Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற மேயர் உத்தரவு

Print PDF

தினகரன்    14.08.2012

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற மேயர் உத்தரவு

கோவை, :  மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற மேயர் உத்தரவிட்டார்.கோவை மாநகராட்சி 27வது வார்டுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதியில் நேற்று சிறப்பு தூய்மை பணி நடந்தது. சாலையோரம் உள்ள புல் புதர்கள் அகற்றப்பட்டு, சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டன. இப்பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி நேரில் ஆய்வுசெய்தார். நேதாஜி நகரில் பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று, தொகுப்பு வீடுகளுக்கு அருகில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற உத்தரவிட்டார். அப்பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட மதிப்பீடு தயாரிக்கும்படி பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிறு பாலத்தை புனரமைக்கவும் கேட்டுக்கொண்டார்.

அஞ்சுகம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்கள் நடுரோட்டில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார்செய்தனர். இதையடுத்து, மின்கம்பங்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வார்டு முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை கணக்கெடுத்து, அவற்றை மின்வாரிய அதிகாரிகள் துணையுடன் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் முழுமையாக அகற்றிவிட்டு, வேறு இடத்தில் நடுவதற்கு உத்தரவிட்டார். அத்திப்பாளையம் பிரதான சாலையில் பொதுக்கழிப்பிடம் கட்டவும், சின்னவேடம்பட்டி பிரிவு அலுவலகத்தை சுற்றி சுற்றுச்சுவர், அங்குள்ள மயாத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கவும் உத்தரவிட்டார். அப்பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை மேயர் ஏற்றுக்கொண்டு, அதற்கான நடவடிக்கையை எடுக்க சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது, துணை ஆணையாளர் சிவராசு, துணை மேயர் லீலாவதி, கவுன்சிலர் மாரிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.

 

விழுப்புரம் பழைய பஸ் நிலைய மேம்பாட்டுப் பணிகள்

Print PDF

தினமணி              06.08.2012

விழுப்புரம் பழைய பஸ் நிலைய மேம்பாட்டுப் பணிகள்


விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட சிமென்ட் தளம் அமைக்கும் பணிகள்.

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட சிமென்ட் தளம் அமைக்கும் பணிகள்.
விழுப்புரம், ஆக. 5 விழுப்புரம் பழைய பஸ் நிலைய மேம்பாட்டுப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மழைக் காலமும் தொடங்கிவிட்டதால் இப்பணிகள் நிறைவேறுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

மிகவும் பழுதடைந்து காணப்பட்ட விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் சாலை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், நகராட்சி மூலம் பழைய பஸ் நிலையம் முழுவதும் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தப் பணிகளுக்கான உத்தரவு ஆணையும் வழங்கப்பட்டது.

மேலும் இப்பணிகளை ஒரு மாத காலத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இப்பணிகளுக்காக, மொத்தம் ரூ. 64.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மேம்பாட்டுப் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டன. ஆனால், இதில் வெறும் 40 சதவீத பணிகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.மேலும் பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியிலிருந்து தொடங்கப்பட்ட பணி, அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்ட போது, இப்பணிகளை மேற்கொள்ள அதிகம் செலவாகும் எனக் கூறி ஒப்பந்தக்காரர் மறுத்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். இது போன்ற பிரச்னைகளால் இந்த பஸ் நிலைய மேம்பாட்டுப் பணி கிடப்பில் போடப்பட்டு விட்டன. மேலும் மழைக்காலமும் தொடங்கிவிட்டதால், இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்துவோர் அன்றாடம் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

பேருந்து நிலைய பாலப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி                                 02.08.2012

 பேருந்து நிலைய பாலப் பணிகள் துவக்கம்

குன்னூர், ஆக. 1: குன்னூர் பேருந்து நிலையம் அருகே இடிந்த பாலத்தின் மேல்தளம் அமைக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.குன்னூரில் ஜூலை 9-ம் தேதி கட்டப்பட்டு வந்த பாலம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.

இதைத்தொடர்ந்து இதனை சீரமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. சென்ட்ரிங் பணிகள் முடிவடைந்த நிலையில், நகராட்சி மண்டல இயக்குநர் பாலசந்தர் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இப்பணிகளை ஆய்வு செய்தனர்.

மேல்தளம் அமைக்க இக்குழுவினர் அனுமதி அளித்ததையடுத்து, முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதுகுறித்து மண்டல இயக்குநர் கூறியது:

கடந்த சில நாள்களுக்கு முன்பு பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தின் மேல்தளம் அமைக்க கான்கிரீட் பணிகள் துவங்கியபோது, எதிர்பாராதவிதமாக இடிந்தது. இதுகுறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஏற்பட்ட சில குறைபாடுகள் சரிசெய்யப்பட்டது.

நகராட்சி மண்டல பொறியாளர் அளித்த அறிக்கையின் பேரில், பாலத்தின் மேல்தளம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

விரைவில் இப்பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றார். குன்னூர் நகர்மன்றத் தலைவர் சி.கோபாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அ.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 11 of 57