Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

மெரினா அண்ணா நினைவிடம் அருகே இசை நீர்வீழ்ச்சியுடன் ரூ7.58 கோடியில் பூங்கா

Print PDF

தினகரன்             25.01.2014

மெரினா அண்ணா நினைவிடம் அருகே இசை நீர்வீழ்ச்சியுடன் ரூ7.58 கோடியில் பூங்கா

சென்னை, : மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகம் அருகில் ரூ7.58 கோடியில் இசை நீர் வீழ்ச்சியுடன் புதிய பூங்கா அமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

* சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை புனரமைக்கும் பணிக்கு கூடுதலாக வெளிப்புற மற்றும் உள்வேலைகள் மற்றும் பணியிடம் அபிவிருத்தி செய்யும் பணிக்காக ரூ7.35 கோடி அனுமதிக்கப்படும்.

* சைதாப்பேட்டையில் உள்ள சலவையாளர் காலனியில் சலவைக்கூடம், உலர்த்தும் அறை, தேய்ப்புக்கூடம் மற்றும் ஓய்வறைகள்(பேஸ் 2) ரூ3.10 கோடியிலும், பேஸ் 3 ரூ3.10 கோடியிலும் கட்டப்படும்.

* சென்னை மெரினா காமராஜர் சாலையில் அண்ணா நினைவகம் அருகில் புதிய பூங்கா (சமப்படுத்துதல், சுற்று சுவர் கட்டுதல், செடிகள் அமைத்தல், மின்வசதி மற்றும் இசை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பணிகள்) ரூ7 கோடியே 58 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இசை நீர்வீழ்ச்சி பணிக்கு மட்டும் ரூ5 கோடி மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள்

Print PDF

தினமணி             25.01.2014 

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள்

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள் அமைப்பது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் பீர்முகம்மது, ஆணையர் மேத்யூ ஜோசப், பொறியாளர் கிரேஸ் அன்னபெர்லி, சுகாதார அலுவலர் டெல்விஸ்ராஜ், உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன், பத்மநாபபுரம் நகராட்சியின் புதிய கட்டடத்தை கடந்த 30-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டம் தொடங்கியவுடன், கூட்டப்பொருளில் 21 வார்டுகளிலும் சூரியஒளி மின்விளக்கு அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு மேல் சூரியஒளி மின் விளக்கு பயன்படாது. எனவே சூரிய மின்விளக்கு தேவையில்லை எனஉறுப்பினர் ஹரிகுமார் கூறினார். இதை அனைத்து உறுப்பினர்களும் ஆமோதித்தனர்.

இதையடுத்து 21 வார்டுகளிலும் சி.எப்.எல். விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி பேசுகையில், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில் மதுரையில் இம்மாதம் 27-ம் தேதி முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை நகராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண் உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் பிப்ரவரி 7-ம் தேதி திருநெல்வேலியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே இந்த பயிற்சி முகாமில்  அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

 

சென்னையை பசுமையாக்கும் திட்டம்: புதிதாக 224 பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு

Print PDF

மாலை மலர்            08.01.2014

சென்னையை பசுமையாக்கும் திட்டம்: புதிதாக 224 பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு
 
சென்னையை பசுமையாக்கும் திட்டம்: புதிதாக 224 பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு

சென்னை, ஜன. 8 - சென்னை நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலையோர பூங்காக்கள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடங்கள், குடியிருப்பின் முன்பு மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் பூங்காக்கள் உள்ளன.

தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் 486 பூங்காக்கள் உள்ளன. இது மற்ற நகரங்களை விட மிக குறைவு ஆகும்.

டெல்லியில் 15 ஆயிரம் பூங்காக்கள் உள்ளன. மும்பையில் 1,300 பூங்காக்களும், பெங்களூரில் 721, ஐதராபாத்தில் 709 பூங்காக்களும் உள்ளன. ஆனால் சென்னையில் மட்டும் பூங்காக்கள் எண்ணிக்கையில் 486 மட்டுமே உள்ளது. இதை அதிகப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதையடுத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் அதிக எண்ணிக்கையில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. எந்தெந்த பகுதியில் பூங்காக்கள் அமைக்கலாம் என பூங்காக்கள் பிரிவு ஆய்வு செய்தது. அதன்படி 224 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.

இதற்கிடையே சென்னையில் வீடு கட்டும்போது பசுமை திட்டத்தின் கீழ் கூடுதலாக இடைவெளி விட வேண்டும் என்று பெருநகர வளர்ச்சி குழுமம் நிபந்தனை விதித்துள்ளது. அதன் படிதற்போது 0.46 சதுர அடியாக இருக்கும் இடைவெளியை 17 சதுர அடியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

சென்னையில் பூங்காக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்து பராமரிப்பது இல்லை, குடியிருப்பு வாசிகளே இணைந்து சிறந்த முறையில் பராமரிப்பதாக டிரீ கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த குறையை சரி செய்ய பூங்காக்கள் பராமரிப்பு துறைக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், புதிதாக கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

இதே போல் சென்னையில் பெண்களுக்கு தனி விளையாட்டு மைதானங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதலாவதாக கோடம்பாக்கத்தில் இந்த மைதானம் அமைக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 33 கிரவுண்டில் விளையாட்டு மைதானம் உள்ளது.

இதில் 11 கிரவுண்டு நிலத்தில் பெண்களுக்கு பேட் மின்டன் கோர்ட், கைப்பந்து, இறகு பந்து மைதானங்கள் தனியாக அமைக்கப்படுகிறது.

இதற்காக இங்குள்ள ஆண்களுக்கான விளையாட்டு மைதானத்தில் கால் பந்து, கைப்பந்து, கூடைப்பந்து மைதானங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. அருகில் உள்ள பள்ளி மாணவ – மாணவிகளும் பயன்பபடுத்திக் கொள்ளுமாறு உருவாக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மற்ற மைதானங்களிலும் பெண்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட உள்ளது.

 


Page 7 of 135