Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி

Print PDF

தினமணி 29.09.2010

நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி

மதுரை,செப்.28: நகப்புற ஏழைகள் வீடு கட்ட வீட்டுவசதி வாரியம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதாக, ஆட்சியர் சி. காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

நகராட்சி,பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரும் குறைந்த வருமானம் உடையவர்களும், இந்தக் கடன் உதவியை பெறலாம். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரின் மாத வருமானம் ரூ. 5 ஆயிரம் வரை இருக்க வேண்டும். குறைந்த வருமானப் பிரிவினரின் மாத வருமானம் ரூ. 5001 முதல் 10 ஆயிரம் வரை இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ. 1 லட்சம் கடனாக வழங்கப்படும். குறைந்த வருமானப் பிரிவினருக்கு ரூ. 1லட்சத்து 60 ஆயிரம் கடனாக வழங்கப்படும். இந்தக் கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகால இடைவெளியில் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத் தரப்படும்.

கடன் தொகைக்குரிய வட்டித் தொகையில் 5 சதவீத மானியம் வழங்கப்படும்.

கூடுதலாக கடன் தொகை தேவைப்படுபவர்களுக்கு, கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காகக் கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுரமீட்டர் பரப்பளவில் இருக்க வேண்டும். குறைந்த வருமானப் பிரிவினர் கட்டும் வீடுகள் 40 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்க வேண்டும்.

சொந்த வீடு இல்லாதோர் மட்டும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். சொந்தமாக நிலம் வைத்திருப்போர் அதற்கான பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்களும், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

இது தொடர்பான விவரங்களுக்கு, மதுரை எல்லிஸ் நகரிலுள்ள வீட்டுவசதி வாரியச் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை நேரில் அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விவரங்களுக்கு, மதுரை எல்லிஸ் நகரிலுள்ள வீட்டுவசதி வாரியச் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை நேரில் அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்

 

முதல் கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி

Print PDF

தினமணி 22.09.2010

முதல் கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி

சென்னை, செப். 21: முதல் கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வறுமை கோட்டுக்குக் கீழ் அல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடுவது தொடரும் என்றும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர், பன்றிக் காய்ச்சலை முழுவதுமாக தடுக்க, மருத்துவக் குழு அமைத்து, வீடு, வீடாகச் சென்று ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். இந்த நடவடிக்கையை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

அதன்படி, நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ராஜாகலிஃபுல்லா ஆஜராகி பதில் மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

கிண்டியில் உள்ள கிங் மருத்துவ நிறுவனம் மற்றும் 9 தனியார் ஆய்வுக் கூடங்களில் பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 1.55 கோடி மதிப்பிலான சிறப்பு மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆய்வுக் கூடங்களை வலுப்படுத்த கூடுதலாக 2.49 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள், ஊசிகள் போன்றவை தேவையான அளவுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நோயை எதிர்கொள்ளும் முறை பற்றி தனியார் மருத்துவர்களுக்கும் வழிகாட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, சென்னை, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இந்த நோய் பரவியுள்ளது. இந்த இடங்களில் வீடு வீடாகச் சென்று நோயைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நோய் தாக்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்தும் நிலை, அவர்களுக்கு தடுப்பு மருந்து கொடுப்பது, சிகிச்சை அளிப்பது என நோய் தாக்கியவர்களைப் பிரித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதாரத் துறை தொடர்பான அதிகாரிகள் மூலம் இந்த நோயின் நிலை நாள்தோறும் கவனிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 3,596 நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 774 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களில் 635 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நோய் தாக்கி 9 பேர் இறந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு 15 கோடி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடரும்.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த நோய் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பற்றிய விவரங்களை அரசு அளிக்க வேண்டும் என்று கூறி, இந்த வழக்கை அக்டோபர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா: நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினமணி 14.09.2010

ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா: நீதிமன்றம் உத்தரவு

மதுரை, செப்.13: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே 31 பேருக்கு 1996-ல் வீட்டுமனைப் பட்டா வழங்கிய நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியர் 30 நாளில் நிறைவேற்றுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள நெல்முடிக்கரை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி உள்ளிட்ட 31 பேர் தாக்கல் செய்த மனு:

எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு 1996-ல் வீட்டுமனைப் பட்டா வழங்கியது. இதுவரை, மனையிடத்தை அதிகாரிகள் வழங்கவில்லை. மனையிடத்தை எங்களுக்கு ஒப்படைக்குமாறு உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜெயபால் அளித்த தீர்ப்பு:

இந்த வழக்கு மிகவும் துரதிஷ்டவசமானது. பட்டா வழங்கப்பட்டு 14 ஆண்டுகளாகியும், இடத்தை அதிகாரிகள் வழங்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை உதவி இயக்குநர், சிறப்பு வட்டாட்சியர் ஆகியோரிடம் கேட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், நிலம் ஒப்படைக்கப்படவில்லை என மனுதாரர்களிடம் கூறி வருகிறனர்.

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில், எந்த இடத்தில் ஒழுங்கீனம் நடந்ததோ, அதைச் சரிசெய்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நீதிமன்றம் அப்போதே உத்தரவிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் அதிகாரிகள் சட்டவிரோதமான காரியங்களைச் செய்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி, சிறப்பு வட்டாட்சியர் ஆகியோர் விதிமீறல்களைச் சரிசெய்து, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் பொறுப்பின்றி பதிலளித்து வருகின்றனர்.

இதிலிருந்து நிலம் கையகப்படுத்தி வழங்குவதில், அதிகாரிகள் ஆர்வமின்றி இருப்பது தெரிகிறது. மனுதாரர்கள் ஏழைகளாக இருப்பதால் குரல் எழுப்பமுடியவில்லை. எப்படி இருந்தபோதிலும், 30 நாள்களுக்குள் நிலம் கையகப்படுத்த வேண்டும். அதிகாரிகள் முறையாகச் செயல்படுகின்றனரா என்பதை நீதிமன்றம் கண்காணிக்கும். கையகப்படுத்திய பின், நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

 


Page 11 of 34