Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ரூ.59 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் :செங்கல்பட்டு நகராட்சி முடிவு

Print PDF

தினமலர்              21.08.2013

ரூ.59 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் :செங்கல்பட்டு நகராட்சி முடிவு

செங்கல்பட்டு : செங்கல்பட்டில், பொதுநிதியின் கீழ், 59 லட்ச ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இங்கு, வேதப்பர் தெரு, மலைப்பூங்கா, சி.என்.மகாதேவன் தெரு, சாஸ்திரி நகர்,பிள்ளையார் கோவில் தெரு, காந்தி சாலை, அண்ண சாலை ஆகிய பகுதியில், கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என,பொதுமக்கள் நகராட்சியிடம் வலியுறுத்தி வந்தனர். கான்கிரீட் சாலைகள் இதையடுத்து, வேதப்பர் தெருவில், 3.25 லட்சம் மதிப்பில், மழைநீர் வடிகால்வாயும், மலைப்பூங்கா பகுதி யில், 8.70 லட்சம் ரூபாய் மதிப்பில், கான்கிரீட் சாலையும், மலைப்பூங்கா மற்றும் சுந்தர விநாயகர் கோவில் ஆகிய பகுதிகளில், 5.73 லட்சம் மதிப்பில், கான்கிரீட் சாலையும், மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்பட உள்ளன.

மேலும், சி.என்.மகாதேவன் தெருவில், 7.50 லட்சம் மதிப்பில், மழைநீர் கால்வாய், சாஸ்திரி நகரில், 1.80 லட்சம் மதிப்பில் சிறுபாலம், காமராஜர் தெரு மற்றும் குப்புசாமி தெரு ஆகிய பகுதிகளில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால், சிறுபாலம், கான்கிரீட் சாலை, பிள்ளையார் கோவில் குறுக்கு தெருவில் 2.30 லட்சம் மதிப்பில், கான்கிரீட் சாலை மற்றும் சிறுபாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுபாலங்கள்

காந்தி சாலையில், 7.95 லட்சம் ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை, நாகாத்தம்மன் கோவில் மற்றும் கங்கையம்மன் கோவில் முதல் தூக்குமரக்குட்டை வரை, 4.10 லட்சம் மதிப்பில் மழைநீர் கால்வாய், அண்ணா சாலையில் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பொதுக்கழிப்பிடம் பராமரிப்பு, நேஷனல் ஸ்டோர் அருகில் 50 ஆயிரம் மதிப்பில் சிறுபாலம் என, மொத்தம் 59.33 லட்சம் ரூபாய் பொது நிதியிலிருந்து மேற்கண்ட பணிகளை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிதியின் கீழ், பாசித் தெரு நகராட்சி பள்ளிக்கு,

8 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச் சுவர் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் கூறும்போது, ""திட்டப்பணிகள் அனைத்தும் 30 நாட்களுக்குள் செய்து முடிக்கப்படும்,'' என்றார்.

 

ரூ. 20 கோடியில் மாநகராட்சி மின் சேமிப்பு திட்டம்! விரிவாக்கப்பகுதியில் விரைவில் அறிமுகம்

Print PDF

தினமலர்                12.08.2013

ரூ. 20 கோடியில் மாநகராட்சி மின் சேமிப்பு திட்டம்! விரிவாக்கப்பகுதியில் விரைவில் அறிமுகம்

கோவை:கோவை மாநகராட்சி இணைப்பு பகுதிகளில், மின் சக்தி சேமிப்பு திறனுள்ள மின் விளக்குகளை பொருத்தி, 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும், மின்சக்தியை சேமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் பொதுநிதியில் இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளில் (தற்போதைய 60 வார்டு) 41 ஆயிரத்து 500 தெருவிளக்குகளும், இணைப்பு பகுதிகளில் (தற்போதைய 40 வார்டு) 29 ஆயிரத்து 200 தெருவிளக்குகளும் உள்ளன. சோடியம் லைட், ஐமேக் லைட், டியூப் லைட்டுகள் உள்ளன.

தெருவிளக்கு மின் பயன்பாட்டுக்காக மாதம் 90 லட்சம் ரூபாய் வரையிலும் மாநகராட்சி நிர்வாகம் செலவிடுகிறது. இதுதவிர, தெருவிளக்கு மின்கம்பங்கள், தெருவிளக்குகள் பராமரிப்புக்கு தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது.

மின் சக்தியை சிக்கனப்படுத்த, குறைந்த மின் சக்தியில் அதிக ஒளி கொடுக்கக்கூடிய தெருவிளக்குகளை பொருத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 2010ல், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தபோது, மாநகராட்சி பகுதியிலுள்ள முக்கிய ரோடுகளில் மின் சக்தி சேமிப்பு திறனுள்ள விளக்குகள் பொருத்தப்பட்டன. அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, உக்கடம் பைபாஸ் ரோடு, புதிதாக மேம்படுத்தப்பட்ட திட்டச்சாலை, இணைப்பு சாலைகளில் மின்சக்தி சேமிப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

மாநகராட்சி பழைய வார்டுகளில் மின் சக்தி சேமிப்பு விளக்குகள் மாற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநகராட்சி இணைப்பு பகுதிகளில் தெருவிளக்குகளை முறைப்படுத்தவும், மின் சக்தி சேமிப்பு விளக்குகள் பொருத்தவும்மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் பொதுநிதியில் இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்டது. டில்லியை சேர்ந்த நிறுவனத்தின் டெண்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

"மாநகராட்சி இணைப்பு பகுதிகளில் இந்நிறுவனம் நான்கு மாதங்களுக்கு நேராய்வு தணிக்கை செய்ய வேண்டும். எந்தெந்த பகுதியில் கூடுதலாக தெருவிளக்கு கம்பம் அமைக்க வேண்டும்; சோடியம் லைட்டுகளை மாற்றி அமைக்க வேண்டும்; தேவையற்ற இடங்களில் உள்ள தெருவிளக்குகளை அகற்ற வேண்டும்' என, அறிக்கை கொடுக்க உத்தரவிடப்பட்டது.

இப்பணிகள் முடிந்ததும், தற்போதுள்ள தெருவிளக்குகளுக்கு பதிலாக மின்சக்தி சேமிப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு, தேவையற்ற விளக்குகள் அகற்றப்படும்.

முதல் ஆண்டு பராமரிப்பில் 35 சதவீதம் மின் சக்தி சேமிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

35 சதவீத மின்சக்தி சேமிப்பு

மேயர் வேலுசாமி கூறுகையில், ""மாநகராட்சியுடன் இணைப்பட்ட பகுதிகளில், தெருவிளக்கு மின் சக்தி செலவுக்காக ஆண்டுக்கு 4.97 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பராமரிப்பு செலவுக்காக ஆண்டுக்கு 1.50 கோடி ரூபாய் செலவாகிறது. மின் சக்தி சேமிப்பு விளக்குகள் பொருத்தினால், பராமரிப்பு செலவும் குறையும்.

மின் சக்தி சேமிப்பு விளக்குகள் பொருத்தும் திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி எடுத்துள்ள நிறுவனம் தணிக்கை அறிக்கை தயாரிக்க 41.48 லட்சம் ரூபாய் கேட்டுள்ளது. டிசம்பருக்குள் தணிக்கை பணி முடிந்து, மின் சக்தி சேமிப்பு விளக்கு பொருத்தப்படுகிறது. ஓராண்டில் இப்பணி நிறைவு செய்யப்படும். இதன் மூலம் 35 சதவீதம் மின் சக்தி சேமிக்கப்படும்,'' என்றார்.

 

மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்காக ரூ23.76 கோடியில் புது திட்டம்

Print PDF

தினகரன்              05.08.2013

மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்காக ரூ23.76 கோடியில் புது திட்டம்


ஈரோடு, : ஈரோடு மாநகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம் சார்பில் 23 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம் மூலமாக 2013-14ம் ஆண்டில் திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் சீரமைத்தல், மழைநீர் வடிகால் கட்டுதல், தெருவிளக்குகள் பராமரித்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் ரூ.23 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி வெண்டிபாளையம் உரக்கிடங்கு ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது. சாலைகள் சீரமைப்பு திட்டத்தில் ஜவுளிநகர் மெயின்ரோடு மற்றும் குறுக்கு சாலைகளில் ஒரு கி.மீட்டர் தூரம் ரூ.68.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ரூ.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தார்ச் சாலைகள் அமைக்கப்படவுள்ளது.

மழைநீர் வடிகால் கட்டுதல் திட்டத்தில் சி.எம்.நகர், அம்பேத்கர் நகர், சொட்டையம்பாளையம் மெயின்ரோட்டில் இருந்து சத்தி ரோடு வரை, பாலக்காட்டூர், எஸ்.எஸ்.பி. பள்ளி முதல் பெருமாள்மலை வரை, மங்கலத்துறை சந்திப்பில் இருந்து ஜவுளிநகர் வரை, சிந்தன்நகர், தென்றல்நகர், இபிபி நகர், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், பண்ணை நகர், அணைக்கட்டு பகுதி, பெரியார்நகர், முத்துசாமி காலனி, மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 31 இடங்களில் 20 கி.மீட்டர் தூரம் ரூ.9 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது.

மேலும் தெருவிளக்குகள் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. காசிபாளையம் மலைக்கோவில் பகுதியிலும், பெரும்பள்ளம் அண்ணாடெக்ஸ் பகுதியிலும், கட்டபொம்மன் வீதியிலும் என 3 இடங்களில் 2 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் கட்டப்படவுள்ளது. இந்த ஆண்டு 23 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மேயர் மல்லிகா பரமசிவம் கூறியதாவது: ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத்தின் மூலமாக எந்தெந்த வார்டுகளில் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக இடங்களில் மழைநீர் வடிகால் கட்டப்படவுள்ளது.

இதற்கு தேவைப்படும் நிதி குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு போக மீதமுள்ள தொகையை மாநகராட்சி பொது நிதியில் இருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு மேயர் தெரிவித்துள்ளார்.

 


Page 13 of 160