Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

'அம்ருத்' வளர்ச்சித் திட்டம் தமிழகத்துக்கு ரூ.11,237 கோடி

Print PDF

தினமணி     07.04.2017

'அம்ருத்' வளர்ச்சித் திட்டம் தமிழகத்துக்கு ரூ.11,237 கோடி

'அம்ருத்' எனப்படும் நகர்ப்புற உருமாற்றம் மற்றும் புத்தாக்கத்துக்கான அடல் இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.11,237 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

நாடு முழுவதும் 'அம்ருத்' திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சுமார் 500 நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையொட்டி, கடந்த 2015-இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.50 ஆயிரம் கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டு அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நகரங்களில் நகர்ப்புறங்களின் தரத்தை உயர்த்தும் வகையில், அம்ருத் திட்டம் மூலம் மின்னாளுகை, நிதிச் சீர்திருத்தம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த திட்டம் வரையறுக்கப்பட்டது. இதன்படி இந்த நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், தண்ணீர், கால்வாய் வசதிகள், கழிவு மேலாண்மை, சாலை வசதிகள் போன்றவை செய்யப்படும்.

இதையடுத்து, அம்ருத் திட்டத்தில் முதல் கட்டமாக தமிழகத்தில் 32 நகரங்களைச் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தப் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, அம்பத்தூர், திருப்பூர், ஆவடி, திருவொற்றியூர், தூத்துக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர், பல்லாவரம், திண்டுக்கல், வேலூர், தாம்பரம், கடலூர், ஆலந்தூர், காஞ்சிபுரம், ஈரோடு, திருவண்ணாமலை, கும்பகோணம், ராஜபாளையம், கள்ளக்குறிச்சி, மாதவரம், புதுக்கோட்டை, ஓசூர், ஆம்பூர், காரைக்குடி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த நகரங்களில் மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தும் நோக்குடன் ரூ. 11,237 கோடி நிதியை வழங்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த நிதி எவ்வாறு தமிழகத்துக்கு பயன்படும்? அதற்கான வழிமுறைகள் என்ன? திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவது எப்படி? போன்றவை குறித்து விரைவில் மாநிலத் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலர் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்தும் என்று மத்திய அரசின் உயரதிகாரி தெரிவித்தார்.

Last Updated on Friday, 07 April 2017 06:35
 

'ஸ்மார்ட் சிட்டி': ஜூன் மாதம் அடுத்த பட்டியல்!

Print PDF

தினமலர்       05.04.2017

'ஸ்மார்ட் சிட்டி': ஜூன் மாதம் அடுத்த பட்டியல்!

புதுடில்லி: மத்திய அரசின் கனவு திட்டமான 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் அடுத்த பட்டியல் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது. 100 நகரங்களில் 60 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 40 நகரங்கள் இப்பட்டியலில் இடம் பெறும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக, 'ஸ்மார்ட் சிட்டி' திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள், வளர்ந்த நாடுகளில் உள்ள, அனைத்து வசதிகளும் உடைய, 'ஹைடெக்' நகரங்களை போல் மாற்றப்படும்; இதற்காக, பல லட்சம் கோடி ரூபாய் செலவிட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

'ஸ்மார்ட் சிட்டி'

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் படி, உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன், அனைத்து கட்டமைப்பு வசதிகள் அமைந்த நகரம் உருவாக்கப்படும். இந்த நகர மக்களின் வாழ்க்கைத் தரம், சர்வதேச நகரங்களுடன் ஒப்பிடும் வகையில் இருக்கும். சுத்தமான குடிநீர், தடையற்ற மின்சாரம், பளபளக்கும் சாலைகள், மின்னல் வேக இணைய வசதி, தானியங்கி கழிவு அகற்றல் நடைமுறை, சிறப்பான பொது போக்குவரத்து, 'டிஜிட்டல்' மயமான, பொது சேவைகள், குறைந்த விலையில் வீடு ஆகியவை, ஸ்மார்ட் சிட்டியின் கட்டமைப்பு அம்சங்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நகரங்கள், இரு கட்ட நடைமுறை மூலம் தேர்வு செய்யப் படுகின்றன. முதல் கட்டமாக, மாநில அரசுகள், ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுக்கத்தக்க நகரங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பட்டியலை அனுப்பும். அனைத்து மாநிலங் களும் அனுப்பும் பட்டியலில் இடம்பெறும் நகரங்கள், அவற்றின் தற்போதைய கட்டமைப்பு வசதிகளை பொறுத்து, இரண்டாவது கட்டத் தேர்வில் பங்கேற்கும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, மத்திய அரசு, தன் பங்காக, ஐந்து ஆண்டுகளுக்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நகரத்துக்கும், ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வீதம் செலவிடப்படும். மத்திய அரசு வழங்கும் தொகைக்கு நிகராக, அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து முதலீடு செய்யும்.

ஜூனில் 40 நகரங்கள்:

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. இதுவரை, 60 நகரங்கள் தேர்வாகி உள்ளன. இந்நிலையில் மீதமுள்ள, 40 நகரங்களுக்கான பட்டியல் ஜூன் மாதம் இறுதியில் வெளியிடப்படவுள்ளது. வரும், 2022க்குள், இந்தியாவில், 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்பட்டு இருக்கும்.

 

பொலிவுறு நகரங்களுக்கான அடுத்த பட்டியல் ஜூன் மாதம் வெளியீடு!

Print PDF

தினமணி     04.04.2017

பொலிவுறு நகரங்களுக்கான அடுத்த பட்டியல் ஜூன் மாதம் வெளியீடு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய திட்டமான பொலிவுறு நகரங்களின் அடுத்த பட்டியல் வரும் ஜுன் மாதம் இறுதியில் வெளியிடப்படவுள்ளது.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25-ஆம் தேதியன்று பொலிவுறு நகரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 100 பொலிவுறு நகரங்களை உருவாக்குவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதையடுத்து, கடந்த ஆண்டு 20 நகரங்களின் பெயர்களை பொலிவுறு நகரங்களுக்காக வெளியிட்டது. பின்னர் மே மாதத்தில் 13 நகரங்களின் பெயர்கள், செப்டம்பர் மாதத்தில் 27 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, பொலிவுறு நகரங்களாக உருவாக்கப்பட இருக்கும் 60 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு இதுவரையிலும் அறிவித்துள்ளது. எஞ்சிய 40 பொலிவுறு நகரங்களுக்கான பட்டியல் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், 40 பொலிவுறு நகரங்களின் பெயர் பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வரும் ஜுன் மாதம் இறுதியில்  வெளியிடவுள்ளது. 40 நகரங்களின் பெயர் வெளியிடப்பட்டதும், அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கும். ஒவ்வொரு நகரத்துக்கும் தலா ரூ.500 கோடியை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும். அந்த நிதியைக் கொண்டு, அந்த நகரங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 160