Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

"ஒருங்கிணைந்த பஸ் நிலைய விவகாரம்: மேயர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்'

Print PDF
தினமணி                    31.07.2012

 "ஒருங்கிணைந்த பஸ் நிலைய விவகாரம்: மேயர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்'

தூத்துக்குடி, ஜூலை 30:  தூத்துக்குடியில் முதல்வர் அறிவித்த ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் மேயர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்.

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பது குறித்து மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா கருத்து கூறியிருப்பதை வரவேற்கிறேன்.

மீன்வளக் கல்லூரி எதிரே உள்ள இடம் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதி, புறம்போக்கு நிலங்கள் உள்ள பகுதி, மின்வாரிய கோபுரங்கள்,  துறைமுகத்துக்குச் சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க முடியாது என சிலர் கருதுவதாக மேயர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அங்குள்ள மின்வாரிய கோபுரங்களை இடமாற்றம் செய்து கொள்ளலாம். புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்திக் கொள்ளலாம். துறைமுகத்துக்குச் சொந்தமான நிலத்தையும் பேச்சுவார்த்தை மூலம் எடுத்துக் கொள்ளலாம். இதில், பிரச்னைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டத் திட்டம்.

மீன்வளக் கல்லூரி எதிரே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையை இணைக்கும் விதத்தில் அமையும்.

 தூத்துக்குடி நகரில் வளர்ச்சி மற்றும் வருங்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் இனிமேல் குடிநீர்ப் பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாபநாசம், மணிமுத்தாறு அணையிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் தண்ணீர் குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.

விவசாயத்துக்காக ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து ஏற்கெனவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மழை பொய்த்து விட்டதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை பெய்ததும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் அவர்.

பேட்டியின் போது, மாவட்டவருவாய் அலுவலர் சு.அமிர்தஜோதி, மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் இனியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Last Updated on Tuesday, 31 July 2012 10:14
 

ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் விவகாரம்: மாநகராட்சி மேயர் கருத்துக்கு கலெக்டர் வரவேற்பு

Print PDF

தினமலர்                31.07.2012

ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் விவகாரம்: மாநகராட்சி மேயர் கருத்துக்கு கலெக்டர் வரவேற்பு

தூத்துக்குடி : ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் விஷயத்தில் மாநகராட்சி மேயர் கருத்தை வரவேற்கிறேன். அவர் கூறியது போல் அந்த இடத்திற்குரிய பிரச்னைகளை அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சரி செய்து கொடுக்கும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது;

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் குறித்து மாநகராட்சி மேயர் கூறிய கருத்துக்களை தினமலரில் படித்தேன். மீன்வளக்கல்லூரி எதிரே பஸ் ஸ்டாண்டிற்கு தேர்வு செய்துள்ள இடத்தில் உள்ள பிரச்னைகளை தீர்த்து கொடுத்தால் அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க தயார் என்று மேயர் தெரிவித்திருக்கிறார்.

அவரது இந்த கருத்தை வரவேற்கிறேன்.முதல்வர் அறிவித்த திட்டம் என்பதால் அந்த இடத்தில் உள்ள சிறிய பிரச்னைகளை அகற்றுவது என்பது எளிது. இதனை மாவட்ட நிர்வாகம் விரைவாக செய்து கொடுக்கும். பஸ் ஸ்டாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மீன்வளக்கல்லூரிக்கு எதிரே உள்ள இடத்தில் துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தை பெறுவதற்காக துறைமுக நிர்வாகத்துடன் பேசி வருகிறேன். அந்த இடத்திற்கு பதிலாக துறைமுகத்திற்கு மாவட்ட நிர்வாகம் இரண்டு ஏக்கர் மாற்று இடம் வழங்கிவிடும். பஸ் ஸ்டாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் உப்பள பகுதி இடம் கிடையாது. டிரக் டெர்மினல் அமைக்கும் இடத்திற்கும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் இடத்திற்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
மதுரை ரோடு, திருச்செந்தூர் ரோடு, பாளை ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ரோட்டிற்கு இங்கு பஸ் ஸ்டாண்ட் அமைந்தால் எளிதாக செல்ல வசதி ஏற்படும். ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டிற்கு இந்த இடம் தான் "பெஸ்ட் சாய்ஸ்'. அதே சமயம் மாநகராட்சிக்கு இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுக்கும்.

தூத்துக்குடியில் ஏற்கனவே விளையாட்டு மைதானம் குறைவு. இதனால் தருவை மைதானத்தை அபிவிருத்தி செய்து வருகிறோம். இதனால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு எடுப்பது என்பது சிரமமாகும். இதற்கு எதிர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டிற்கு தேர்வு செய்துள்ள இடத்தை பெறுவதற்குரிய சிறிய, சிறிய பிரச்னைகள் விரைவில் களையப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் இனிமேல் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். தற்போது ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மழை இல்லை என்றால் இவை நிறுத்தப்பட்டு விடும்.

இதனால் அணைத்தண்ணீர் குடிநீருக்கு மட்டும் திறக்கப்படும் என்பதால் குடிநீர் பிரச்னை இம் மாவட்டத்தில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

 

விருதுநகரில் சைக்கிள் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல்: நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

Print PDF

தினமணி                               26.07.2012

விருதுநகரில் சைக்கிள் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல்: நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

விருதுநகர், ஜூலை 25: விருதுநகர் நகராட்சி சைக்கிள் நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

விருதுநகர் நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அல்லம்பட்டி முக்கு சாலை ஆகிய இடங்களில் சைக்கிள் நிறுத்துமிடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு வேலைக்கு மற்றும் வெளியூர்களுக்குச் செல்வோர் என தினமும் 500 பேருக்கு மேல் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களை நிறுத்தி விட்டுச் செல்கிறார்கள்.

இந்த சைக்கிள் நிறுத்துமிடங்கள் கடந்த ஆண்டு வரை ரூ.25 ஆயிரம் ஏலம் போனது. இதில், கூடுதலாக வருமானம் கிடைப்பதால் சைக்கிள் நிறுத்துமிடங்களை ஏலம் எடுப்பதில் கடும் போட்டியால் ரூ.3.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளனர்.

இது போன்ற காரணங்களைக் காட்டி முதலை எடுப்பதற்காக கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருவதாக வாகனம் நிறுத்துகிறவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

இடவசதியில்லை: ஒப்பந்தம் பெற்றவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

அரசு விதிமுறைப்படி வாகனங்களைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுச் சுவர் இருக்க வேண்டும். மேலும், மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கு சிமெண்ட் ஓடு அல்லது தகரக் கொட்டகை அமைத்திருக்க வேண்டும்.

ஆனால், கிடுகுகளால் வேய்ந்த இடங்களில் அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வருகிறது. அதுவும் பெரிய மழை, காற்று அடித்தால் தாங்காத அளவில் கொட்டகையின் அமைப்பு இருக்கிறது.

இதனால், வாகனங்கள் வெயில், மழைக்கு இடையே நிறுத்தப்பட்டுகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதியில்லாத நிலையில் பயணிகள் அமரும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் பஸ் ஏற வருகிறவர்களுக்கு இடையூறாக இருப்பதால் சிரமப்பட்டு வருகிறார்கள்.

கூடுதல் வசூல்: 24 மணிநேரத்திற்கு இருசக்கர வாகனங்களுக்கு ரூ.3, சைக்கிள்களுக்கு ரூ.2 வசூல் செய்ய வேண்டும். ஆனால், இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ.5 என கூடுதலாகவே வசூல் செய்து வருகிறார்கள். அதுவும் இங்கு விதிமுறை மீறி 12 மணிநேரத்திற்கு ஒரு முறை கூடுதலாக இருசக்கர வாகனத்திற்கு ரூ.5 வசூல் செய்யப்படுகிறது.

இது குறித்து நகராட்சித் தலைவர் ம.சாந்தியிடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, சைக்கிள் நிறுத்துமிடங்களில் கூடுதலாகக் கட்டணம் வசூல் செய்வதாக நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Last Updated on Thursday, 26 July 2012 10:45
 


Page 12 of 57