, மருத்துவ காப்பீடு என ஏதாவது அடையாள அட்டை வைத்துள்ளாரா? தங்கும் விடுதியில் வேறு என்ன வசதி வேண்டும் என்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலுடன் வேலூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் முருகன், பாலமுருகன், லூர்துசாமி, சிவக்குமார் உள்ளிட்டோர் விவரங்களை சேகரிக்கும் பணியை தொடங்கினர். ‘பிளாட்பாரத்தில் தங்கி உள்ளவர்களின் விவரங்கள் புகைப்படத்துடன் சேகரிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில்தான் அதிகபட்சமாக 115 பேர் பிளாட்பாரத்தில் தங்கியுள்ளனர். இவர்களின் விவரங்கள் புகைப்படத்துடன் ஓரிரு நாளில் தயார் செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

 

111ரோட்டோரத்தில் தூங்குவோர் தங்க நான்கு விடுதி : திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர்               31.10.2010

111ரோட்டோரத்தில் தூங்குவோர் தங்க  நான்கு விடுதி : திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை

திருப்பூர் : திருப்பூரில் ரோட்டோரங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தூங்குபவர்கள், இரவில் தங்கிக்கொள்ள, மாநகராட்சி சார்பில் நான்கு இடங்களில் விடுதிகள் கட்டப்படுகின்றன.

திருப்பூர் மாநகராட்சி சார்பில், ரோட்டோரங்களில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் நபர்கள் குறித்த ஆய்வு, கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 250 பேர் ரோட்டோர வாசிகளாக வாழ்வது தெரியவந்துள்ளது. குடும்பத்தில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்களும், ஆதரவற்ற முதியவர்களும், உடல் ஊனமுற்றவர்களும், ரோட்டோரங்களில் வாழ்கின்றனர்.

இன்னும் சிலர், மனைவி, குழந்தைகள் என குடும்பங்களாக ரோட்டோரங்களில் சமைத்து, இரவுகளில் அங்கேயே படுத்து தூங்குகின்றனர். பகல் நேரங்களில் பிச்சை எடுப்பது, குப்பை காகிதங்கள் பொறுக்குவது போன்ற வேலை செய்யும் இவர்களுக்கு, தங்கிக்கொள்ள வீடுகள் இல்லை; கழிப்பிட வசதி இல்லை; சுகாதாரமான வாழ்க்கையும் இல்லை.

இவர்களது சுகாதாரமற்ற வாழ்க்கையால் மாநகரின் சுகாதாரம் கெடுகிறது; பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாப் பகுதிகள் மற்றும் வர்த்தக பகுதிகளில் இரவில் படுத்துக் கொள்ளும் இவர்கள், அப்பகுதிகளிலேயே சிறுநீர் கழித்தல், காலைக்கடன் கழித்தல், குளிப்பதில் ஈடுபடுகின்றனர். வீடு இல்லாமல், ரோட்டோரங்களில் வாழ்பவர்களுக்கு ஆதரவு தரும் வகையில், இரவில் அவர்கள் தங்கிக் கொள்ள வசதியாக, திருப்பூரில் நான்கு இடங்களில், வீடு இல்லாதோர் தங்கிக் கொள்ளும் விடுதிகள் கட்டப்படுகின்றன.

ஒரு விடுதிக்கு 15 பெண்கள், 15 ஆண்கள் என 30 பேர் தங்கிக் கொள்ளும் வகையில், கழிப்பிடம், குளியலறை வசதிகளுடன் இவ்விடுதிகள் கட்டப்படுகின்றன. பெண்கள், ஆண்களுக்கு என தனியிட வசதிகள், பொருட்களை வைத்துக் கொள்ள, அலமாரியுடன் இவ்விடுதிகள் அமைக்கப்படுகின்றன. மாநகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியோரை கொண்ட குழு மூலம், இவ்விடுதிகளின் செயல்பாடு கண்காணிப்பில் இருக்கும். பராமரிப்பு செலவு குறித்து மத்திய அரசிடம் உதவி பெற மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி கூறியதாவது: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்பகுதி, கருவம்பாளையம் சாயப்பட்டறை பகுதி, புது பஸ் ஸ்டாண்ட் உழவர் சந்தை பின்புறம், பி.என்., ரோடு குமரன் பூங்கா எதிரில் என நான்கு இடங்களில், இவ்விடுதிகள் அமைக்கப்படுகின்றன. பிச்சைக்காரர்கள், உடல் ஊனமுற்றவர்கள், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டு ஆதரவற்று இருப்பவர்கள், முதியவர்கள் என பலரும், ரோட்டோரங்களிலும், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளிலும் இரவில் படுத்து தூங்குகின்றனர்.

அவர்களது வாழ்க்கை சுகாதாரமானதாக இருப்பதில்லை. கழிப்பிடம், குளியலறை வசதிகளுடன், அவர்களுக்காக இந்த இரவு நேர தங்கும் விடுதிகள் அமைக்கப்படுகிறது. இதில், தங்கிக் கொள்ள தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அவர்கள் மட்டுமே அவ்விடுதிகளில் தங்கிக் கொள்வர். அதற்காக மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இவ்விடுதிகளை பராமரிக்க தனியார் அமைப்புகள் முன்வர வேண்டும். பகலில் அவர்கள் என்ன வேலையோ செய்து கொள்ளலாம். இரவில், இவ்விடுதிகளில் சென்று தங்கிக் கொள்ள வேண்டும். இதனால், பஸ் ஸ்டாண்டுகள், ரோட்டோரங்களில் படுத்து தூங்கும் மனிதர்களின் அவல நிலை மாறும். இவ்வாறு, கமிஷனர் ஜெயலட்சுமி கூறினார்.

Last Updated on Monday, 01 November 2010 07:37
 

மதுரை சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன்              27.10.2010

மதுரை சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு

மதுரை, அக். 27: சென்னையை போல் மதுரையிலும் சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

முக்கிய நகரங்களில் சாலையோர வியாபாரிகள் வெயில், மழையில் சிக்கி அவதிப்படுகின்றனர். நடைபாதைகளில் கடைகள் அமைவதால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. இதன் அடிப்படையில் சென்னை, கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் தனி இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மதுரையில் நேதாஜி சாலை, காமராஜர் சாலை, வெளிவீதி, மாசி வீதி, மாரட் வீதி உள்பட பல்வேறு முக்கிய வீதிகளில் சாலையோர வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர். இவர்களின் பிரநிதிகளுடன் மதுரை காங்கிரஸ் எம்.எல்.. ராஜேந்திரன் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் செபாஸ்டினை சந்தித்து கோரினார்.

இதுகுறித்து ராஜேந்திரன் எம்எல்ஏ கூறுகையில், ‘‘வெளிநாட்டு பொருள் விற்கும் வியாபாரிகளுக்கு மாநகராட்சி தனி இடம் ஒதுக்கி இருப்பது போல், சாலையோர வியாபாரிகளும் தனி இடம் ஒதுக்குபடி கோரினோம். வைகை ஆற்றில் யானைக்கல் மேம்பாலத்தின் கீழ் பகுதி (கல்பாலம்) புதிதாக கட்டியுள்ள செல்லூர் மேம்பாலத்தின் கீழ் பகுதி, ரேஸ்கோர்ஸ் விளையாட்டு திடலின் வெளி பகுதி உள்பட 10 இடங்களை குறிப்பிட்டு கோரி உள்ளோம். எந்த இடத்தை ஒதுக்குவது என்பது குறித்து நவம்பர் 2ம் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என ஆணையாளர் உறுதி அளித்துள்ளார்" என்றார்.

 


Page 7 of 18