Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி பாக்கி ; வேலூர் மாநகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினமலர்     05.08.2021

வரி பாக்கி ; வேலூர் மாநகராட்சி நோட்டீஸ்
 
வேலூர்: வேலுார் மாநகராட்சியில் வரி பாக்கி வைத்துள்ள பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

வேலுார் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இங்கு தொழில் வரி, சொத்து வரி, மாநகராட்சிக்கு சொந்தமான 3,000 கடைகள் வாடகை என ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் வரை வருவாய் வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியாக வரி வசூல் ஆகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் வரி வசூல் ஆகாமல் உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது; கொரோனா பரவலை காரணம் காட்டி நிறைய பேர் வரி பாக்கி வைத்துள்ளனர். இதனால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வரி பாக்கி வைத்தவர்களின் விவரங்களை சேகரித்து வரி பாக்கியை 15 நாட்களில் செலுத்தும்படி அவர்களுக்கு இன்று(ஆக-5) முதல் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

பிறப்பு, இறப்பு சான்று கட்டணம் உயர்வு: ரூ.50... ஆயிரமாகிறது! டிச., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது

Print PDF
தினமலர்      26.11.2017

பிறப்பு, இறப்பு சான்று கட்டணம் உயர்வு: ரூ.50... ஆயிரமாகிறது! டிச., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது

 

கோவை;சொத்து வரி மறுசீராய்வு, குப்பை வரியை தொடர்ந்து, குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்த்த, கோவை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. அதற்கு முன், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை, 40 மடங்கு உயர்த்த உள்ளது. அதாவது, தற்போது ரூ.5 செலுத்தி பெறப்படும் சான்றுக்கு, இனி, 200 ரூபாய் செலவிட நேரிடும். இப்படி 4 நகல்களுடன் ரூ.50க்கு பெறப்பட்ட சான்று இனி, 1,000 ரூபாய்க்கே பெற முடியும்.

ஒரு மனிதனின் வாழ்வில் பிறப்பும், இறப்பும் மாநகராட்சியுடன் இணைந்திருக்கிறது. சுகாதாரப் பிரிவு மூலமாக இவ்விரு சான்றுகளும் வழங்கப்படும். மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ குழந்தை பிறந்தால், அருகாமையில் உள்ள வார்டு அலுவலகத்தில் பதிய வேண்டும்.

பின், பெயருடன் கூடிய சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும். மயானத்தில் வழங்கும் சான்று நகல் இணைத்தால் மட்டுமே, இறப்பு சான்று வழங்கப்படும். சான்று வாங்க மக்களை அலைக்கழிக்க கூடாது என்பதற்காக, வீட்டு முகவரிக்கு, 'கூரியர்' சேவை மூலமாக அனுப்பப்படுகிறது.

கோவையில் தற்போது ஒரு பிறப்பு சான்று பெற கட்டணம் ரூ.5, கூடுதலாக பெறப்படும் ஒவ்வொரு நகலுக்கும் தலா ரூ.5 வசூலிக்கப்படும். 5 சான்று பெற ரூ.25, கூரியர் கட்டணம் ரூ.25 என, ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இறப்பு சான்றுக்கும் இதே கட்டணம்.

தற்போது ஒரு சான்று பெற ரூ.200 என கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. கூடுதல் நகல் பெற, தலா ரூ.200 செலுத்த வேண்டும். அசல் சான்று ஒன்றுக்கு ரூ.200, கூடுதலாக 4 நகல் கேட்டால் ரூ.800, தபால் கட்டணம் சேர்த்து, 1,025 ரூபாய் வரை செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதுவரை ரூ.50 செலுத்தினால், 5 சான்று பெற்றவர்கள், இனி, ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலவிட வேண்டி இருக்கும்.

தாமதக் கட்டணமும்...

பிறப்போ, இறப்போ, 21 நாட்களுக்குள் பதிய வேண்டும். 21 நாட்களில் இருந்து, 30 நாட்களுக்குள் பதிந்தால், தாமதக்கட்டணம் ரூ.2, ஓராண்டுக்குள் பதிந்தால், ரூ.5, ஓராண்டுக்குபின் பதிந்தால், ரூ.10 என, வசூலிக்கப்பட்டது.

இக்கட்டணம் ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், தேடுதல் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டது. இது, 100 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பிறப்பு, இறப்பு சான்று பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தி, தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அக்., மாதமே அமல்படுத்தி இருக்க வேண்டும். மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக, கட்டணத்தை உயர்த்தவில்லை.

'தணிக்கைத்துறை ஆட் சேபனை ஏற்படக்கூடிய சூழல் வரலாம் என்பதால், மாமன்றத்தில் பதிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றி அமல்படுத்தப்படும். புதிய கட்டண விகிதங்கள், டிச., 1 முதல் நடைமுறைக்கு வரும். கட்டணம் அதிகம் என்றாலும், அரசு உத்தரவை செயல்படுத்த வேண்டிய இடத்தில், நாங்கள் இருக்கிறோம்' என்றனர்.

அசலுக்கும், நகலுக்கும்ஒரே கட்டணம் எதற்கு?

ரூ.5க்கு வழங்கி வந்த பிறப்பு, இறப்பு சான்று கட்டணத்தை ரூ.200 ஆக, தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. ஒரே நேரத்தில், 40 மடங்கு உயர்வாகி உள்ளது. நகல் வாங்கவும் ரூ.200 என நிர்ணயம் செய்திருப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசு துறை தொடர்பான சில பணிகளுக்கு அசல் பிறப்பு சான்றுகளே கேட்கப்படுகின்றன. அதனால், சான்று கேட்டு விண்ணப்பம் செய்வோர், 4 நகல் பெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கில் பணம் கேட்பது, மக்களை சிரமப்படுத்துவதாக அமையும். அதனால், நகல் சான்று பெறுவதற்கு, 'பிரிண்ட்' எடுக்க தேவைப்படும் காகித செலவினத் தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

'கசக்கி பிழியும் செயல்'உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், நிர்வாகம் நடத்தவே, தனி அதிகாரி என்கிற அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சமயத்தில், எவ்வித கட்டணத்தையும் உயர்த்தக் கூடாது. சதுரடி கணக்கில் குடிநீர் கட்டணம், 'டிபாசிட்' நிர்ணயித்திருப்பது அராஜகம். 'மினி எமர்ஜென்சி' போல், மாநகராட்சி செயல்படுகிறது. கட்டண உயர்வு மக்களை கசக்கிப் பிழியும் செயல்.

ராமமூர்த்திமாவட்ட செயலாளர், மா.கம்யூ.,'சம்பாதிக்கும் இடமாகிறது'மக்களுக்கு சேவை செய்யும் உணர்வுடன் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட வேண்டும். அதற்காக பிறப்பு, இறப்பு சான்றுகளை இலவசமாக வழங்க வேண்டும் என்பதில்லை; அதற்கு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். சமீபகாலமாக பணம் சம்பாதிக்கும் இடமாக, உள்ளாட்சி அமைப்புகள் மாறி வருகின்றன.கல்யாண சுந்தரம்முன்னாள் தலைவர், மாநகராட்சி கல்விக்குழு.

 

பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க வழக்கு

Print PDF

தினமலர்       22.11.2017

பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க வழக்கு

மதுரை, ''மதுரையில் பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க தாக்கலான வழக்கில், மாநகராட்சி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு ஜெயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் தாக்கல் செய்த மனு:

சொத்துவரி செலுத்தக்கோரி எங்கள் பள்ளிக்கு மாநகராட்சி கமிஷனர் 2016 ல் நோட்டீஸ் அனுப்பினார். நாங்கள் கல்வி சார்ந்த அறப்பணியில் ஈடுபட்டுள்ளோம். கட்டடத்தை கல்வி கற்பிக்கும் நோக்கத்திற்கு  பயன்படுத்துகிறோம். சொத்துவரி செலுத்துவதிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விலக்களிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. கமிஷனரின் நோட்டீைச ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுபோல் 63 தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு:

மதுரை மாநகராட்சி சட்டப்படி சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, மாநகராட்சிநிர்வாகத்திடம் மனுதாரர்கள் 2 வாரங்களில் மனு அளிக்க வேண்டும். அதை சட்டத்திற்குப்பட்டுகமிஷனர் பரிசீலிக்க வேண்டும். தங்கள் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் ஆவணங்களை மனுதாரர்கள் தாக்கல்செய்ய வேண்டும். மனுதாரர்கள் விளக்கமளிக்க போதிய வாய்ப்பளித்து, அது தொடர்பான நடைமுறைகளை 6வாரங்களில் மாநகராட்சி நிர்வாகம் முடிக்க வேண்டும். கோரிக்கையை மாநகராட்சி கவுன்சில்அனுமதிக்கும்பட்சத்தில், மனுதாரர்கள் சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கிற்கான உரிமையை பெறுவர்.

இல்லாதபட்சத்தில் சட்டத்திற்குட்பட்டு சொத்து வரியை வசூலிக்க கமிஷனர் நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது, என்றார்.

Last Updated on Wednesday, 29 November 2017 07:22
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 148