Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

குடிநீர் வாரியத்துக்கு ஆணையம் உத்தரவு ஊழியர்கள் சொத்து விவரம் இணையத்தில் வெளியிட வேண்டும்

Print PDF

தினகரன்                  04.11.2010

குடிநீர் வாரியத்துக்கு ஆணையம் உத்தரவு ஊழியர்கள் சொத்து விவரம் இணையத்தில் வெளியிட வேண்டும்

புதுடெல்லி, நவ. 4: அரசு ஊழியர்கள் சொத்து விவரத்தை வெளியிடுவது கட்டாயம் என்பதால், டெல்லி குடிநீர் வாரியம் தனது ஊழியர்களின் சொத்து விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ராம்குமார் குப்தா என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் டெல்லி குடிநீர் வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றும் எம்.சி.யாதவ் என்பவரின் சொத்து விவரங்களை கேட்டிருந்தார். எம்.சி.யாதவிடம் சொத்து விவரத்தை தருவது குறித்து குடிநீர் வாரியம் பதில் கேட்டது. ஆனால், இது தன்னுடைய தனிப்பட்ட விவகாரத்தில் தலையிடும் செயல் என்பதால், சொத்து விவரத்தை தரக்கூடாது என்று அவர் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த விவரம் ராம்குமார் குப்தாவுக்கு அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர், மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை மத்திய தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி விசாரித்து தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் துறையிடம் தரவேண்டும் என்பதும், அரசும் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களிடம் சொத்து விவரத்தை பெற வேண்டும் என்பதும் விதியாக உள்ளது. அரசு ஊழியர்கள் என்பவர்கள் பொது ஊழியர்களாகிறார்கள். அவர்களின் சொத்து விவரங்களை அரசிடம் இருந்து பொதுமக்கள் பெறுவதில் எந்த தடையும் இல்லை.

அரசு ஊழியர்கள் என்பவர்கள், தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருபவர்களும் அடங்குவார்கள் என்று இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல் வழங்கி உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எம்.சி.யாதவின் ஆட்சேபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இதுபோன்று வேறு சில ஊழியர்களின் சொத்து விவரங்களையும் கேட்டு வருங்காலத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதால், டெல்லி குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் எல்லா ஊழியர்களின் சொத்து விவரங்களையும் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மக்கள் தொடர்பு அதிகாரி எடுக்க வேண்டும். டிசம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும்.

 

 

நகராட்சி, டவுன் பஞ்.,களுக்கான இன்று ஈ-டெண்டர்

Print PDF

தினமலர்              01.11.2010

நகராட்சி, டவுன் பஞ்.,களுக்கான இன்று ஈ-டெண்டர்

கடையநல்லூர்: தமிழகம் முழுவதும் நகராட்சி, டவுன் பஞ்.,களுக்கான சிறப்பு சாலை திட்டத்திற்கான ஆயிரம் கோடி ரூபாய் ஈ-டெண்டர் இன்று (1ம் தேதி) நடக்கிறது.தமிழகம் முழுவதும் சிறப்பு சாலை திட்டத்தின் மூலமாக பராமரிப்பு மற்றும் புணரமைப்பு பணிகள் சாலைகளில் மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தார்தளம், சிமென்ட் தளம் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ள கூறப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சி, டவுன் பஞ்.,களில் இப்பணிகள் மேற்கொள்ள தலா 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.மழையினால் பழுதடைந்த சாலை, குடிநீர் சீரமைப்பு பணியின்போது சேதமடைந்த சாலை, பாதாள சாக்கடை திட்டத்தினால் சேதமடைந்த சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சீரற்ற சாலைகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலமாக அந்தந்த நகராட்சிகள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. அந்த பட்டியலை நகராட்சி நிர்வாக அதிகாரிகளும், டவுன் பஞ்., அதிகாரிகளும்

 சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளும் தயாரிக்கப்பட்டு அதற்கான தகவல் அந்தந்த கவுன்சிலுக்கு தெரிவிக்கும்படி கூறப்பட்டது. இதனிடையில் ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு சாலை திட்டத்திற்கான ஈ-டெண்டர் இன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது. -டெண்டராக நடத்தப்படும் நிலையில் இந்த டெண்டரில் பங்கேற்கும் தகுதிவாய்ந்தவர்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கு ஈ-டெண்டர் முடிவு பெறும் நிலையில் மாலை 4 மணிக்கு மேல் டெண்டர் குறித்த முடிவு வெளியாகும் என தெரிகிறது.இதனை தொடர்ந்து கவுன்சில் கூட்டத்தில் இதற்கான அனுமதி பெறும் வகையில் மன்றத்தில் வைத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு டிசம்பர் 31ம் தேதி சிறப்பு சாலை முடிவு பெறும் வகையிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் பணிகள் தரமாக நடத்திடவும், இதனை ஆய்வு செய்திட ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த குழுவினர் சிறப்பு சாலை பணிகளை அந்தந்த நகராட்சி, டவுன் பஞ்., பகுதிகளில் அடிக்கடி ஆய்வு செய்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒரே நாளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஈ-டெண்டர் தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்படுவதால் நகராட்சி, டவுன் பஞ்., வட்டாரங்களில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.

 

எங்கு ரோடு போடறாங்க...? : இன்டர்நெட்டில் பார்க்கலாம்

Print PDF

தினமலர் 20.10.2010

எங்கு ரோடு போடறாங்க...? : இன்டர்நெட்டில் பார்க்கலாம்

சென்னை : "பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக நகரில் சாலைகள் சீரமைக்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார். சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில், சாலைகள் சீரமைக்கும் பணியை மேயர் சுப்ரமணியன், கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது மேயர் கூறியதாவது: நகரில் பழுதடைந்துள்ள சாலைகள், சீர்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள் ளது. மிகவும் சேதமடைந்துள்ள 314 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு, நான்கு லட்சத்து 12 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் சேதமடைந்துள்ள பகுதிகளை அகழ்ந்தெடுத்து, தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஏறத்தாழ 11 கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏழு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில், இரண்டு லட்சத்து 65 ஆயிரம் சதுர மீட்டர் அளவிற்கு, தார் சாலை அமைக்க 13 ஒப்பந்த தாரர்களிடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பணி 10 நாட்களில் முடிக்கப்படும். சாலைகள் அமைக்கும் பணியை கண்காணிக்க, ஒவ்வொரு மண்டலத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக மேற்பார்வை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகரில் எந்த சாலையில் எங்கு பணி நடக்கிறது என்ற விவரத்தை மாநகராட்சி இணையதளம் மூலம் வெளியிடும்.திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கல்லறை சாலை, எஸ்.என்., செட்டி தெரு, என்.எஸ்.சி., போஸ் சாலை, பிரகாசம் சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு, காந்தி இர்வின் சாலை, என்.எஸ்.கே., சாலை, வெங்கட்நாராயணா சாலை, சர்தார் படேல் சாலை, காந்திமண்டபம் சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, ஜி.என்., செட்டி சாலை போன்று 314 சாலைகள் சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. மழைக் காலத்திற்கு முன்பாக இந்த சாலைகள் சீரமைக்கும் பணி முடிக்கப்படும். கடந்த ஒரு வருடத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பில், உட்புற சாலைகள், போடப்பட்டுள்ளது. குடிசைப் பகுதிகளில், 2,349 சாலைகள், சிமென்ட் சாலைகளாக 590 கிலோ மீட்டர் நீளத்திற்கு 172 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் கூறினார்.

Last Updated on Friday, 22 October 2010 05:39
 


Page 21 of 41