Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உள்ளாட்சி இடைத் தேர்தல் : வாக்களிக்கத் தேவையான அடையாளச் சான்று

Print PDF

தினமணி     16.09.2014

உள்ளாட்சி இடைத் தேர்தல் : வாக்களிக்கத் தேவையான அடையாளச் சான்று

தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டு வர வேண்டிய அடையாள ஆவணங்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 530 பதவியிடங்களுக்க வரும் வியாழக்கிழமை 18ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்புகள் வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது.

இந்த பூத் ஸ்லிப்புகள் இருந்தால், வாக்காளர்கள் வேறு எந்த ஆவணமும் இன்றி வாக்களிக்கலாம். பூத் சிலிப்புகள் இல்லாதபட்சத்தில்

1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை.

2. பாஸ்போர்ட்

3. வாகன ஓட்டுநர் உரிமம்.

4. மத்திய-மாநில அரசுகள்-பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டைகள்.

5. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படம் ஒட்டப்பட்ட சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

6. வருமான வரிக் கணக்கு அட்டை (பான் அட்டை)

7. ஆதார் அடையாள அட்டை.

8. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் அட்டை.

9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை.

10. மத்திய தொழிலாளர் நலத் துறை வழங்கியுள்ள சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஸ்மார்ட் கார்டு.

11. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

12. தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழங்கப்படும் வாக்குச்சாவடி சீட்டு.

13. வங்கிக் கணக்குப் புத்தகம்

14. மாற்றுத் திறனாளிகள் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மாற்றுத் திறனாளிகள் சான்று.

மேற்கண்ட ஆவணங்களில் வாக்காளரின் புகைப்படம் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். வாக்காளரின் புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் அடையாள அட்டையாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஆந்திரம், தில்லி மாநகராட்சி அதிகாரிகள்

Print PDF

தினமணி        12.09.2014  

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஆந்திரம், தில்லி மாநகராட்சி அதிகாரிகள் 

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்து, அங்கு வழங்கப்பட்ட மதிய உணவை ருசி பார்த்த ஆந்திர மாநிலம் அனந்தப்பூர், தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள்.

ஆந்திர மாநிலம், தில்லி மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாநகராட்சி ஆணையர் ஜே.ஸ்ரீனிவாசலு, துணை செயற்பொறியாளர் எஸ்.சதீஷ் சந்தர் உள்ளிட்ட குழுவினர், தெற்கு தில்லி மாநகராட்சி பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் யோகேந்திரபாபு, துணை கணக்குக் கட்டுப்பாட்டாளர் எஸ்.பி.பிள்ளை, செயற்பொறியாளர் அஜய் அகர்வால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அம்மா உணவகத்தைப் பார்வையிட்டனர்.

உணவகத்தில் உள்ள பொருள்கள் வைக்கும் அறை, சமையலறை, சாப்பாடு வழங்கும் இடம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர்கள், அங்கு பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் பணியாளர் தேர்ந்தெடுக்கப்படும் முறை, பணி நேரம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து, உணவகத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள் கூறுகையில், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் விலை குறைவாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும் உள்ளன.

ஆந்திரத்தில் உள்ள முக்கிய மாநகராட்சிகளில் இதே போன்று மலிவு விலை உணவகங்கள் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளன.

தில்லி மாநகராட்சியிலும் இதே போன்று மலிவு விலை உணவகங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
 

உள்ளாட்சி இடைத் தேர்தல்: நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு

Print PDF

தினமணி           10.09.2014

உள்ளாட்சி இடைத் தேர்தல்: நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு

உள்ளாட்சி இடைத் தேர்தலில் நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரத்து 486 போட்டியிட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 4-ஆம் தேதியுடனும், மனுக்களைத் திரும்பப் பெற கடந்த 8-ஆம் தேதியும் கடைசி நாள்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஜோதி நிர்மலா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் மூன்று மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளர் இ. புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை, தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மேலும், மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 4 உறுப்பினர்கள் போட்டியின்றியும், மீதமுள்ள 8 இடங்களுக்கு தேர்தலும் நடைபெறுகிறது.

நகராட்சிகளில் காலியாகவுள்ள எட்டு தலைவர் பதவியிடங்களில் நான்கு இடங்களுக்கு போட்டியின்றியும், மீதமுள்ள இடங்களுக்கு தேர்தலும் நடத்தப்படவுள்ளது.

நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 30 பேர் போட்டியின்றியும், 23 இடங்களுக்கு தேர்தலும் நடைபெறுகிறது. ஏழு பேரூராட்சித் தலைவர் பதவியிடங்களில் ஒரு இடத்துக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஆறு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.

பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 64 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 39 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும். மூன்று பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வேட்பு மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை.

ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 25 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 99 பேரும், சிற்றூராட்சித் தலைவர் பதவிக்கு 270 பேரும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 775 பேரும் என மொத்தம் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரத்து 486 பேர் போட்டியிட உள்ளனர் என்று தேர்தல் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா தெரிவித்துள்ளார்.

மொத்தம் 104 பேர் தேர்வு: நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 104 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகர மேயர் ஒருவரும், மாநகராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் 4 பேரும், நகராட்சித் தலைவர் 4 பேரும், வார்டு உறுப்பினர்கள் 30 பேரும், பேரூராட்சி தலைவர் ஒருவரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 64 பேரும் என மொத்தம் 104 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்பின் செப்டம்பர் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 


Page 13 of 841