Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

புது நகர் வளர்ச்சி குழுமத்தில் நிதி முடக்கம்: பயன்பாடு இல்லாமல் ரூ.8 கோடி

Print PDF

தினமலர்            01.12.2010

புது நகர் வளர்ச்சி குழுமத்தில் நிதி முடக்கம்: பயன்பாடு இல்லாமல் ரூ.8 கோடி

ஓசூர்: ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் உள்ள 8 கோடி ரூபாய் எந்த வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு செலவழிக்கப்படாமல் முடங்கி போய் உள்ளது. தமிழக நகர் ஊரமைப்பு துறையின் கீழ் ஓசூர் புது நகர் வளர்ச்சி குழுமம் செயல்படுகிறது. இதன் தலைவராக கலெக்டர் அருண்ராய் உள்ளார். உறுப்பினர்களாக ஓசூர் எம்.எல்.., கோபிநாத், வேலூர் நகர் ஊரமைப்பு துணை இயக்குனர், தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம் செயற்பொறியாளர், "ஹோஸ்டியா' சேர்மன் ஆகியோர் உள்ளனர். புது நகர் வளர்ச்சி குழுமத்தின் மூலம் ஓசூர் நகராட்சி, மத்திகிரி டவுன் பஞ்சாயத்து மற்றும் 56 புறநகர் கிராமங்களில் புதிதாக அமைக்கப்படும் வீட்டுமனைகள், வீடுகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கப்படுகிறது. கட்டிட மற்றும் வீட்டுமனை உரிமையாளர்கள் அங்கீகாரம் பெறுவதற்கு புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் சதுர அடிக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் புதுநகர் வளர்ச்சி குழுமத்துக்கு மாதந்தோறும் பல லட்சம் வருமானம் கிடைத்து வருகிறது. ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்தினர் இந்த நிதியை பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளில் புதிய சாலைகள், ஏரிகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளவும் உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி செலவிடலாம்.

மாதம் ஒரு முறை கலெக்டர் தலைமையில் புதுநகர் வளர்ச்சி குழும உறுப்பினர்கள் கூடி ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள நிதியை பயன்படுத்தி புதிய திட்டங்களுக்கு செலவிடலாம். ஆனால், கடந்த நான்கு ஆண்டாக புதுநகர் வளர்ச்சி குழு நிர்வாக குழு கூட்டம் முறையாக நடக்கவில்லை. இதனால், புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் வசூலாகும் நிதி, பொதுமக்களின் அடிப்படை வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்பாமல் தற்போது 8 கோடி ரூபாய் நிதி முடங்கி போய் உள்ளது. இந்நிலையில், கலெக்டர் அருண்ராய் தலைமையில் புதுநகர் வளர்ச்சி குழும உறுப்பினர்களை அழைத்து, முடங்கி போய் உள்ள நிதியை பயன்படுத்தி ஓசூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கும், ராமநாயக்கன் ஏரியை அழகுப்படுத்தும் திட்டத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என கூறி முடிவு செய்தனர். இதற்கு தமிழக நகர் ஊரமைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் முடங்கி போய் 8 கோடி ரூபாய் நிதியை மக்களின் அடிப்படை வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும், புதிய திட்டங்களை மேற்கொள்ளவும் பயன்படுத்த முடியாமல் புதுநகர் வளர்ச்சி குழும நிர்வாக குழு பெயரளவில் மட்டும் செயல்படுகிறது.

 கடந்த இரு ஆண்டுக்கு புதுநகர் வளர்ச்சி குழுமத்தின் சேர்மனாக இருந்த அப்போதைய கலெக்டர் சந்தோஷ்பாபுவும் புதுநகர் வளர்ச்சி குழும நிதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தார். ஆனால், அவரது நடவடிக்கைக்கும் நகர ஊரமைப்பு துறை நிர்வாகம் அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது. இதனால், புதுநகர் வளர்ச்சி குழுமத்தின் சேர்மனாக இருக்கும் கலெக்டர் மற்றும் உறுப்பினர்களாக இருக்கும் அரசு துறை அதிகாரிகள் புதுநகர் வளர்ச்சி குழுமத்தின் செயல்பாடுகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர். இதனால், புதுநகர் வளர்ச்சி குழும நிதி எந்த பயன்பாட்டிற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது.

 

விளம்பர நிறுவனத்துக்கு சலுகை பெங்களூர் மாநகராட்சிக்கு ரூ30கோடி இழப்பு

Print PDF

தினகரன்              01.12.2010

விளம்பர நிறுவனத்துக்கு சலுகை பெங்களூர் மாநகராட்சிக்கு ரூ30கோடி இழப்பு

பெங்களூர், டிச. 1: சட்ட விதிமுறை மீறி தனியார் நிறுவனத்துக்கு விளம்பரம் செய்ய ஸ்கைவே பாலத்தில் அனுமதி வழங்கியுள்ளதால், மாநகராட்சிக்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எம்.நாகராஜ் குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவரளித்த பேட்டி: விதானசவுதாவை சுற்றியுள்ள பகுதி ஏ பிரிவு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இப்பகுதியை ஒட்டியுள்ள கே.ஆர்.சாலை, பசவேஸ்வர சதுக்கம், ராஜ்பவன் சாலை, இன்பென்ட்ரி சாலை, அரண்மனை சாலை மற்றும் அதன் சுற்று பகுதியில் விளம்பரம் பலகை வைக்க அனுமதிக்ககூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தால் ஏ பிரிவு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள சோபியா பள்ளி அருகில் மாநகராட்சி அமைத்துள்ள ஸ்கைவே பாலத்தில் வாண்டேஜ் என்ற தனியார் நிறுவனம் விளம்பர பலகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாண்டேஜ் நிறுவனம் சார்பில் ஏற்கனவே விளம்பரம் செய்ய ஜெயநகரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்துவிட்டு சோபியா பள்ளி அருகில் விளம்பரம் செய்ய அமைச்சரின் சிபாரிசை ஏற்று மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. மிகக்குறைந்த கட்டணத்தில் வாடகை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்து முறைகேட்டில் தொடர்புள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக இதுவரை மேயருக்கு 283 கடிதம் எழுதியுள்ளேன். ஒருசில கடிதங்களுக்கு மட்டும் பதில் கொடுத்து முக்கிய பிரச்னைகள் தொடர்பான கடிதங்களுக்கு இன்னும் பதில் எழுதவில்லை. பொதுவாக மேயருக்கு எழுதும் கடிதத்திற்கு 7 நாட்களுக்குள் பதில் எழுத வேண்டும் என்பது விதிமுறை உள்ளது. இதை பின்பற்றவில்லை. எனவே வரும் வியாழகிழமை (நாளை) முதல்வர் மேயர் மற்றும் ஆணையர் எங்கு சென்றாலும், அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Wednesday, 01 December 2010 05:32
 

மாநகராட்சி ஏலத்தில் கடை வாடகை உச்சம் 6 கடைகள் மூலம் கூடுதல் வருவாய்

Print PDF

தினமலர்              01.12.2010

மாநகராட்சி ஏலத்தில் கடை வாடகை உச்சம் 6 கடைகள் மூலம் கூடுதல் வருவாய்

சேலம்: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான ஆறு கடைகள் நேற்று அதிகபட்ச வாடகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைக்கும். சேலம் மாநகராட்சி சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளிலும் மாநகராட்சிக்கு சொந்தமாக 500 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.

இரண்டு ஆண்டுக்கு முன் நிதிநிலையை பெருக்க மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கூடுதலாக கடைகள், வணிக வளாகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி கடைகளுக்கான ஏலத்தில் எப்போதும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கம் அதிகளவு இருக்கும். குறிப்பாக பிரதான பகுதிகளில் உள்ள கடைகள், காய்கறி மார்க்கெட், சைக்கிள் ஸ்டாண்டு ஆகியவற்றை கைப்பற்றுவதில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கிடையே கூட மோதல் ஏற்படும் சூழல் உருவாகும். சில மாதங்களுக்கு முன் அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட நான்கு ரோடு பகுதியில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஆறு கடைகள் கட்டப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன் கடைக்கு ஏலம் விடப்பட்டது. மாநகராட்சியில் நிர்ணயம் செய்த ஏலத் தொகையை செலுத்தி கடைகளை ஏலம் எடுக்க ஒரு சிலர் முன் வந்தனர். ஆனால், கட்சி பிரமுகர்களின் ஆதிக்கத்தால், ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஆறு கடைகளுக்கு மீண்டும் திறந்த வெளி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஒவ்வொரு கடைக்கும் சால்வன்சி மதிப்பு தொகை இரண்டு லட்சம் ரூபாயாகவும், மின் கட்டணத்துக்கான டெபாஸிட் தொகை 10 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

பிரதான பகுதியில் அமைந்துள்ள கடைகளை வாடகைக்கு எடுப்பதில் பலர் ஆர்வம் காட்டினர். நேற்று 25 க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்து கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் முன் ஏலம் நடத்தப்பட்டது. கடை எண் 1 செங்கோடன் என்பவர் 13 ஆயிரம் ரூபாய்க்கும்(மாத வாடகை), கடை எண் 2 கதிர் ராஜரத்தினம் எட்டாயிரம் ரூபாய்க்கும், கடை எண் 3 பொன்னி கூட்டுறவு அங்காடி சார்பில் 14 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், கடை எண் 4 நெப்போலியன் என்பவர் 16 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், கடை எண் 5 விஸ்வநாதன் என்பவர் 15 ஆயிரம் ரூபாய்க்கும், கடை எண் 6 வைரமணி என்வர் 8, 500 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் அதிகப்பட்சம் 7.000 ரூபாய்க்கும்(மாத வாடகை), பழைய பஸ் ஸ்டாண்டில் 5,000 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக கடைகள் 8,000 ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாய் வரைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு ஏலத்தொகையை நிர்ணயம் செய்ததே இதற்கு காரணமாகும். கடையை ஏலம் எடுத்தவர்கள் முன்பணம் மற்றும் சால்வன்சி தொகையை செலுத்தி சென்றனர். கடை வாடகை உச்சப்பட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடை அளவு 150 சதுர அடி: நான்கு ரோடு பகுதியில் அதிகப்பட்ச தொகைக்கு ஏலம் போன ஆறு கடைகளும் 150 சதுர அடி கொண்டதாகும். வழக்கமாக ஏலத்தின் போது கட்சி பிரமுகர்களின் ஆதிக்கம் இருக்கும். ஆனால், நேற்று ஆளுங்கட்சி பிரமுகர்கள் யாரும் இந்த பக்கம் தலைகாட்டாமல் ஆச்சர்யப்பட வைத்தனர். இரண்டு போலீஸார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எந்த பிரச்னையும் இல்லாமல் ஏலம் சுமூகமாக முடிந்தது.

 


Page 11 of 37