Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

அழகிய இடங்களாகின்றன 3 குளங்கள்... துளிரும் நம்பிக்கை! நடைபாதை அமைக்க மாநகராட்சி திட்டம்

Print PDF
தினமலர்              12.07.2013

அழகிய இடங்களாகின்றன 3 குளங்கள்... துளிரும் நம்பிக்கை! நடைபாதை அமைக்க மாநகராட்சி திட்டம்


கோவை:மத்திய அரசின் மானியம் தாமதமாகி வரும் நிலையிலும், கோவை நகரிலுள்ள மூன்று குளங்களை பொழுதுபோக்கிடங்களாக மாற்றும் முயற்சியில், மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

கோவையை பசுமையான, அழகான நகரமாக மாற்றும் வகையில், சூழல் அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன், நகரில் 65 பூங்காக்களை மேம்படுத்தவும், 9,500 மரங்களை நட்டு வளர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில், கோவை நகரிலுள்ள குளங்களை, பொழுதுபோக்கிடங்களாக மாற்றுவதற்கான வேலைகளையும், மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.

மாநகராட்சி வசமுள்ள எட்டு குளங்களை 200 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது; இன்னும் கிடைக்கவில்லை.

எனினும், உக்கடம் பெரியகுளம் மற்றும் குறிச்சி குளங்கள் தூர் வாரப்பட்டு, 35 அடி அகலத்துக்கு கரைகள் நன்கு தயார் படுத்தப்பட்டுள்ளன. இந்த குளங்களின் கரைகளில், காலை மற்றும் மாலை நேரங்களில், மக்கள் "வாக்கிங்' செல்லத் துவங்கி விட்டனர்; இதே வேகத்தில், குளக்கரைகளில் நடைபாதைகளை உருவாக்கித் தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் அதிகரித்துள்ளது.

பெரியகுளத்தில் நடைபாதை, "பார்க்கிங்', மரம் வளர்ப்பு, கரையோரப் பூங்கா போன்றவற்றை அமைத்துத் தருவதற்கு, நகரிலுள்ள பல்வேறு நிறுவனங்களும் முன் வந்துள்ளன. இவர்களைப் பட்டியலிட்டு வரும் மாநகராட்சி நிர்வாகம், அனைவர் ஒத்துழைப்புடன் உக்கடம் பெரியகுளத்தில் மிக விரைவில் நடைபாதைகளையும் அமைக்கவுள்ளது. குறிச்சி குளம், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தெற்கு மண்டல மக்கள் பயன்பெறும் வகையில், அதையும் மேம்படுத்தவும் திட்டம் வகுத்துள்ளது.

அமைச்சர் தாமோதரன், மேயர், கமிஷனர் லதா மற்றும் அதிகாரிகள், குறிச்சி குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கரையை சமீபத்தில் பார்வையிட்டனர்.

குனியமுத்தூர் கோவில் அருகில், குளத்துக்கு தண்ணீர் வரும் இடத்தில், கீழ்பகுதியில் மாநகராட்சி சார்பில் பாலம் கட்டித்தர மேயர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தண்ணீர் வெளியேறும் பகுதியில், எம்.எல்.ஏ., நிதியில் பாலம் கட்டவும், மதகுப்பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபாதையுடன் கூடிய மேம்பாலமும் அமைக்கலாம் என்று மேயர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் இணைத் தால், குளத்தைச் சுற்றிலும் நடைபாதை அமைந்து விடும்.

அதற்கு அடுத்ததாக, வாலாங்குளத்திலும் இதே போல பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கவும், மாநகராட்சி முடிவு செய்துள்ளது. உக்கடம் மற்றும் அம்மன் குளத்தில், ஜே.என்.என். யு.ஆர். எம்., திட்டத்தில் 3,840 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், வாலாங் குளத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு மாற்று வீடுகளை ஒதுக்கி, அந்த வீடுகள் அனைத்தையும் இடித்து, சுற்றிலும் கரை, வேலி மற்றும் நடைபாதை அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இதற் கான பணிகள் ஒரு மாதத்தில் துவங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

நொய்யலுக்கு புத்துயிர்!


மேயர் கூறுகையில், ""பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன், கோவை நகரிலுள்ள குளங்களை பொழுதுபோக்கிடங்களாக மாற்ற முயற்சித்து வருகிறோம். முதல் கட்டமாக, இந்த மூன்று குளங்களை மேம்படுத்திய பின், கழிவு நீர் கலப்பதைத் தடுக்கவும், மற்ற குளங்களையும் அதே போல மேம்படுத்தவும் திட்டம் உள்ளது. குளங்களை மேம்படுத்தும் திட்டத்துடன், நகருக்குள் உள்ள நொய்யல் ஆற்றையும் அழகு படுத்தும் ஆலோசனை உள்ளது. மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கினால், இவற்றையெல்லாம் சிறப்பாக செயல்படுத்த முடியும்,'' என்றார்.
 

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.3.50 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி             12.07.2013

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.3.50 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்

சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.3.5 கோடிக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வார்டு குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல மாதாந்திர வார்டு குழு கூட்டம் மண்டலக் குழுத் தலைவர் தன.ரமேஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையர் கென்னடி, செயற்பொறியாளர் காளிமுத்து முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசியது:

செல்வம் (வார்டு 2): குடிசைகள் நிரம்பிய கத்திவாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வாரியம் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பாதாளச் சாக்கடை தூர்வாரும்போது கழிவுகள் சாலையிலேயே கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

பி.தமிழரசன் (வார்டு 3): அன்னை சிவகாமி நகரில் நிதி ஒதுக்கீடே செய்யாமல் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே தெருவிளக்கு அமைக்கும் பணி இரண்டு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால் புதிதாக பூஜை போடுவது விநோதமாக உள்ளது. வார்டில் ஓர் இடத்தில்கூட குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்படவில்லை.

சரவணன் (வார்டு 4): புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட்டதில் 30 சதவீத விளக்குகள் எரிவதில்லை. போதுமான துப்புரவுத் தொழிலாளர்கள் இல்லை. கத்திவாக்கம் நெடுஞ்சாலையை நவீன முறையில் சீரமைத்து பொலிவூட்ட வேண்டும். இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் லஞ்சம் பெறப்படுவதை தடுக்க வேண்டும்.

கே.பி.சங்கர் (வார்டு 5): சக்திபுரம் பகுதியில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. எம்.ஆர்.எப். சாலையில் மழைநீர் வடிகால் அமைக்காமல் சாலை போடுகின்றனர். எரிவாயு தகன மேடை இயங்கவில்லை. இதனால் மயானத்தில்தான் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. ஒரு சடலத்தை எரிக்க ரூ.5 ஆயிரம் செலவிட வேண்டியுள்ளது. அங்குள்ள ஆம்புலன்ஸ் பழுதடைந்துள்ளது. பாரத் நகர், விம்கோ நகர் பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

வின்சென்ட் அமுல்ராஜ் (வார்டு எண் 6): எர்ணாவூர்-மணலி சாலையில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக குடிநீர் குழாய்களை மாற்றியமைக்க வேண்டும். சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டும்.

கலையரசன் (வார்டு எண் 7): திருவொற்றியூர் மேற்குப் பகுதியை இணைக்கும் கிளாஸ் பேக்டரி சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இச்சாலை குறித்த நீதிமன்ற வழக்கை விரைவில் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

உறுப்பினர்களின் புகார்களுக்கு மண்டலக் குழுத் தலைவர் தன.ரமேஷ் விளக்கம் அளித்தார். கூட்டத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டிலான 53 பணிகளுக்கு வார்டு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டன. உறுப்பினர்களின் எதிர்ப்பால் ஐந்து பணிகள் தள்ளிவைக்கப்பட்டன.

 

5 லட்சம் இலவச கொசு வலைகள் அம்மா உணவகத்தை நிர்வகிக்க தனித்துறை – 11 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 72 தீர்மானங்கள் நிறைவேறின

Print PDF

தினத்தந்தி               27.06.2013

5 லட்சம் இலவச கொசு வலைகள் அம்மா உணவகத்தை நிர்வகிக்க தனித்துறை – 11 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 72 தீர்மானங்கள் நிறைவேறின

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அம்மா உணவகத்திற்கு என தனித்துறை, 11 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைத்தல், 5 லட்சம் இலவச கொசுவலைகள் வழங்குதல் உள்பட 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதாரண மன்ற கூட்டம்

சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தை மேயர் சைதை துரைசாமி திருக்குறள் விளக்கவுரை மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியுடன் தொடங்கினார். அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது. மேலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

11 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள்

  • சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 11 இடங்களில் புதிய மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பாதசாரிகள் சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி.

அதன்படி டாக்டர் எம்.ஜி.ஆர்.சாலை, திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பு மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம், மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து பறக்கும் ரெயில் நிலையத்திற்கு இணையாக பக்கிங்காம் கால்வாய்க்கு குறுக்கே, கஸ்தூரிபாய் ரெயில் நிலையத்தில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி மேம்பாலம், டி.டி.கே. சாலை– செயின்ட் மேரீஸ் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அடையாறு சந்திப்பில் மேம்பாலம், விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெரு மற்றும் என்.எஸ்.கே. சாலை சந்திப்பில் மேம்பாலம், கோடம்பாக்கம், என்.எஸ்.கே. சாலையில் மீனாட்சி பொறியியல் கல்லூரி அருகில் பாதசாரிகள் சுரங்கப்பாதை.

புரசைவாக்கம் நெடுஞ்சாலையில்...

என்.எஸ்.கே. சாலையில், வடபழனி பேருந்து நிலையம் அருகில் பாதசாரிகள் சுரங்கப்பாதை, காமராஜர் சாலையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு அருகில் பாதசாரிகள் சுரங்கப்பாதை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை (கங்காதீஸ்வரர் கோவில் சாலை) அருகில் பாதசாரிகள் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் அயனாவரம் மேடவாக்கம் டாங்க் சாலை சந்திப்பு அருகில் பாதசாரிகள் சுரங்கப்பாதை.

கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள சந்தி கடவு ரெயில் மேம்பாலம்–சுரங்கப்பாதை, கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் மணலி சாலையில் உள்ள சந்திக்கடவு ரெயில் மேம்பாலம்–சுரங்கப்பாதை ஆகிய 11 இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

  • சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளுக்கு தேவையான 1,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பு உலோகத்தினால் ஆன 2 ஆயிரம் காம்பாக்டர் குப்பை தொட்டிகள் வாங்குவதற்கு அனுமதி.

தனித்துறை

  • அம்மா உணவகத்திற்காக தனித்துறை அமைத்து 3 வட்டார அலுவலகங்கள் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில் 111 பணியாளர்களை பணி அமர்த்துவது தொடர்பாக அரசின் அனுமதி பெறுதல்.
  • சென்னையில் கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, யானைக்கால் நோய் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நீர் வழிப்பாதை ஓரம் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடிசைவாழ் மக்களுக்கும், சாலை ஓரம் வசிக்கும் மக்களுக்கும் இலவசமாக கொசுவலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7 கோடியே 50 லட்சம் செலவில் 5 லட்சம் கொசு வலைகள் கொள்முதல் செய்ய அனுமதி பெறுவது.
  • சென்னை மாநகராட்சி தெருவிளக்கு கம்பங்களில் கேபிள் டி.வி. ஒயர் கட்டுவதற்கான வாடகை தொகையை உயர்த்துவதற்கும், நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கும் அரசின் அனுமதி பெறுதல்.

72 தீர்மானங்கள்

  • சென்னையில் உள்ள 30 முக்கிய சாலைகளை மேம்படுத்தப்பட்ட வழித்தடங்களாக உலக தரத்திற்கு ஒப்பாக சீரமைக்கும் பணி தொடர்பாக பெறப்பட்ட விரிவான திட்ட அறிக்கை குறித்து அரசின் அனுமதி பெறுவது.
  • ரூ.300 கோடி திட்டத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் தெரு விளக்கு கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசிடம் பின்னேற்பு அனுமதி பெறுவது.
  • ரிப்பன் கட்டிடம் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு துறை ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
  • சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களிலேயே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் முறையை அமல்படுத்த அனுமதி பெறுவது உள்பட 72 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Last Updated on Thursday, 27 June 2013 05:57
 


Page 14 of 160