Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

கன்னிவாடியில் நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும்

Print PDF

தினமணி                       29.10.2010

கன்னிவாடியில் நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும்

ஒட்டன்சத்திரம், அக். 28:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் நிலையத்தில் 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கை இயக்கி வைக்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா சக்கரபாணி, திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் எம்.பி.மூர்த்தி வரவேற்றார்.

இந்த விழாவில் வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் இ.பெரியசாமி உயர் கோபுர மின் விளக்கை இயக்கி வைத்து பேசியதாவது:பழனியில் இருந்து சென்னைக்கு விரைவில் ரயில் இயக்கப்படும். திண்டுக்கல்-பழனி இடையே மூன்று ரயில்வே மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. கன்னிவாடியில் நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார் அமைச்சர்.

இந்த நிகழ்ச்சியில் 381 பேருக்கு 21 லட்சத்து 14 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், பழனி கோட்டாட்சியர் நாராயணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் விசுவநாதன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ராமதிலகம், ஒட்டன்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நகராட்சி வசம் வருமா பஸ் ஸ்டாண்ட்?ஊட்டி நகரமன்றத்தில்,தீர்மானம்

Print PDF

தினமலர்                29.10.2010

நகராட்சி வசம் வருமா பஸ் ஸ்டாண்ட்?ஊட்டி நகரமன்றத்தில்,தீர்மானம்

ஊட்டி: "அரசுப் போக்குவரத்து கழக வசமுள்ள ஊட்டி பஸ் ஸ்டாண்டை, மாவட்ட நிர்வாகம், நகராட்சிக்கு உரிமை மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்' என, நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும், நகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்ட் உள்ளது. ஊட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என நகரமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். கடந்த 2009 ஜூன் மாதம் நடத்தப்பட்ட நகரமன்றக் கூட்டத்தில், பிங்கர்போஸ்ட் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க, 8.69 ஏக்கரை நகராட்சிக்கு வழங்க மாவட்ட கலெக்டரிடம் கோர, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிங்கர்போஸ்ட் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டால், கூடலூர், கேரளா மற்றும் கர்நாடக பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கலாம் என்பதால், ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் தனியார் கல்லூரியின் வசம் உள்ள நிலத்தை கையகப்படுத்தி, அப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது; ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதி நகராட்சிக்கு சொந்தம் என்பதால், அந்நிலத்தை நகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் நகரமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 1.54 எக்டேர் பஸ் ஸ்டாண்ட் பகுதி, பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மீன் வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1.39 எக்டேரை, நகராட்சிக்கு உரிமை மாற்றம் செய்து கொடுக்க, கலெக்டரிடம் கோருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, இன்று நடத்தப்படும் நகரமன்றக் கூட்டத்தில், நகரமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. நிலம் வழங்கப்பட்டால், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க முடியும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Last Updated on Tuesday, 02 November 2010 11:14
 

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம்

Print PDF

தினமணி 13.10.2010

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம்

திருவள்ளூர், அக். 12: மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் அமைக்க திருவள்ளூர் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் நகராட்சியின் நகர்மன்ற அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நகர்மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன் வரவேற்றார்.

இதில், புதை சாக்கடைப் பணிகள் முடிவடைந்த பெரும்பாக்கம், எடப்பாளையம், சத்தியமூர்த்தி தெரு, வள்ளூவர்புரம், முகமதலி தெரு, ஜெயாநகர், வி.எம்.நகர் ஆகிய பகுதிகளில் 14.30 லட்சத்தில் சிமென்ட் சாலைகள் அமைத்தல், 1-ம் வார்டு முதல் 27-ம் வார்டு வரை நகராட்சிக்கு உள்பட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி சீரமைப்பதற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பணி உத்தரவு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மாவட்டத்தின் தலைநகராக உள்ள திருவள்ளூரில் இருந்து தினசரி 60-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றது. வெளியூரில் இருந்தும் ஏராளமான பஸ்கள் வந்து செல்வதால் தற்போதுள்ள பஸ் நிலையம் இட நெருக்கடியாக உள்ளதாலும், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

 


Page 18 of 57