Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

ரூ.441 கோடியில் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினபூமி            24.12.2013

ரூ.441 கோடியில் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/CM-inagurate-houses(C).jpg 

சென்னை, டிச.24 - சென்னை துரைப்பாக்கம் உள்பட தமிழ்நாடு முழுவதும் ரூ.441 கோடியில் 10,867 குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயகத்தில் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

முதல்வர் ஜெயலலிதா நேற்று (23.12.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, எழில் நகர் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 228 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6000 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 106 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2048 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும் 106 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் பல்வேறு நகர்புறப்  பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 2819 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் திறந்து வைத்தார்.

தமிழகத்தின் நகர்புறக்  குடிசைப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையினை மேம்படுத்த பல்வேறு வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டப்பணிகளை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் செயல்படுத்தி வருகின்றது. இந்த வாரியத்தின் பணிகள் முதலில் சென்னையிலும் பின்னர் 1984_ஆம் ஆண்டு முதல் படிப்படியாக தமிழகத்திலுள்ள இதர நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சென்னை, எழில் நகர் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 228 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6000 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 106 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2048 அடுக்குமாடி குடியிருப்புகள்; நொச்சி நகரில் 45 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 628 அடுக்குமாடி குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம், அம்மன்குளத்தில் 23 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 792 அடுக்குமாடி குடியிருப்புகள்; புதுக்கோட்டை நகராட்சியில்  மச்சுவாடியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 96 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சந்தைப்பேட்டையில் 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 84 அடுக்குமாடி குடியிருப்புகள்; திருநெல்வேலி மாநகராட்சியில், வ.உ.சி. நகரில்  5 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 207 அடுக்குமாடி குடியிருப்புகள்;  தூத்துக்குடி மாநகராட்சியில், துரைசிங் நகரில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 78 குடியிருப்புகள்; நாமக்கல் நகராட்சியில், எம்.ஜி.ஆர்.  நகரில் 9 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 342 அடுக்குமாடி குடியிருப்புகள்;  ஓசர் நகராட்சியில்  எழில் நகர் பகுதி_2ல் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகள்; சேலம் மாவட்டம், எருமாபாளையத்தில் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  400 அடுக்குமாடி குடியிருப்புகள்; 

என மொத்தம் 441 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10,867 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.  

இந்தப் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொன்றும்  270 முதல் 357 சதுர அடி கொண்ட பரப்பளவில் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்  முதல் 7 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்  வரையிலான மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்பு ஒவ்வொன்றிலும், ஒரு படுக்கை அறை, சமையலறையுடன் கூடிய ஒரு பல்நோக்கு அறை, குளியலறை, கழிப்பறை ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், தேவைக்கேற்ப சில திட்டப் பகுதிகளில் சமூக கட்டமைப்பு வசதிகளான நூலகம், சிறு கடைகள், நியாயவிலைக் கடைகள், ஆழ்துளை குழாய் கிணறு மற்றும் பூங்கா ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இக்குடியிருப்புகள் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நீர் வழி கால்வாய் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கும்  மற்றும்  மீனவ குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  ஆர். வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் தங்க கலியபெருமாள், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் தலைவர் கு. தங்கமுத்து, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி. சந்திரசேகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விலை ரூ.1.72 கோடி ரியல் எஸ்டேட் தொழிலை மிஞ்சும் அளவிற்கு திட்டம்

Print PDF

தினமலர்             13.12.2013 

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விலை ரூ.1.72 கோடி ரியல் எஸ்டேட் தொழிலை மிஞ்சும் அளவிற்கு திட்டம்

திருவான்மியூரில், வீட்டுவசதி வாரிய சுயநிதி திட்டத்தில், புதிதாக கட்டப்பட உள்ள உயர்தர வீடுகளுக்கான விலை, 1.72 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

பட்டினப்பாக்கத்தில், இன்னும் இறுதி திட்ட ஒப்புதல் கிடைக்காத நிலையில், சுயநிதி அடிப்படையில் குடியிருப்பு கட்டும் திட்டத்தை, வீட்டுவசதி வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில், வீட்டின் விலை 1.99 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த அளவுக்கு, விலை கொடுத்து, வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால், இதற்கான, விண்ணப்ப விற்பனைக்கான காலக்கெடு, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ரூ.1.72 கோடி

இந்த நிலையில், திருவான்மியூர் இந்திரா நகரில், 'இம்ப்காப்ஸ்' அருகில், 204 வீடுகள், கட்டும் திட்டத்தை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதில், சுயநிதி அடிப்படையில் புதிதாக, 40 வீடுகளை கட்ட வீட்டுவசதி வாரியம் முடிவு செய்து உள்ளது.

இப்போது, இதற்கான விற்பனை அறிவிப்பை வாரியம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, இங்கு உயர் வருவாய் பிரிவினருக்கான, வீடுகளின் விலை, 1.72 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், கார் நிறுத்தும் இடத்துக்கு மட்டும் தனியே, 3 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில், நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகளின் விலை, 1.40 கோடி ரூபாய், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகளின் விலை, 54 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில், வீடு வாங்க, நேற்று முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. முன்பணமாக, வீட்டின் விலையில், ஐந்து சதவீத தொகையை செலுத்த வேண்டும் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்து உள்ளது.

 

மணலி, மறைமலைநகரில் 255 மனைகள் விற்பனை: குலுக்கல் முறையில் ஒதுக்க சி.எம்.டி.ஏ., முடிவு

Print PDF

தினமலர்              11.12.2013

மணலி, மறைமலைநகரில் 255 மனைகள் விற்பனை: குலுக்கல் முறையில் ஒதுக்க சி.எம்.டி.ஏ., முடிவு

சென்னை : மறைமலை நகர், மணலி, சாத்தாங்காடு, கோயம்பேடு பகுதிகளில் உள்ள, 255, குடியிருப்பு, வணிக மனைகள் மற்றும் கடைகள், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு, செய்யப்படும் என, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) அறிவித்து உள்ளது. சென்னை, பெருநகர் பகுதியில், புதிதாக துணை நகரங்களை ஏற்படுத்தும் நோக்கில், மறைமலை நகர், மணலி புது நகர் பகுதிகளில், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டன.

இதே போன்று, சாத்தாங்காடு இரும்பு எஃகு அங்காடி, கோயம்பேடு காய், கனி மொத்த விற்பனை அங்காடி ஆகியவற்றில் கடைகளும், வணிக மனைகளும் விற்பனையாகாமல் உள்ளன. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும், இவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனைகள், பல ஆண்டுகளாக ஒதுக்கப்படாமல், உள்ளன. இதனால், சி.எம்.டி.ஏ.,வுக்கு, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்படுவதாக, தணிக்கை அறிக்கைகளில், சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

255 மனைகள் இதில், மறைமலை நகர் பகுதியில், குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கான, 105 மனைகள், மணலி புது நகரில், 82 மனைகள், சாத்தாங்காடு பகுதியில், 64 மனைகள், கோயம்பேடு அங்காடி பகுதியில் நான்கு கடைகள் என, மொத்தம், 255 மனைகள் மற்றும் கடைகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றை, குலுக்கல் முறையில், ஒதுக்கீடு செய்வதற்கான, அறிவிப்பை சி.எம்.டி.ஏ., வெளியிட்டு உள்ளது.

இதன்படி, குடியிருப்பு, வணிக மனைகளை பெறவும், கடைகள் ஒதுக்கீடு பெற விரும்புவோர், விண்ணப்பிக்கலாம். இதற்கான, விண்ணப்பங்களை சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட, விண்ணப்பங்களுடன் 'முதன்மை செயல் அலுவலர், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்' என்ற பெயரில் எடுக்கப்பட்ட, 1,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை இணைத்து, அனுப்ப வேண்டும். இந்த பதிவு கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் வழிகள்....

பூர்த்தி செய்யப்பட்ட, விண்ணப்பங்கள் அனைத்தும், 2014 ஜனவரி, 6ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இதுகுறித்த, கூடுதல் விவரம் பெற, சென்னை, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் முது நிலை உடைமை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். குலுக்கல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சி.எம்.டி.ஏ., அறிவித்து உள்ளது.

 


Page 5 of 69