Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

வாகன காப்பக வசூல் நகராட்சி ஏற்பு

Print PDF
தினமலர்          02.04.2013

வாகன காப்பக வசூல் நகராட்சி ஏற்பு


சிவகாசி:சிவகாசி பஸ்ஸ்டாண்டில் வாகன காப்பாக வசூலை நகராட்சி ஏற்றது. இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

சிவகாசி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் உள்ள வாகன காப்பகத்தை, தனியார் கான்ட்ராக்ட் எடுத்து பணம் வசூலித்தனர். இவர்கள் நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட, இரு மடங்கு உயர்த்தி பணம் வசூலித்தனர்.

சைக்கிளுக்கு 2க்கு பதில் 3ரூபாய், டூவீலர், பைக்கிற்கு 3க்கு பதில் 5ரூபாய் வசூலித்தனர். 24 மணிநேர வாடகையை, 12 மணிநேரம் என நிர்ணயித்து கெடுபிடியாக வசூலித்தனர். வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

10 கோடி ரூபாயில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் விரைவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே விரிவாகத்திற்கு பெறப்பட்ட நிலத்தையும் சேர்த்து, 2 ஏக்கர் பரப்பில் நவீன பஸ் ஸ்டாணட் அமைக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து சைக்கிள் ஸ்டாண்ட் கான்ட்ராக்ட்டை ரத்து செய்து, நகராட்சியே நடத்த முடிவு செய்தது.

ஏப்ரல் முதல் நகராட்சியே வசூலித்து வருகிறது. தினமும் வாகன காப்பகத்தில் இருந்து 800 ரூபாய் வரை வசூலாகிறது.

நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் நகராட்சி வசூல் செய்வதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறையும் நகராட்சி ஏற்று நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோருகின்றனர்.
 

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம்

Print PDF
தினமணி           22.03.2013

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம்


விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் ரூ. 3.69 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நகர்மன்றத் தலைவர் ஜி. தனலட்சுமி, துணைத் தலைவர் பி. சக்திவேல் ஆகியோர் கூறினர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: திருத்தங்கல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பஸ் நிலையம் இல்லை என்பது குறையாகவே இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் அடிக்கடி கோரிக்கை மனு அளித்து வந்தனர்.   

இந்நிலையில் திருத்தங்கல்-விருதுநகர் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பஸ் நிலையம் அமைக்க மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகரமைப்புத் துறை இயக்குனர் அனுமதியளித்துள்ளார்.

ரூ. 3.69 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு, அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பரிந்துரையின் பேரில் நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.
 

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமையுமா?

Print PDF
தினமணி         11.03.2013

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமையுமா?


தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கான ஆரம்பக்கட்டப் பணிகள்  தொடங்கப்படாததால் பொதுமக்களிடம் குழப்பம் நிலவுகிறது.

துறைமுக நகரமான தூத்துக்குடிக்கு கனரக வாகனங்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாநகரப் பகுதியில் போதிய சாலை வசதிகள் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

விடுமுறை நாள்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதால் ஆங்காங்கே விபத்துகள் நிகழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.7,500 கோடி செலவில் வெளித் துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதேபோல, தூத்துக்குடி புறநகர்ப் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில், இப்போது 3 புதிய அனல் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதனால், கனகர வாகனங்களின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டமாக தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அருகே உள்ள இடத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் என்றார்.

இப்பகுதியில் இருந்த துறைமுகத்துக்குச் சொந்தமான இடத்தை, பஸ் நிலையப் பணிகளுக்கு அளிக்க துறைமுக நிர்வாகம் ஒப்புதல் அளித்ததால் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஒருங்கிணைந்த பஸ் நிலையம் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்படாத நிலை உருவானது. ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்குப் பதிலாக, தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தையே விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி அவசரக் கூட்டத்தின்போது, ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைப்பது தொடர்பாக, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தை ரத்து செய்துவிட்டு, நகருக்குள் உள்ள பழைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றபட்டது.

ஊருக்கு வெளியே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைந்தால் சாதாரண மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும், பழைய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள போக்குவரத்து பணிமனை மற்றும் எஸ்ஏவி பள்ளி மைதானம் ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அக்கூட்டத்தில் மேயர் கூறினார்.

இதையடுத்து, பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான அடுத்தகட்டப் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது. போக்குவரத்து பணிமனையை காலி செய்ய வேண்டுமானால் ரூ.1.50 கோடியும், புதிய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 1.33 ஏக்கர் நிலத்தையும் முன்னதாகவே வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்கநர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

இக்கடிதத்தை உடனடியாக பரிசீலனை செய்த மாநகராட்சி நிர்வாகம் ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தின்போது கவுன்சிலர்களின் பார்வைக்கு வைத்து தீர்மானமாக நிறைவேற்றியது.

இதனால், ஒருங்கிணைந்த பஸ் நிலையம் நகருக்கு வெளியே அமையுமா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வது வேறு, நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பது வேறு என்றும், தூத்துக்குடி மீன்வளக்  கல்லூரி அருகே ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும் என அரசுக்கு நாங்கள் பரிந்துரை செய்துள்ளதால், இறுதி முடிவு எடுக்க வேண்டியது அரசு மட்டுமே என முடித்துக் கொண்டார்.

இந்நிலையில், பஸ்நிலையம் அருகேயுள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் நிரந்தரமாக காலரி அமைத்து விளையாட்டு மைதானமாக பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் இப்போது ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறு செய்தால் பஸ் நிலைய விரிவாக்கம் என்பதும் சாத்தியமற்றதாகி விடுகிறது.

எனவே நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமையுமா? அல்லது பழைய பஸ்நிலைய விரிவாக்கப் பணி தொடருமா? இல்லையெனில் இரண்டுமே அறிவிப்போடு நின்றுவிடுமா என்ற குழப்ப நிலையில் உள்ளனர் தூத்துக்குடி மாநகர மக்கள்.
 


Page 8 of 57