Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

குப்பை தொட்டி விவகாரம் வியாபாரிகள் சாலைமறியல்

Print PDF
தினகரன்                     26.03.2013

குப்பை தொட்டி விவகாரம் வியாபாரிகள் சாலைமறியல்


கோவை: கோவை பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் சார்பில் மாநகராட்சிக்கு சொத்து வரி ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. இதுபற்றி மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் தமிழ்வேந்தன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேரில் விளக்கம் கேட்டனர். காலஅவகாசமும் கொடுத்தனர். ஆனாலும், நிலுவை தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை இரண்டு ராட்சத குப்பை தொட்டிகளை இவ்வணிக வளாகம் முன்புறம் பாலக்காடு மெயின் ரோட்டின் ஓரமாக வைத்துவிட்டு சென்றனர். குப்பை தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வணிக வளாக உரிமையாளர் மற்றும் இதர வியாபாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. குப்பை தொட்டிகளை அகற்றி, வேறு இடத்தில் வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் சுமார் 100 பேர் ஒன்றுதிரண்டு நேற்று மதியம் பாலக்காடு மெயின் ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை மறியல் போராட்டம் நடந்தது. குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்றனர். வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. கடைசிவரை குப்பை தொட்டி அகற்றப்படவில்லை.
 

ரூ. 412 கோடி சொத்து வரி வசூல்: மாநகராட்சி தகவல்

Print PDF
தினமணி                        26.03.2013

ரூ. 412 கோடி சொத்து வரி வசூல்: மாநகராட்சி தகவல்

2012-13ஆம் நிதியாண்டில் சுமார் ரூ. 412 கோடி சொத்து வரியை சென்னை மாநகராட்சி வசூலித்துள்ளது.

சென்னையில் சொத்து வரி, மாநகராட்சியால் வசூல் செய்யப்படுகிறது. சொத்து வரியை வசூல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிதியாண்டில் ரூ. 500 கோடி வரை சொத்து வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ. 411.79 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியால் வசூல் செய்யப்பட்ட சொத்து வரியிலே இதுதான் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: இந்த நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், சொத்துவரி வசூல் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் நோட்டீஸ் அளித்தவுடன் வரியை செலுத்திவிடுகிறார்கள். இதுவரையில் சுமார் ரூ. 411.79 கோடி சொத்து வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இணையதளம் மற்றும் வங்கிகள் மூலமாக ரூ. 9.92 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டு முடிய இன்னும் 6 நாள்கள் இருப்பதால் மேலும் ரூ. 30 முதல் 40 கோடி வரை வசூல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று தெரிவித்தனர். கடந்த 2009-10ஆம் நிதியாண்டில் ரூ. 369.32 கோடியும், 2010-11-ல் ரூ. 373.39, 2011-12-ல் ரூ. 314.55 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ. 18 கோடி அளவுக்கு வரி பாக்கி உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 

மதுக்கரை பேரூராட்சியில் 100 சதவீத வரி வசூல்

Print PDF
தினகரன்                   25.03.2013

மதுக்கரை பேரூராட்சியில் 100 சதவீத வரி வசூல்


கோவை: மதுக்கரை பேரூராட்சியில் வரி வசூல் பணி தீவிரமாக நடத்தப்பட்டது. நடப்பாண்டில் குடிநீர் வரியாக 21.82 லட்ச ரூபாயும், சொத்து வரியாக 22.50 லட்ச ரூபாயும், தொழில் வரியாக 6.86 லட்ச ரூபாயும் வசூலிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக மதுக்கரை பேரூராட்சியில் வரி வசூல் மந்தமாக நடந்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக பேரூராட்சி நிர்வாகம் 100 சதவீத வரி வசூல் இலக்கை எட்டியுள்ளது. விடுமுறை தினங்களில் வரி வசூல் நடத்தப்பட்டது. பேரூராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வரியினங்களை வசூல் செய்துள்ளனர். 100 சதவீத வரி வசூல் காரணமாக பேரூராட்சி பணிகள் திட்ட பணிகள் வேகமாக நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ்ராம் தெரிவித்தார்.
 


Page 20 of 148