Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோவில்பட்டி– சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ரூ.1½ கோடி மின்கட்டண பாக்கியை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை நகரசபை கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினத்தந்தி             12.02.2014

கோவில்பட்டி– சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ரூ.1½ கோடி மின்கட்டண பாக்கியை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை நகரசபை கூட்டத்தில் தீர்மானம்

கோவில்பட்டி– சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.1½ கோடியை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரசபை கூட்டம்

கோவில்பட்டி நகரசபை மாதாந்திர கூட்டம் மற்றும் அவசர கூட்டம் நேற்று நடந்தது. நகரபை தலைவி ஜான்சிராணி தலைமை தாங்கினார். ஆணையாளர் சுல்தானா, நகரசபை துணை தலைவர் ராமர், நகரமைப்பு அதிகாரி காஜாமைதீன், வருவாய் அதிகாரி வெங்கடேசன், என்ஜினீயர் ரமேஷ், மேலாளர் முத்துக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நகரசபை தலைவி ஜான்சிராணி, கோவில்பட்டி நகரசபை அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு சட்டசபையில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து பேசினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஜோதிபாசு, நாகராஜ், இருளப்பசாமி, தெய்வேந்திரன் ஆகியோரும் பேசினார்கள்.

தீர்மானம்

கூட்டத்தில் கோவில்பட்டி 2–வது பைப் லைன் திட்டத்திற்கு மொத்தம் 81 கோடியே 81 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நகரசபை பங்களிப்பு ரூ.9 கோடியே 6 லட்சம் ஆகும். இந்த பங்களிப்பு மற்றும் கடன் தொகையை ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு குழும திட்டத்தின் கீழ் மானிய கடனாக ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி பெற்று தருவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே இயங்கி வரும் கோவில்பட்டி–சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டம் 36 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 27 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எட்டயபுரம், சாத்தூர் போன்ற பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் குடிநீர் வழங்கியதற்கு மின்கட்டண பாக்கியாக ரூ.1 கோடி 37 லட்சத்து 11 ஆயிரம் உள்ளது. அந்த தொகையை மின்வாரியம் கேட்டுள்ளது.

இந்த தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுக்கும், தமிழ்நாடு மின்வாரியத்துக்கும் பரிந்துரை செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாதாரண கூட்டத்தில் மொத்தம் 46 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 49 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

 

ஐகோர்ட்டு நுழைவு வாயிலில் உள்ள கோவிலை இன்று மதியத்துக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு

Print PDF

மாலை மலர்              12.02.2014

ஐகோர்ட்டு நுழைவு வாயிலில் உள்ள கோவிலை இன்று மதியத்துக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு
 
ஐகோர்ட்டு நுழைவு வாயிலில் உள்ள கோவிலை இன்று மதியத்துக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை, பிப்.12 - என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் உள்ள அம்மன் கோவிலை இடித்துவிட்டு, அதுதொடர்பான அறிக்கையை இன்று மதியம் தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில், ஐகோர்ட்டு நுழைவு வாயிலில், ஸ்ரீ நீதி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ‘முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் பூர்ண குணமடைய வேண்டும்’ என்பதற்காக கட்டப்பட்டது.

கடந்த 27 ஆண்டுகளாக உள்ள இந்த கோவிலை அகற்றுவதற்கு, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்திரி, கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவில், ‘‘பொதுமக்கள் பயன்படுத்தும் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என்பதுதான் இந்த ஐகோர்ட்டின் நிலை. அது கோவிலாக இருந்தாலும், மசூதி அல்லது தேவலாயமாக இருந்தாலும், அதுபற்றி இந்த கோர்ட்டுக்கு கவலை இல்லை. கோவில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றை கட்ட விரும்புபவர்கள் தனியார் நிலத்தில் அவற்றை கட்டிக் கொள்ளலாம். மத ரீதியான கட்டிடங்களை பொது இடத்தில் கட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எனவே ஐகோர்ட்டு நுழைவு வாயிலில் உள்ள ஸ்ரீ நீதி கருமாரியம்மன் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்கள்.

ஆனால், இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இந்த கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கவில்லை. இதையடுத்து சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் வி.பாரதிதாசன், இந்த ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த மாநகராட்சி கமிஷனர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், இந்த ஐகோர்ட்டு உத்தரவை இன்று மதியம் 2.15 மணிக்கு அமல்படுத்தி, அது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறினார்.

அதே நேரம், இந்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே, கோவில் இடிப்பது தொடர்பான இந்த ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் சென்னை போலீஸ் கமிஷனர் வழங்கவேண்டும் என்று உத்தரவிடுகிறோம்.

கோவில் இடிப்பு உத்தரவை அமல்படுத்திவிட்டு, மதியம் 2.15 மணிக்கு அதுதொடர்பான அறிக்கையை சென்னை மாநகராட்சி கமிஷனர் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 

ரூ.1 கோடி நிலம் மீட்பு

Print PDF

தினமணி             11.02.2014

ரூ.1 கோடி நிலம் மீட்பு

கோவையில் தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் எரு கம்பெனி பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 1250 சதுர அடி இடத்தை தனியார் கார் நிறுவனம் ஆக்கிரமித்திருந்தது. இந்த இடத்தில் கட்டடமும் கட்டப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கார் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் க.லதாவின் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி தங்கள் ஆளுகைக்கு கொண்டு வந்தனர். இந்த இடத்தின் மதிப்பு ரூ.1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 


Page 11 of 506