Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

திருச்சி மாநகராட்சியில் ரூ. 18 கோடி பற்றாக்குறை பட்ஜெட்

Print PDF
தினமணி         12.03.2013

திருச்சி மாநகராட்சியில் ரூ. 18 கோடி பற்றாக்குறை பட்ஜெட்


திருச்சி மாநகராட்சியில் 2013-14-ம் ஆண்டுக்கான ரூ. 18.36 கோடி பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி மாநகராட்சி மாமன்றத்தின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயர் அ. ஜெயா தலைமை வகித்தார். ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் ம. ஆசிக் மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 2013-14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதிக் குழுத் தலைவர் வி. அய்யப்பன் வாசித்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்:

2013-14-ல் உத்தேசிக்கப்படும் மொத்த வரவு- ரூ. 260.38 கோடி, செலவு -

ரூ. 278.74 கோடி. பற்றாக்குறை- ரூ. 18.36 கோடி. இந்தப் பற்றாக்குறை நிலுவையிலுள்ள வரி வருவாய் மூலம் ஈடுகட்டப்படும்.

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம்: ரூ. 28.20 கோடியில் தனியார் நிறுவனம் மூலம் குழல் விளக்குகளுக்குப் பதிலாக "எல்இடி' மின்விளக்குகளைப் பொருத்தும் பணி. ரூ. 21.65 கோடியில் மழைநீர் வடிகால்கள், ரூ. 2.94 கோடியில் சிமென்ட் கான்கிரீட் சாலைகள், ரூ. 15.10 கோடியில் புதிய சாலைகள் அமைத்தல்.

தற்போதுள்ள அரியமங்கலம் குப்பைக் கிடங்கின் வடகிழக்கு மூலையில் குப்பைகளை சிரமமின்றிக் கொட்டுவதற்காக ரூ. 8.02 கோடியில் காலியிடம் ஏற்படுத்தும் பணி.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலைச் சுற்றி மதில் சுவர் உள்ள பகுதிகள் மற்றும் மாநகரின் விடுபட்ட பகுதிகளில் ரூ. 50 கோடியில் புதை சாக்கடைத் திட்டம்.

மொத்தத்தில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 129.21 கோடியில் பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய குடிநீர் திட்டம்: திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான 61 முதல் 65 வரையுள்ள வார்டுகளுக்கு நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில், ரூ. 31.50 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம்.

மேலும், மாநகர் முழுவதும் தேவைக்கேற்க மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக  ரூ. 80 லட்சத்தில் குடிநீர் விநியோக வாகனங்கள் வாங்கப்படும்.

"தீம் பார்க்': பஞ்சப்பூரில் 15 ஏக்கரில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தண்ணீர் விளையாட்டுப் பூங்கா அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அறிவியல் பூங்கா: ரூ. 3 கோடியில் தென்னூர் அண்ணா நகரில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 2.65 ஏக்கரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அறிவியல் பூங்கா.

மேலும், திருச்சி மாநகரிலுள்ள பழைய பூங்காக்களில் மரம் வளர்க்கவும், புல்தரைகள் அமைக்கவும் ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு.

பொதுக் கழிப்பறைகள்... பொதுக் கழிப்பறைகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர்த் தொட்டிகளில் கழிவுநீரை உறிஞ்சுவதற்கு ரூ. 25 லட்சத்தில் வாகனம்.

திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்க, 7 இடங்களில் ரூ. 75 லட்சத்தில் புதிய கழிப்பறைகள். மேலும், 32 இடங்களில் உள்ள பழைய கழிப்பறைகளை மேம்படுத்த ரூ. 50 லட்சம்.
 

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்

Print PDF
தினமணி         11.03.2013

இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்


சென்னை மாநகராட்சியின் இந்த நிதியாண்டுக்கான (2013-14) பட்ஜெட் திங்கள்கிழமை (மார்ச் 11) தாக்கல் செய்யப்படுகிறது.

மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தில் நிதிநிலைக் குழுத் தலைவர் சந்தானம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். இதில் புதிய திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.3 ஆயிரத்து 500 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு வரை 155 வார்டுகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சிப் பகுதி, அதன் பிறகு 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 921 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சாலை மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கல்வி, சுகாதாரம், மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்து வரி சீராய்வு: பழைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் விதிக்கப்படும் சொத்துவரியை விட விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு 2 மடங்கு அதிகமாக விதிக்கப்படுகிறது. மாநகராட்சி முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்புகளுக்கான சீராய்வு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொசுத் தொல்லை, போக்குவரத்து நெரிசல், கிடப்பில் போடப்பட்ட பழைய திட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிடப்பில் உள்ள திட்டங்கள்: கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படாமலே உள்ளன. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிலாவது விரைவில் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று மாமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். மாநகராட்சி முழுவதும் உள்ள குப்பை, மழைநீர் கால்வாய், குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், நிதித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
 

மார்ச் 11-ல் திருச்சி மாநகராட்சி பட்ஜெட்!

Print PDF
தினமணி          09.03.2013

மார்ச் 11-ல் திருச்சி மாநகராட்சி பட்ஜெட்!

திருச்சி மாநகராட்சியின் 2013-14-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, மார்ச் 11-ம் தேதி நடைபெறும் மாமன்றத்தின் அவசரக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேயர் அ. ஜெயா தலைமை வகிக்கிறார். ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் ம. ஆசிக் மீரா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி. அய்யப்பன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கிறார்.

2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சி மாமன்றத்தை அதிமுக கைப்பற்றிய பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதிநிலை அறிக்கை இது.

மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்ப விரிவடைந்து வரும் திருச்சி மாநகருக்கான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க முக்கிய பணிகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்றன. இந்த நிதிநிலை அறிக்கையில் இவை இடம்பெறலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறைகேட்பு கூட்டம் ரத்து

திருச்சி மாநகராட்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளதால், வழக்கமாக திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டம் அன்று நடைபெறாது என மேயர்  அ. ஜெயா அறிவித்துள்ளார். அடுத்த வாரம் (மார்ச் 18) முதல் வழக்கம்போல, மேயர் தலைமையில் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள் நடைபெறும்.
 


Page 11 of 31