Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு குறைந்த விலையில் 2,300 குடியிருப்புகள்: தில்லி மேம்பாட்டு ஆணையம் தகவல்

Print PDF

தினமணி               27.06.2013

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு குறைந்த விலையில் 2,300 குடியிருப்புகள்: தில்லி மேம்பாட்டு ஆணையம் தகவல்

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு குறைந்த விலையில் 2,300 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று தில்லி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தில்லி மேம்பாட்டு ஆணைய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

துவராகா 23 செக்டர், 8-ஆவது பாக்கெட்டில் 2,300 குடியிருப்புகள் கடந்த மார்ச் மாதம் கட்டி முடிக்கப்பட்டன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காகக் கட்டப்பட்டுள்ள இக்குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வது தற்போது நடைபெற்று வருகிறது. 

குறைந்த விலையில் கட்டப்படும் குடியிருப்புகள் "ப்ரி ஃபேபரிகேட்டட்' தொழில்நுட்பத்தில் கட்டப்படுகின்றன. இத்தொழில்நுட்பத்தின் படி, குடியிருப்புக்கான தூண்கள், ஸ்லாப்கள், படிக்கட்டுகள் உள்ளிட்டவை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு இணைத்துக் கட்டப்படுகின்றன.

ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சிர்ஸாபூரில் 4,740 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதே திட்டத்தின் கீழ், கத்புத்லி காலனி, கல்காஜி உள்ளிட்ட  21 குடிசைப் பகுதிகளுக்கு அருகில் 37,000 குடியிருப்புகள்  கட்டப்படும். ரோகிணியில் 10,440 குடியிருப்புகள், நரேலாவில் 5,860 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 7,000 குடியிருப்புகள் கட்டவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குடியிருப்புகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்' என்றார் அவர்.

"தில்லி மாஸ்டர் பிளான்' திட்டத்தின்படி, 2021-ஆம் ஆண்டுக்குள் தில்லியின் மக்கள் தொகை 2.3 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கேற்ப 24 லட்சம் குடியிருப்புகள் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் குடிசைப் பகுதிகளைக் கட்டுப்படுத்த, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு குறைந்த விலையில் குடியிருப்புகள் ஏற்படுத்தித் தருவது அவசியமாகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு குறைந்த விலையில் 1 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று கடந்த 2011-12-இல் அறிவிக்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை 2,300 குடியிருப்புகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

 

மாநகராட்சியில் முதல் முறையாக குடிசையில்லா நகரமாக்கும் திட்டம் ஆலந்தூர் மண்டலத்தில் தொடக்கம்

Print PDF
தினகரன்           27.06.2013

மாநகராட்சியில் முதல் முறையாக குடிசையில்லா நகரமாக்கும் திட்டம் ஆலந்தூர் மண்டலத்தில் தொடக்கம்


ஆலந்தூர், : தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம், ராஜிவ் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிசைகள் கணக்கெடுப்பது, அவற்றுக்கு பதிலாக அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டி தருவது பற்றிய கலந்துரையாடல் கூட்டம் மண்டல அலுவலகத்தில் நடந்தது.

மாநில திட்ட அதிகாரி சண்முக சுந்தரம், குடிசை பகுதிகளை மேம்படுத்துவது குறித்த வரைபடங்களை திரையிட்டு விளக்கினார். புதிய வீடுகள் கட்டும் திட்டத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய மாதிரி வடிவங்களை காண்பித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக ஆலந்தூர் 12வது மண்டலத்தில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது. ஆலந்தூர் மண்டலத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 159, 167 ஆகிய வார்டுகள் குடிசைகளே இல்லாத பகுதியாக உள்ளது. மற்ற வார்டுகளில் குடிசைகள் கணக்கெடுக்கப்படும். இந்த பணிகளில் தொண்டு நிறுவனங்கள், பொது நலச்சங்கங்கள் ஈடுபட உள்ளன. அவர்கள் பகுதி பகுதியாக சென்று கணக்கெடுப்பார்கள் என்றார்.

குடிசை பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் மண்டல குழு தலைவர் வெங்கட்ராமன், உதவி கமிஷனர் அன்பழகன், செயற் பொறியாளர் மகேசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
 

துணை நகரம் அமைப்பது தொடர்பாக வீட்டுவசதி வாரியத்தலைவர் முருகையா பாண்டியன் ஆய்வு

Print PDF

தினத்தந்தி               15.06.2013

துணை நகரம் அமைப்பது தொடர்பாக வீட்டுவசதி வாரியத்தலைவர் முருகையா பாண்டியன் ஆய்வு

தோப்பூர்–உச்சப்பட்டியில் துணை நகரம் அமைப்பது தொடர்பாக வீட்டுவசதி வாரியத்தலைவர் முருகையா பாண்டியன் ஆய்வு செய்தார்.

துணை நகரம்

மதுரை மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி, தோப்பூர் ஆகிய கிராமத்தில் 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் 19 ஆயிரத்து 500 மனைகளுடன் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைதொடர்ந்து முதற்கட்டமாக சாலை வசதியுடன் உள்ள தோப்பூர் பகுதி 3–ல் 23.70 ஏக்கரில் சுமார் 448 எண்ணிக்கையில் மனை மேம்பாட்டு திட்டத்திற்கு டெண்டர் வரவேற்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

உள்ளுர் திட்டக்குழுமம்

இரண்டாவது கட்டமாக 50.15 ஏக்கரில் 1,000 எண்ணிக்கையில் மனை மேம்பாட்டு திட்டத்திற்கு மனை வரைபடம் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுரை உள்ளூர் திட்டக்குழுமத்திட்டம் ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளது.

மூன்றாவது கட்டமாக 586.86 ஏக்கர் நிலத்தில் மனை மேம்பாட்டு திட்டம் தொடங்குவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும். இதில் 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும் மற்றும் 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆய்வு

இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு முதற்கட்டமாக ரூ.6 கோடியே 93 லட்சம் வாரிய நிதியில் இருந்து செயல்படுத்துவதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த பணிகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் முருகையா பாண்டியன் நேற்று உச்சப்பட்டி மற்றும் தோப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது முதலமைச்சரின் சீரிய திட்டமான இந்த துணைக்கோள் நகரத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது தலைமை பொறியாளர் ராஜேந்திரன் மேற்பார்வை பொறியாளர் பாலச்சந்தர், செயற்பொறியாளர் எல்.பிராங்க் பெர்னாண்டோ, தனக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கருத்தக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 


Page 10 of 69