Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

சேலம் மண்டல நகராட்சிப் பகுதி மகளிர் குழு கண்காட்சி தொடக்கம்

Print PDF

தினமணி 23.07.2010

சேலம் மண்டல நகராட்சிப் பகுதி மகளிர் குழு கண்காட்சி தொடக்கம்

நாமக்கல், ஜூலை 22: சேலம் மண்டலத்தில் உள்ள நகராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் விற்பனைக் கண்காட்சி, நாமக்கல்லில் வியாழக்கிழமை துவங்கியது.

நாமக்கல் நகராட்சி திருமண மஹாலில் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் 37 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 நகராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் பொடிகள், ரெடிமேட் ஆடைகள், சேலைகள், மெத்தை விரிப்புகள், நாப்கின்ஸ், உணவுப் பொருட்கள், கம்ப்யூட்டர் சாம்பிராணி, அழகுப் பொருட்கள் என ஏராளமான உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

வியாழன், வெள்ளி, சனிக்கிழமை என மூன்று நாட்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

நகராட்சிகள் இயக்குநரக உதவித் திட்ட அலுவலர் இளம்பரிதி கூறுகையில், சேலம் மண்டல நகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில், முதல்கட்டமாக நாமக்கல் நகராட்சியில் விற்பனைக் கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 மாவட்டங்களிலும் உள்ள 16 நகராட்சிகளிலும் கண்காட்சி நடத்தப்படும் என்றார் அவர்.

இளைஞர்களின் வழியில் "இளவட்டம்'

வசிக்கும் இளைஞர்களைக் கவர்ந்திழுத்து அவர்களின் வழியிலேயே சென்று எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது இளவட்டம் இளைஞர் கலைக்குழு.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் இந்த குழு எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஹெச்..வி. எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்காக புள்ளி ராஜா, தில்லுதுர உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசாரங்களை அவ்வப்போது ஏற்படுத்தி நடத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் யாவும் அனைத்துத் தரப்பினரையும் இலக்காக வைத்து செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது "இளவட்டம்' என்ற பெயரில் இளைஞர்களை மட்டுமே மையமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் அதிக சதவிகிதம் உள்ள இளைஞர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் குறித்த சரியான புரிதல், விழிப்புணர்வு இல்லை என்று ஆய்வில் தெரியவந்ததை அடுத்து அரசு இளைஞர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. 5 கலைக்குழுக்கள்

தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டமாக சேலம் கண்டறியப்பட்டுள்ளதால் (சேலம் மாவட்டத்தில் ஹெச்..வி.க்கான ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை பெற பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 12,250) இந்த மாவட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இளவட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நிகழ்ச்சியின் இலக்கு இளைஞர்கள் என்பதால் அவர்களை கவரும் விதத்தில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அவர்களுக்குப் பிடித்தவற்றின் மூலம் அவர்கள் வழியிலேயே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கம்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உறவுகள், கோடங்கி, ஊர்க்கோழி, சாரல் உள்ளிட்ட 5 கலைக்குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 105 கிராமங்கள் ஹெச்..வி. தாக்கம் அதிகமுள்ள கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கிராமங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தும், அனைத்து கிராமங்களையும் விழிப்புணர்வு சென்றடையும் வகையிலும் இந்த கலைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து, "உறவுகள்' கலைக்குழு ஒருங்கிணைப்பாளரான அன்ட்ரியாஸ் (29) கூறியது:

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். கலை ஆர்வம் உள்ளவர்கள் தொழில் முறைக் கலைஞர்கள் இதில் பங்கேற்று களியாட்டம், தப்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம், தேவராட்டம், ஓயிலாட்டம், மான் கொம்பு, செடிக் குச்சி, வீதி நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்.

ஏராளமான விளையாட்டுகள்

இந்த நிகழ்வுகளின்போது நாங்கள் எழுதி இசையமைத்த விழிப்புணர்வு பாடல்களைப் பாடி மக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் எங்களது கருத்துகளை எடுத்துச் சொல்வோம். இதில், பெண்களும் பங்கேற்று தப்பாட்டம், தவில் கருவிகளை இசைப்பது சிறப்பு.

இளவட்டம் நிகழ்ச்சிக்காக கலை நிகழ்ச்சிகளுடன் சிலம்பாட்டம், இளவட்ட கல் தூக்குதல், பம்பரம் விடுதல், கோலி, உரி அடித்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகளை கிராமப்புற இளைஞர்களுக்கு நடத்துகிறோம்.

வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், சிறந்த கலைகளைத் தெரிந்து வைத்திருப்பவர்களை ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்கிறோம். எய்ட்ஸ் பிரசாரத்துக்காக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் எங்களுக்கு தேவையான பயிற்சி அளித்துள்ளது.

நாளொன்றுக்கு 20 கிராமங்களுக்குச் செல்லும் நாங்கள், அங்கு சென்றதும் தெருக்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்டி, மேளம் கொட்டி இளைஞர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். நேரடியாக அவர்களுக்கு எய்ட்ஸ் குறித்து பேசினால் அவர்கள் ஒதுங்கிச் சென்று விடுகின்றனர். எனவே, முதலில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மூலம் ஒருங்கிணைத்து பிறகு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

நோய்த் தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள ஹெச்..வி. கட்டுப்பாட்டு மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்துகிறோம். இந்த பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாவட்ட நிர்வாகி செல்வம் கூறியது:

சேலம் மாவட்டத்தில் ஹெச்..வி. பரிசோதனை மையங்கள் 38 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 5, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20, மருத்துவக் கல்லூரிகளில் 2, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் 8 என மாவட்டம் முழுவதும் இந்த மையங்கள் உள்ளன.

இங்கு, ஆலோசகர் உள்ளிட்ட 3 களப் பணியாளர்கள் உள்ளனர். சேலத்தில் எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு தலைமை மருத்துவமனை, ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஏற்காடு, மத்திய சிறை ஆகிய இடங்களில் கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கிராமப்புற இளைஞர்களுக்கு இதுபோன்ற விவரங்கள் தெரிந்தால் அவர்கள் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறவோ, பரிசோதனை மேற்கொள்ளவோ வாய்ப்புகள் ஏற்படும். இளவட்டம் நிகழ்ச்சி மூலம் சேலம் மாவட்டத்தில் ஹெச்..வி. தொற்று விகிதம் குறையும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

 

சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி

Print PDF

தினமலர் 23.07.2010

சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி

திருப்பூர் : மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில், 25 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2.5 லட்சம் ரூபாய் சுழல் நிதி நேற்று வழங்கப்பட்டது. பத்மாவதிபுரம், செல்வராஜ் நகர், கோல்டன் நகர், கே.வி.ஆர்., நகர், ஸ்ரீவித்யா நகர், எம்.ஜி.ஆர்., நகர், அரண்மனைப்புதூர், பெத்திசெட்டிபுரம், மணியகாரம்பாளையம், கோம்பை தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர் குழு பிரதிநிதிகளிடம், இந்நிதியை மேயர் செல்வராஜ் வழங்கினார்.கமிஷனர் ஜெயலட்சுமி, சமுதாய அமைப்பாளர்கள் மங்கையர்கரசி, செல்வி, தமிழரசி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

சுயஉதவிக் குழுவினருக்கு தொழிற்திறன் பயிற்சி

Print PDF

தினமணி 18.06.2010

சுயஉதவிக் குழுவினருக்கு தொழிற்திறன் பயிற்சி

பெரியகுளம், ஜூன் 17: பெரியகுளம் நகராட்சி மற்றும் நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து நகராட்சி பகுதியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுயஉதவிக் குழுவினர் மற்றும் பெண்களுக்கு சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் தொழிற்திறன் பயிற்சி முகாமை நகராட்சி வணிக வளாகக் கட்டடத்தில் 3 நாள்கள் நடத்தின.

முகாமிற்கு ஆணையர் (பொறுப்பு) என்.மோனி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் எஸ்.அகமது கபீர், சமுதாய அமைப்பாளர் வீரம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காளான் வளர்ப்பு, பேப்ரிக் பெயிண்டிங் உள்பட பல்வேறு வகையான பயிற்சிகளைநேசம் தொண்டு நிறுவன இயக்குநர் பி.முருகன் அளித்தார். இதில் 80 பேர் பயிற்சி பெற்றனர்.

 


Page 20 of 41