Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி               19.06.2013

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம்

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆணையர் விமலா, தலைமைப் பொறியாளர் சுப்புராஜ், துணைத்தலைவர் ஆர்.டி. சேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம்:

    காஞ்சிபுரம் நகராட்சி 51 வார்டுகளில் 2.33 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இந்நகரம் 36.14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயில் நகரமாக உள்ளது. நகரின் மத்தியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்கள், ஆந்திரம், கர்நாடகம், புதுவை உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 700 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த தொழிற்பேட்டைகள் அதிகமாக உள்ளதாலும், சுற்றுலா நகரமாகவும், திருக்கோயில்கள் நிறைந்த புனித நகரமாகவும் விளங்குவதால் இங்குவந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களையும் இயக்குவதற்கு போதுமான இடவசதி இல்லை.

இந்நிலையில் காஞ்சிபுரம் நகரின் எதிர்கால தேவைக்கும் அதன் வளர்ச்சிக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்ற அவசியத்தின் பேரில் சித்தேரி கிராம எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள கொல்லா சிங்கண்ண செட்டியார் தர்மஸ்தாபன பரம்பரை தர்மகர்த்தா கொல்லா வெங்கிட கண்ணையா செட்டியாருக்கு உரிமைப்பட்ட காலியிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலும், காஞ்சிபுரம் சுற்றுவட்ட புறவழிச் சாலைக்கு அருகிலும் உள்ளது. மேலும் இந்த சாலை 6 வழிச்சாலையாகத் தரம் உயர்த்தப்பட உள்ளது. எனவே இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்க நகர்மன்றத் தலைவரின் சிறப்புத் தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் நகர்மன்றக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு செய்தியாளர்களிடம் கூறியது: சித்தேரி மேடு கிராம எல்லைக்குள்ளப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட தனியார் டிரஸ்டுக்கு சொந்தமான இடங்கள் அதிக அளவில் உள்ளன. அதில் 50 ஏக்கர் மட்டும் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு தேர்வு செய்ய தீர்மானித்துள்ளோம். ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் என்ற கணக்கில் 99 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். அரசு இதற்கான ஆணையை பிறப்பித்தால், பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி விரைவில் தொடங்கும் என்றார் அவர்.

 

வண்டலூர் அருகே புதிய புறநகர் பேருந்து நிலையம்

Print PDF

தினபூமி         02.05.2013

வண்டலூர் அருகே புதிய புறநகர் பேருந்து நிலையம்

http://www.thinaboomi.com/sites/default/files/Jayalalitha1_16.jpg

சென்னை, மே.- 1 - வண்டலூர் அருகே புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- சென்னை மாநகர மக்கள் தொகை பெருக்கம், அதிகரித்து வரும் வெளி மாநில மற்றும் பிற மாவட்ட மக்களின் புழக்கம், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் பேருந்து நிலையங்கள், சாலைகள், பாலங்கள் ஆகியவற்றில் அமைப்பதில் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 180 பேருந்துகள் இயங்கவும், மேலும் 60 இயக்கத்தில் இல்லாத பேருந்துகளை நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

தற்போது, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 1,250 பேருந்துகள் உட்பட மொத்தம் 2,100 பேருந்துகள் தினம் சுமார் 2,900 தடவை இயக்கப்பட்டு வருகின்றன. இடப் பற்றாக்குறை காரணமாக இந்தப் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கான பணிமனைகள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகள் நாள் முழுவதும் பேருந்து இயக்குமிடம் மற்றும் சாலை ஓரங்களிலேயே நிறுத்தப்படுவதால் பேருந்துகள் நிலையத்திலிருந்து வெளியே செல்ல நீண்டநேரமாகின்றது. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் வசதிக்காக அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து நிலையத்திற்குள்ளும், சுற்றுப்பகுதிகளில் உள்ள முக்கிய சாலைப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒப்பந்த பேருந்துகளுக்கான பேருந்து நிலையம்,கோயம்பேடு மொத்த விற்பனை வணிக வளாகம் ஆகியவையும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இதன் காரணமாக, வாகனங்கள் செல்லும் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டர் என்ற நிலையில் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் உருவாக்கப்பட்டு வரும் மொத்த உணவு தானிய அங்காடி மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், இங்கிருந்து செல்லும் பேருந்துகளில் பாதிக்குமேல் தென்மாவட்டங்களுக்கு செல்பவையாக இருப்பதை கருத்தில் கொண்டும், தென்மாவட்டங்களிலிருந்து வந்து செல்லும் பேருந்துகளுக்கென தெற்கத்திய பெருஞ்சாலை மற்றும் வெளி வட்டச்சாலை ஆகியவற்றிற்கு இடையே வண்டலூர்- வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி வண்டலூர் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வண்டலூரில் புதியதாக உருவாக்கப்படும் இந்த புறநகர் பேருந்து நிலையத்தில், புறநகர் பேருந்துகளை இயக்குவதற்கான இடம், மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கான இடம், வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடம்,போக்குவரத்து பணிமனை வசதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்களுக்கு தேவையான உணவகங்கள், சிறு கடைகள், பொது கழிப்பிட வசதி ஆகிய எல்லா வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். இத்திட்டத்தின் மூலம் கோயம்பேட்டின் தற்போதைய நெரிசல் விலகி பயணிகள் எளிதாகவும், வசதியாகவும், விரைவாகவும் பயணிக்க வழி வகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.  

 

பயணியர் நிழற்குடை திறப்பு

Print PDF
தினமணி        25.04.2013

பயணியர் நிழற்குடை திறப்பு

சிவகங்கை நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் 5 பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நகராட்சி பொது நிதியிலிருந்து சோதனை அடிப்படையில் கோர்ட் வாசல், திருப்பத்தூர் சாலை, மானாமதுரை சாலை, இளையான்குடி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தலா ரூ.2 லட்சம் மதிப்பில் புதிதாகப் பேருந்து நிறுத்தப் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிழற்குடைகளை நகர்மன்றத் தலைவர் எம். அர்ச்சுனன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் (பொ) எஸ். வரதராஜன், நகராட்சிப் பணி மேற்பார்வையாளர் பி. சுரேஷ்பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிழற்குடைகளின் செயல்பாடுகள் சிறப்பைப் பொருத்து நகரின் பிற பகுதிகளிலும் நிழற்குடை அமைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
 


Page 7 of 57