Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

தூத்துக்குடி மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்

Print PDF
தினமணி      27.03.2013

தூத்துக்குடி மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்


தூத்துக்குடி மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. கடந்தாண்டு கணக்குப்படி ரூ. 3.14 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மேயர் எல்.சசிகலா புஷ்பா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையர் சோ. மதுமதி, துணை மேயர் பி. சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின்போது, 2013-14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறியது:

20012-13 ஆம் ஆண்டில் வரவு-செலவு அறிக்கையை மாமன்றம் அங்கீகரித்ததின்பேரில் 2012-13 ஆம் ஆண்டுக்கு வருவாய் நிதியில் ரூ. 3.92 கோடி பற்றாக்குறை உத்தேசம் ஏற்படும் என உத்தேச வரவு-செலவு அனுமதிக்கப்பட்டது. ஆனால், இறுதிசெய்யப்பட்டதில் ரூ. 3.14 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2013-14 ஆம் ஆண்டுக்கான வருவாய் நிதியில் ரூ. 1.4 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்றும் குடிநீர் நிதியில் ரூ. 4.41 கோடி உபரி வருமானம் வரும் என்றும், கல்வி நிதியில் ரூ. 75.25 லட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் என்றும் உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சொத்துவரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலமாக ரூ. 10.50 கோடியும், அரசு சுழல்நிதியாக ரூ. 21.50 கோடியும், அரசு மானியமாக ரூ. 4.10 கோடியும், ஏனைய வருமானங்கள் மூலமாக ரூ. 6.35 கோடியும் என மொத்தம் ரூ. 42.45 கோடி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், நிகழாண்டுக்காக சாலை பராமரிப்பு மற்றும் கட்டடப் பராமரிப்பு போன்றவைகளுக்காக

ரூ. 1.50 கோடியும், திட்டச் செலவுகளுக்காக ரூ. 10 லட்சமும், பொது சுகாதார பணிகளுக்காக ரூ. 4.25 கோடியும் செலவாகும். சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 38 கோடியும் என மொத்தம் ரூ. 43.85 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிகழாண்டில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை தொகை ரூ. 1.40 கோடியை ஈடு செய்ய செலவினத்தை குறைவு செய்வதின் மூலமும், சொத்துவரி, தொழில்வரி மற்றும் இதர வருமானங்களை அதிகரிப்பதின் மூலமாகவும் சில இனங்களுக்கு அரசு மானியம் பெற முயற்சிகள் மேற்கொண்டும் திருந்திய வரவு-செலவு மதிப்பீடு பட்டியல் படி கண்காணிக்கலாம்.

மேலும், நிகழாண்டில் பக்கிள் ஓடை சீரமைப்பு, புதை சாக்கடை திட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் நிதி, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி புனரமைப்புத் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அரசின் இதர திட்டங்களின் மூலமாக மானியம் மற்றும் கடன் தொகையாக ரூ. 81.31 கோடி வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில்,

ரூ. 78.55 கோடி செலவிடலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிகழாண்டில் குடிநீர் வரியாக ரூ. 6 கோடியும், அரசு மானியமாக ரூ. 10 கோடியும், இதர வருமானமாக ரூ. 9.36 கோடியும் என மொத்தம் ரூ. 25.36 கோடி வருமானமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரூ. 20.94 கோடி செலவாகலாம் என்றும் உபரியாக

ரூ. 4.41 கோடி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, நிகழாண்டில் கல்வி வரியாக ரூ. 2.95 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரூ. 2.19 கோடி செலவு ஆகும் என்றும் உபரியாக ரூ. 72.25 லட்சம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

முன்னதாக, மாமன்ற உறுப்பினர்கள் அனுமதியுடன் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
 

தஞ்சை நகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்: ரூ. 7.33 கோடி பற்றாக்குறை

Print PDF
தினமணி      27.03.2013

தஞ்சை நகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்: ரூ. 7.33 கோடி பற்றாக்குறை  


தஞ்சை நகராட்சியில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2013 - 14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிகர பற்றாக்குறை ரூ. 7.33 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசியது:
 
 'நகராட்சி எல்லைக்கு உள்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும், எல்லா வித அத்தியாவசிய வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2013 - 14 ஆம் நிதியாண்டில் தரமான சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, புதை சாக்கடை வசதி, குடிசைப் பகுதிகளில் மேம்பாட்டு வசதிகளை மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் பெருகி வரும் சுற்றுலா பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு சிவகங்கை பூங்கா, ராஜப்பா பூங்காவை ரூ. 24.42 கோடி மதிப்பில் அழகுப்படுத்தப்படவுள்ளன.

நகராட்சியில் 2012, 2013 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு அந்தந்த பகுதியில் இலவசமாகப் பிறப்பு சான்று வழங்கப்படும். இந்தப் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. நகராட்சியின் வரி வசூல் திறனை மேம்படுத்திடும் வகையில் நகராட்சி வருவாய் அலுவலர், வருவாய் ஆய்வர்களுக்கு கணினி, மடிக்கணினி வழங்கப்படும்.

மின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அலுவலகக் கட்டடம், நகராட்சிப் பள்ளிகளில் சூரியஒளி மின்சாதன விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நகராட்சி எல்லைக்குள் மரக்கூண்டுடன் 1,000 மரக்கன்றுகள் நடப்படும்.

வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் உள்ளூர் திட்டக் குழுமம், திட்ட மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4.11 கோடி மதிப்பில் பணிகளை மேற்கொள்ளத் திட்ட முன்மொழிவுகளைத் தயார் செய்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.18 கோடிக்கு பணிகள் மேற்கொள்ள திட்ட முன்மொழிவுகள் தயார் செய்து அனுப்பப்படவுள்ளது.

தஞ்சை நகரில் பெருகி வரும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி பாதுகாக்ப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே குடிநீரேற்றும் ஆதாரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வருகிற நிதியாண்டில் நகராட்சியின் அனைத்து தலைப்புகளிலும் மொத்த நிதி வரவினம் ரூ. 136.27 கோடியாகவும், மொத்த செலவினம் ரூ. 143.60 கோடியாகவும் எதிர்பார்த்து வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாயில் நிகர பற்றாக்குறை ரூ. 7.33 கோடி எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 5.36 சதம் பற்றாக்குறை.

இந்தப் பற்றாக்குறையைச் சரி செய்ய ஒருங்கிணைந்த நிதி நிர்வாகத்தின் மூலம் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தப்படவுள்ளது. மேலும், நகராட்சி வருவாய் இனங்களில் ஏற்படும் இழப்பைத் தவிர்த்து, வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் சாவித்திரி கோபால். நிகழ் நிதியாண்டில் வரவு ரூ. 86.54 கோடியாகவும், செலவு ரூ. 99.19 கோடியாகவும், பற்றாக்குறை ரூ. 12.65 கோடியாகவும் உள்ளது.
 

கரூர் நகராட்சி பட்ஜெட்; ரூ. 4 கோடி பற்றாக்குறை

Print PDF
தினமணி      27.03.2013

கரூர் நகராட்சி பட்ஜெட்; ரூ. 4 கோடி பற்றாக்குறை


கரூர் நகராட்சியில் 2013-14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ. 4 கோடி பற்றாக்குறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டத்துக்கு அதன் தலைவர் எம். செல்வராஜ் தலைமை வகித்து, இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் விவரம்:

வரவு: 2013-14-ம் ஆண்டுக்கு பொது நிதி மூலம் வருவாய் நிதியாக ரூ. 30.56 கோடி, மூலதன நிதியாக ரூ. 17.76 கோடி,  குடிநீர் வடிகால் நிதி மூலம் வருவாய் நிதி ரூ. 10.38 கோடி, மூலதன நிதி ரூ. 55 கோடி. ஆரம்பக் கல்வி நிதி மூலம் வருவாய் நிதி ரூ. 1.87 கோடி, மூலதன நிதி 1.8 கோடி என மொத்த வரவு ரூ. 117.38 கோடி.

செலவு: பொது நிதி மூலம் வருவாய் செலவு ரூ. 30.86 கோடி, மூலதன செலவு ரூ. 16.46 கோடி, குடிநீர் வடிகால் நிதி மூலம் வருவாய் செலவு ரூ. 19.22 கோடி. மூலதன செலவு ரூ. 52.01 கோடி. ஆரம்ப கல்வி நிதி மூலம் வருவாய் செலவு 1.83 கோடி, மூலதன நிதி செலவு ரூ. 1.04 கோடி. மொத்த செலவு ரூ. 121.42 கோடி

மொத்த வரவு ரூ. 117.38 கோடி, மொத்த செலவு ரூ. 121.42 கோடி. பற்றாக்குறை ரூ. 4.04 கோடி.

வெளிநடப்பு: முன்னதாக, நகர்மன்றக் கூட்டம் தொடங்கியவுடன், தேமுதிக உறுப்பினர்கள் நாகராஜ், மாலதி, யமுனா, திமுக உறுப்பினர் நாராயணன், திமுக ஆதரவு உறுப்பினர் ரவிக்குமார், காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீபன் பாபு ஆகியோர் தமிழக சட்டப்பேரவையில் 6 தேமுதிக உறுப்பினர்கள் ஓராண்டுக்கு அவை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

இவர்களில் ஸ்டீபன் பாபு மட்டும் சிறிது நேரம் கழித்து நகர்மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் நடைபெற்ற விவாதம்:

ஜெகதீஸ்: எனது வார்டில் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிரது. குடிநீர் குழாய்களை சீரமைத்து, முறைப்படி குடிநீர் வழங்க வேண்டும்.

எம். செல்வராஜ் (தலைவர்): குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அனைத்து வார்டுகளிலும், ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டுக் குடிநீர் பணிகள் நடைபெற்று வருவதால், சில இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளன. அவை விரைவில் சரி செய்யப்படும்.

பரமசிவம்: பல வார்டுகளில் குப்பை முறையாக அள்ளப்படுவதில்லை. பல வார்டுகளுக்கு குப்பை அள்ள ஒதுக்கப்பட்ட லாரிகள் வேறு இடங்களில் இயங்குகின்றன.

எம். செல்வராஜ் (தலைவர்): அனைத்து வார்டுகளிலும் முறையாக குப்பை அள்ளப்படும்.

ஸ்டீபன் பாபு: மக்கள் வரிப்பணம் பல கோடியில் கட்டப்பட்ட நகராட்சி புதிய கட்டடம் திறக்கப்படாதது ஏன்?

எம். செல்வராஜ் (தலைவர்): சில பணிகள் எஞ்சியுள்ளன. இன்னும் ஒரு மாத காலத்தில் புதிய கட்டடத்துக்கு செல்லலாம்.

ஸ்டீபன் பாபு: அடுத்த நகர்மன்றக் கூட்டம் புதிய கட்டடத்தில் நடைபெறாவிடில், புதிய கட்டடத்தில் மக்களைத் திரட்டி, நகர்மன்றக் கூட்டம் நடத்துவேன். நீங்கள் எல்லாம் அங்கு வந்து கலந்து கொள்ளும் நிலை ஏற்படும். மேலும், புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து நகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

எம். செல்வராஜ்: புதிய பேருந்து நிலையம் தொடர்பாக அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.
 


Page 6 of 31