Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்

Print PDF

தினமணி              10.07.2013

துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள்

தமிழகத்தில் முதன்முறையாக கோவை மாநகராட்சியில், பொதுக் கழிப்பிடங்களைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.

துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்களுக்கு மேயர் செ.ம.வேலுசாமி ஸ்மார்ட் போன்களை செவ்வாய்க்கிழமை வழங்கினார். ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:

பிற மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக கோவை மாநகராட்சி  மக்கள்நலத் திட்டங்களில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுகிறது. மக்களின் குறைகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு நிவர்த்தி செய்வதற்கு எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியில் உள்ள பொதுக் கழிப்பிடங்களை சிறந்த முறையில் பராமரித்து, தரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய முறையை மாநகராட்சி அறிமுகப்படுத்துகிறது. பொதுக் கழிப்பிடங்களின் சுத்தத்தை உறுதிப்படுத்துவதற்காக மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

அலைபேசியில் பயன்படுத்தப்படும் இந்த மென்பொருள், துப்புரவு ஆய்வாளர்கள்,  துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்களின் ஸ்மார்ட் போன்களில் பதிவேற்றம்  செய்யப்படும். துப்புரவு மேற்பார்வையாளர்கள், பொதுக் கழிப்பிடங்களில் தண்ணீர் விநியோகம், சுத்தம், மின்விநியோகம், கழிவறைகள் மற்றும் குப்பைத் தொட்டிகள்  தொடர்பாக ஏற்கனவே திட்டமிட்டபடி இரு கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள்.அவர்கள் பொதுக் கழிப்பிடங்களை நேரடி ஆய்வு செய்த பின்னர் "ஆம் அல்லது இல்லை' என்ற பதிலை தங்களது ஸ்மார்ட் போன் தொடுதிரை மூலமாக அளிப்பார்கள்.

துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி பொதுக்கழிப்பிடங்களை  நாளொன்றுக்கு இரண்டு முறை மேற்பார்வையிடும் நடைமுறை தொடரப்படும்.

  அலைபேசி வேண்டுதல்களின் விவரங்கள் மாநகராட்சிக் கணினிக்கு அனுப்பப்படும்.   துப்புரவு மேற்பார்வையாளர்களின் குறிப்பின் அடிப்படையில் பொதுக் கழிப்பிடங்களின்  சுத்தம் மற்றும் பராமரிப்புத் தொடர்பான உடனடி நிர்வாக நடவடிக்கைக்கு, உரிய அலுவலர்களுக்கு அவை அனுப்பப்படும் என்று மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்தார்.

துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் ஜெயராம், ஆதிநாராணயன், குழுத் தலைவர்கள் அர்ச்சுனன், ராஜேந்திரன், சுகாதாரக் குழுத் தலைவர் தாமரைச்செல்வி, வரிவிதிப்புக் குழு மற்றும் நிதிக்குழுத் தலைவர் ஆர்.பிரபாகரன் ஆகியோர் கூட்டத்தில் பற்கேற்றனர்.

 

மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள தில்லி மாநகராட்சிகளுக்கு தனித் தனி இணையதளம்

Print PDF

தினமணி               27.06.2013

மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள தில்லி மாநகராட்சிகளுக்கு தனித் தனி இணையதளம்

தில்லி மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்பட்டு ஒரு ஆண்டாகியும்  மாநகராட்சிகளுக்கு தனித் தனியான இணையதளங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை.

அதற்கான பணியில் டெக் மஹேந்திரா நிறுவனம் ஈடுபட்டு வந்த போதிலும், இதுவரை இணையதளங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

அதனால், இப்போதைக்கு மக்கள் பயன்பாட்டுக்கு உதவும் 16 சேவைகளுக்கான மென்பொருள் பயன்பாட்டை மூன்றாகப் பிரிக்க மாநகராட்சிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றன.

சொத்து வரிச் சேவை, பிறப்பு இறப்புச் சான்றிதழ் முதலான மற்ற பல சேவைகளை இணையதளத்தில் கொண்டுவர 5 ஆண்டுகளாகும் என்று டெக் மஹேந்திரா நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

இருப்பினும் இணையதளங்களை மூன்றாகப் பிரிக்கும் செயல்பாட்டை 4 ஆண்டுகளில் முடித்துவிட முடியும் என்று விப்ரோ நிறுவனம் மாநகராட்சிகளிடம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தை அதிகாரிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

"சொத்து வரிச் சேவை, பிறப்பு இறப்புச் சான்றிதழ் சேவை போன்றவை இப்போதும் தனித் தனி முகவரிகளில் இணையதளச் சேவைகளை வழங்கி வருகின்றன.

அவை ஒரே பக்கத்தில் இல்லாத காரணத்தால் தில்லிவாசிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்' என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, டெக் மஹேந்திரா நிறுவனம் மின் ஆளுமை மென்பொருளில் மாற்றங்களைக்  கொண்டு வருவதற்கான செலவினங்கள் குறித்த அறிக்கையை மாநகராட்சி நிர்வாகங்களுக்கு அளித்துள்ளது.

அதையடுத்து, மின் ஆளுமையில் மாற்றங்கள் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு, மூன்று மாநகராட்சிகளும் தனித் தனியாக இணையதளங்களை பயன்படுத்திக் கொள்ள வசதியாக டிசைன்களை உருவாக்கிக் கொள்ள சம்மதித்துள்ளன.

 

அம்மா உணவகங்களில் கண்காணிப்பு காமிராக்கள்

Print PDF

தினமணி               14.06.2013

அம்மா உணவகங்களில் கண்காணிப்பு காமிராக்கள்

கோவை மாநகராட்சிப் பகுதியில் திறக்கப்பட்ட அம்மா உணவகங்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 கோவை மாநகராட்சியில் பூ மார்க்கெட், மணியகாரம்பாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இந்த உணவகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பல உணவகங்களில் சாப்பிட வருபவர்கள் தட்டு மற்றும் டம்ளர்களைத் திருடிச் சென்றுவிடுகின்றனர்.

 எனவை அம்மா உணவகங்களில் சாப்பிட வருபவர்களைக் கண்காணித்து பொருள்கள் திருடுப் போவதைத் தடுக்க கண்காணிப்பு காமிராக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உணவகத்திலும் தலா 2 காமிராக்கள் அமைக்கப்பட உள்ளன. உணவகத்திற்குள் ஒன்று, உணவகத்துக்கு வெளியில் ஒன்று என மொத்தம் 2 காமிராக்கள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ. 2 லட்சம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 14 June 2013 07:06
 


Page 11 of 41