Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

கோவையை பசுமை நகரமாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது : பீளமேட்டில் அரங்கேற்றம்

Print PDF

தினமலர்                20.08.2013

கோவையை பசுமை நகரமாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது : பீளமேட்டில் அரங்கேற்றம்

கோவை:கோவை மாநகராட்சியில், பூங்கா இடங்களில் மரம் வளர்த்து, பசுமை நகரமாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து, பீளமேட்டில், மரக்கன்றுகள் நடப்பட்டு, திட்டத்துக்கு, "பிள்ளையார் சுழி' போடப்பட்டுள்ளது. கோவையிலுள்ள பூங்காக்களை மேம்படுத்தி, பூங்கா மற்றும் ரோட்டோரங்களில் மரம் வளர்க்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில், 1500 பூங்காக்கள் உள்ளன. அதில், 198 பூங்காக்கள் பராமரிப்பில் உள்ளன. மீதமுள்ள பூங்காக்களை பராமரிக்கவும், மரங்கள் வளர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பூங்காக்களுக்கு தேவையான இடங்களில் சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி, மின் வசதியை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்கிறது. "பராமரிப்புக்கு பொறுப்பேற்கும் அமைப்புகள், மரங்கள் வளர்க்க வேண்டும்; நடைபாதை அமைக்க வேண்டும்; விளம்பரங்கள் செய்யக்கூடாது' என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.பூங்கா பராமரிப்புக்கு, "ராக்', "சிறுதுளி', ரோட்டரி கிளப் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள், தன்னார்வ அமைப்பினர் சார்பில் விருப்ப கடிதம் கொடுத்துள்ளனர். மொத்தம், 52 பூங்காக்களை பராமரிக்க விருப்பக் கடிதம் கொடுத்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நிபந்தனையுடன் அனுமதி கடிதம் கொடுக்க துவங்கியுள்ளது.ராக், சிறுதுளி, ரோட்டரி கிளப் (ஜி 29) இணைந்து, பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள விநாயகா நகர், குருசாமி நகர், சிங்காநல்லூரில் உள்ள கோத்தாரி நகர், தடாகம் ரோட்டிலுள்ள சஞ்ஜீவ் காலனி, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள "ஜிகேடி' நகர், கணபதி காந்திமாநகர் ஆகிய ஆறு பூங்காக்களை மேம்படுத்துகின்றனர்.குருசாமி நகரிலுள்ள ஒரு ஏக்கர் பூங்கா இடத்தில் நேற்று முன்தினம் மரக்கன்று நடும் விழா துவங்கியது.

செண்பகம், வேம்பு, மரமல்லி உள்ளிட்ட 110 வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மரக்கன்றுக்கும் செங்கற்கள் கொண்டு, பாத்தி அமைக்கப்பட்டு, சொட்டு நீர் பாசனத்தில் வளர்க்க குழாய் பதிக்கப்பட்டுள்ளது. பூங்கா இடத்திலுள்ள மாநகராட்சி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து சொட்டுநீர் பாசனத்துக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்தது, விநாயகா நகரில் 60 சென்ட் இடத்தில் மரக்கன்று நடும் பணி துவங்கியுள்ளது.மரக்கன்றுகள் பராமரிக்கப்படுவதை கண்காணிக்கும் பொறுப்பு, ஆர்.வி.எஸ்., கல்லூரி "ரோட்ராக்ட் கிளப்'பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை மரக்கன்றுகளை கண்காணித்து, மரக்கன்றின் நிலை குறித்து "வெப்சைட்டில்' வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பூங்கா பராமரிப்பு பொறுப்பேற்றுள்ள அமைப்புகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மரக்கன்றுகள் நிலவரம் பற்றி, உடனுக்குடன் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் வேலுச்சாமி, சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா, ராக் அமைப்பின் தலைவர் சாமிநாதன், கவுரவ செயலாளர் ரவீந்திரன், ரோட்டரி மாவட்ட கவர்னர் அஜய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.மரம் வளர்க்க கரம் கொடுங்கள்!

மேயர் வேலுச்சாமி பேசுகையில், ""மக்கள் தொகை, வாகன பெருக்கம் அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, மரம் வளர்ப்பது மட்டுமே தீர்வு. கோவையை பசுமை நகரமாக மாற்றினால் மட்டுமே, மழைவளம் பெருகும். சுத்தமான, சுகாதாரமான காற்றோட்டம் கிடைக்கும். பசுமை நகரமாக்கும் திட்டத்தை, மாநகராட்சியால் மட்டும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் இணைந்து மரம் வளர்க்க வேண்டும்,'' என்றார்.

 

மேட்டுப்பாளையம் நகராட்சி: ரூ.10 லட்சத்தில் சூரிய ஒளி மின் வசதி

Print PDF

தினமணி                20.08.2013

மேட்டுப்பாளையம் நகராட்சி:  ரூ.10 லட்சத்தில் சூரிய ஒளி மின் வசதி

மேட்டுப்பாளையம் நகராட்சியில், ரூ.10 லட்சம் மதிப்பில் சூரிய ஒளி மின் வசதிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 இது குறித்து, நகராட்சித் தலைவர் சதீஸ்குமார் வெளியிட்ட அறிக்கை: மேட்டுப்பாளையம் நகராட்சியில் அவசர அவசியம் கருதி கீழ்கண்ட பணிகளுக்கு மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் மேட்டுப்பாளையம் 32-ஆவது வார்டு, மணிநகர் லே-அவுட் பகுதியில், நகர்ப்புற ஊரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கவும், நகராட்சிக்குட்பட்ட சாமண்ணா தலைமை நீரேற்று நிலையம், பங்களாமேடு பேருந்து நிலையம் அருகே உள்ள நீருந்து நிலையம், காரமடை நீருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள் கட்டமைப்பு இடை நிரப்புதல் மற்றும் இயக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 மேலும் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடப் பகுதிகளான நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், நீரேற்று நிலையம் ஆகிய இடங்களில் மின் சிக்கனத்தின் அவசியம் கருதி, தலா 2 கே.வி.ஏ. திறன் கொண்ட 3 சூரிய ஒளி மின் வசதிக்கான பணிகள் ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
 

அம்மா உணவகத்தில் "பயோ காஸ்' திட்டம்அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

Print PDF

தினமலர்             17.08.2013

அம்மா உணவகத்தில் "பயோ காஸ்' திட்டம்அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

கோவை:கோவை மாநகராட்சியில் ஓட்டல் கழிவுகளில் இருந்து, "பயோ காஸ்' உற்பத்தி செய்து, சரவணம்பட்டி அம்மா உணவகத்துக்கு பயன்படுத்தும் திட்டத்தை அடுத்த மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.கோவை மாநகராட்சியில் 10 இடங்களில், "அம்மா உணவகம்' செயல்படுகிறது. அம்மா உணவகங்களை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி காம்ப்ளே சமீபத்தில் ஆய்வு செய்தார்.

மாநகராட்சியில் சேகரமாகும் காய்கறி கழிவு, ஓட்டல் கழிவுகளில் இருந்து பயோ காஸ் உற்பத்தி செய்து, அம்மா உணவகங்களுக்கு பயன்படுத்த மாநகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.அதையடுத்து, சரவணம்பட்டி அம்மா உணவகத்தில் இடவசதி இருந்ததால், அங்கு பயோ காஸ் உற்பத்தி மையம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர். தற்போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகளை ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்து, பயோ காஸ் உற்பத்தியை துவங்கவும், அம்மா உணவகத்துக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:சரவணம்பட்டி அம்மா உணவகத்தில் 1.5 சென்ட் இடத்தில், 40 அடி நீளம்- 20 அடி அகலம் - 16 அடி ஆழத்தில் 9.5 லட்சம் மதிப்பீட்டில், பயோ காஸ் திட்டத்திற்கு கட்டுமான பணி நடக்கிறது. காய்கறி மற்றும் உணவுக் கழிவுகள், பயோ காஸ் குழிக்குள் கொட்டப்படும். தினமும் 3 டன் கழிவுகள் கொட்டி, 25 கன மீட்டர் அளவுக்கு பயோ காஸ் உற்பத்தி செய்யப்படும்.தற்போது, மூன்று நாட்களுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பயோ காஸ் திட்டத்தை அடுத்த மாதத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், முதல் மூன்று மாதத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயோ காஸ் உற்பத்தி இருக்காது. நான்காவது மாதத்தில் இருந்து, அம்மா உணவகத்தின் தேவைக்கு ஏற்ப பயோ காஸ் கிடைக்கும்.அன்றாட தேவைக்கான பயோ காஸ் கிடைக்கும் வரை, காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படும். உணவகத்தின் பயன்பாட்டுக்கு போக, மீதமுள்ள பயோ காஸ் தெருவிளக்குகளை ஒளியூட்ட பயன்படுத்தப்படும். மாநகராட்சியிலுள்ள மற்ற அம்மா உணவகங்களிலும், இத்செயல்படுத்த இடவசதி உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்யப்படுகிறது.

மாநகராட்சியிலுள்ள தினசரி காய்கறி மார்க்கெட், மொத்த காய்கறி மார்க்கெட், ஓட்டல்கள் மூலம் தினமும் 50 டன் அளவுக்கு கழிவு ஏற்படுகிறது. இக்கழிவை கொண்டு, பயோ காஸ் திட்டம் அமைக்க இடங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.

 


Page 15 of 135