Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு, முதல்முறையாக விலையில்லா சீருடை மற்றும் காலணிகள்

Print PDF

தினத்தந்தி              07.02.2014

மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு, முதல்முறையாக விலையில்லா சீருடை மற்றும் காலணிகள்

சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை மற்றும் காலணிகளை மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.

விலையில்லா சீருடை, காலணி

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியின் 2013-14 வரவு-செலவு திட்ட அறிவிப்பில் தனியார் பள்ளிகளை மிஞ்சிடும் வகையில் மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு அழகிய கண்கவர் சீருடை மற்றும் காலணி வழங்கப்படும் என மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

இதனையடுத்து சென்னை மாநகராட்சியின் மழலையர் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் விலையில்லா சீருடை மற்றும் காலணிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி நேற்று அயனாவரம் வசந்தா தோட்டத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மேயர் சைதை துரைசாமி 400 மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை மற்றும் காலணிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தலைவர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, துணை ஆணையர்(கல்வி) ஆர்.லலிதா, 6-வது மண்டலக்குழு தலைவர் வெற்றிநகர் மு.சுந்தர், கவுன்சிலர் எஸ்.சுப்புலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதல்முறையாக...

இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் மழலையர் பள்ளிகளில் பயிலும் மற்ற குழந்தைகளுக்கும் விலையில்லா சீருடை மற்றும் காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின்கீழ் 40 மழலையர் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் 3100 குழந்தைகள் பயின்று வருகின்றனர். மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டு 15 வருடங்களுக்கு பிறகு, முதன் முறையாக விலையில்லா சீருடை தற்போது தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பண்ருட்டி பகுதியில் அரசு பெண்கள் பள்ளி 3ம் தேதி ஆலோசனை கூட்டம்

Print PDF

தினகரன்             01.02.2014

பண்ருட்டி பகுதியில் அரசு பெண்கள் பள்ளி 3ம் தேதி ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி, : கடந்த சில ஆண்டுகளாக பண்ருட்டி நகராட்சி பகுதியில் பெண்களுக்கென தனியாக அரசு பள்ளி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதன் விளைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காப்பு தொகை ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டது.

ஆனால் அதற்கான தொடர் முயற்சி எடுக்காததால் திட்டம் கைவிடப்பட்டது. நகராட்சி பள்ளிகளில் குறைந்த அளவே மாணவர்கள் சேர்கின்றனர். விழமங்கலத்தில் உள்ள நகராட்சி பள்ளி மாணவர்களை மற்றொரு நகராட்சி பள்ளியில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், காலியாக உள்ள விழமங்கலம் நகராட்சி பள்ளியை பெண்களுக்கென தனி பள்ளியாக அமைய ஏற்ற இடமாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ், பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்தபோது, பண்ருட்டியில் பெண்கள் பள்ளி தனியாக அமைவதற்கு போதிய அளவிலான இடவசதியை நகராட்சி செய்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே இது சம்பந்தமாக விவரமான அறிக்கைகள் பரிசீலனையில் உள்ளது. வரும் 3ம் தேதி சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி விரைவில் பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் கூறும் போது, கல்வி சம்பந்தமாக கேட்கப்படும் இடவசதிகள் உடனடியாக செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு பள்ளிக்கு தேவையான இடத்தை சட்டப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம், என்றார். 

உடனடியாக பெண்களுக்கான அரசு பள்ளியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

நகராட்சி பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம்

Print PDF

தினமணி          27.01.2014 

நகராட்சி பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம்

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாதிரி நாடாளுமன்றம் நடைபெற்றது.

 பள்ளித் தலைமை ஆசிரியர் ப.ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பெ.விஜயலட்சுமி, மேலாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தினம் குறித்துப் பேசினர்.

தொடர்ந்து, நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி, தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க, ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

 நிகழ்ச்சியில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் வி.அனுசுயா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 


Page 3 of 111