Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை முதலில் விழிப்புணர்வு; பிறகு நடவடிக்கை

Print PDF

தினமணி 12.09.2009

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை முதலில் விழிப்புணர்வு; பிறகு நடவடிக்கை

வேலூர், செப். 11: வேலூர் மாநகராட்சி பகுதியில் செப்டம்பர் 11-க்குப் பிறகு பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் எனும் அறிவிப்பைக் கைவிட்டு, விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என கடந்த மாதம் நடந்த மாமன்றக் கூட்டத்தில் மேயர் ப.கார்த்திகேயன் அறிவித்தார். மேலும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் செப்டம்பர் 11-ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.

ஆனால், வெள்ளிக்கிழமை அவ்வாறான பறிமுதல் சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. வழக்கம்போல, பிளாஸ்டிக் பயன்பாடுகள் தொடரச் செய்தன.

இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, "20 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன்னரே தடை விதித்துள்ளது. அதை மாநகராட்சிப் பகுதிகளில் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, வெள்ளிக்கிழமை முதல் 20 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி, மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகிறோம். இதற்கான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கிறோம்.

சில வாரங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு, பிறகு கடைகளில் சோதனை நடத்தப்படும். 20 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினாலோ, வைத்திருந்தாலோ அவை பறிமுதல் செய்யப்படும். வைத்திருப்போர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்ய முடியாது.

இதைத் தவிர, எத்தனை மைக்ரான் அளவாக இருந்தாலும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்' என்கின்றனர்.

மேலும், ஊழியர்கள் பற்றாக்குறையால் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கீழ் சரிவர குப்பைகளைப் பிரித்து வாங்க முடியாதது, சாலைகளில் குவியும் பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்த முடியாமல் போவது போன்றவற்றை ஒப்புக்கொள்ளும் அலுவலர்கள், பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த வலுவான சட்டம் இல்லாத நிலையிலும், மக்களிடம் இரண்டறக் கலந்துவிட்ட நிலையிலும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் முயற்சியில் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுமே தோற்றுவிட்டன என்றும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், தமிழக அரசு ஏற்கெனவே விதித்த தடை உத்தரவைத் தற்போதுதான் மாநகராட்சி அமல்படுத்த முயற்சிக்கிறதா? அப்படியெனில், அரசு அறிவித்த தடை உத்தரவை ஒரு முறை கூட நிறைவேற்ற மாநகராட்சி முயன்றதில்லையா? மாநில அரசு நிறைவேற்றும் சட்டங்கள், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களால் அலட்சியம் செய்யப்படுகின்றனவா? எனக் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

வேலூரில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை

Print PDF

தினமணி 01.09.2009

வேலூரில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை

வேலூர், ஆக. 31: வேலூரில் மாநகரப் பகுதியில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும்; இது செப்.11 முதல் அமலுக்கு வரும் என்று மாமன்றக் கூட்டத்தில் மேயர் ப. கார்த்திகேயன் அறிவித்தார்.

வேலூர் மாமன்றக் கூட்டம் மேயர் ப. கார்த்திகேயன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக உறுப்பினர்கள் கோபி, நீதி ஆகியோர் "சுற்றுச்சூழல் பாதிப்பையும், சுகாதாரக் கேட்டையும் உருவாக்கும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் போன்றவற்றுக்கு சென்னை, உதகை, புதுக்கோட்டை மாநகராட்சிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் இங்கும் தடை விதிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த மேயர், "வேலூரிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்படும். டீ கடை, ஹோட்டல்களில் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்படும். செப்டம்பர் 10-ம் தேதிக்குள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அதையும் மீறி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இந்த உத்தரவு தொடர்பாக மாநகர சுகாதார ஆய்வாளர் பிரியம்வதா கூறியது:

அனைத்து பகுதிகளிலும் 21 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. வேலூர் மாநகர எல்லைக்குள் அமல்படுத்த மேயர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, 21 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது. முறையாக அறிவிப்புகள் வெளியிடவும், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

தீங்கு விளைவிக்கும் திடக் கழிவுகளை மாற்று எரிபொருளாக பயன்படுத்துங்கள்: சிமென்ட் ஆலைகளுக்கு அரசு அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 27.08.2009

தீங்கு விளைவிக்கும் திடக் கழிவுகளை மாற்று எரிபொருளாக பயன்படுத்துங்கள்: சிமென்ட் ஆலைகளுக்கு அரசு அறிவுறுத்தல்

சென்னை, ஆக.26: தீங்கு விளைவிக்கும் திடக் கழிவுகளை மாற்று எரிபொருளாக பயன்படுத்த வேண்டும் என்று சிமென்ட் ஆலைகளுக்கு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக சிமென்ட் ஆலைகளில் தீங்கு விளைவிக்கும் கழிவுகளின் பயன்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு பலவகையான காரணங்கள் இருந்தாலும், தீங்கு விளைவிக்கும் திடக் கழிவுகளின் பாதுகாப்பற்ற வெளியேற்றத்தால் பெருமளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

2008 புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் 2,655 தொழிற்சாலைகள் தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 3. 14 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

இந்தக் கழிவுகள் அதிக எரிதிறன் கொண்டவை. அவற்றை நிலத்தில் தேக்கி வைப்பதற்கு பதிலாக, மாற்று எரிபொருளாகவோ அல்லது மூலப்பொருளாகவோ பயன்படுத்த சிமென்ட் ஆலைகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் எரிபொருள் சிக்கனமும் ஏற்படும் என்றார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் பாலகிருஷ்ணன் பேசியது:

வேகமாக தொழில் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுச்சூழல் மாசு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதைச் சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தீங்கு விளைவிக்கும் கழிவுகளை சுத்திகரித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள "சிப்காட்' தொழில்பேட்டை வளாகத்தில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அது, விரைவில் செயல்படத் தொடங்கும். பெருந்துறை, ஸ்ரீபெரும்புதூர், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற இடங்களிலும் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

 


Page 130 of 135