Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

கோவையில், குடிசை மாற்று வாரியம் சார்பில் 19 இடங்களில் ரூ.480 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் 2 இடங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது

Print PDF

தினத்தந்தி               15.06.2013

கோவையில், குடிசை மாற்று வாரியம் சார்பில் 19 இடங்களில் ரூ.480 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் 2 இடங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது

கோவையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 19 இடங்களில் ரூ.480 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. முதல் கட்டமாக தற்போது 2 இடங்களில் பணி நடக்கிறது.

கோவையில் 19 இடங்களில் ரூ.480 கோடி செலவில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படுகிறது. இதில் 2 இடங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.

கோவை மாநகராட்சி பகுதியில், ஆட்சேபனை புறம்போக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கீடு செய்து, குடிசையில்லா கோவையை உருவாக்கும் நோக்கில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

ரூ.480 கோடி

குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவையில் முதல் கட்டமாக சுண்டக்காமுத்தூர் மலைநகரில் ரூ.10.9 கோடி செலவில் 4 பிளாக் கட்டிடங்களில் 224 வீடுகளும், மதுக்கரை அண்ணாநகரில் ரூ. 40.77 கோடி செலவில் 232 வீடுகளும், மதுக்கரை எம்.ஜி.ஆர் நகரில் ரூ.24.98 கோடி செலவில் 512 வீடுகளும், கீரணத்தம் காந்திநகரில் ரூ.62 கோடி செலவில் 1880 வீடுகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதில் தற்போது மலைநகர், அண்ணாநகர் பகுதிகளில் வீடுகள் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து 2–ம் கட்டமாக இன்னும் 15 இடங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான மொத்த செலவு ரூ.480 கோடி ஆகும்.

கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

மதுக்கரை அண்ணாநகர், மலை நகர் பகுதிகளில் வீடுகள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற 2 பகுதிகளில் இன்னும் சில வாரங்களில் பணி தொடங்க உள்ளது. இது தவிர 15 இடங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகிறது. இதற்காக மாநகராட்சி, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் நிலம் ஒதுக்கீடு பெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த இடங்கள் கிடைத்ததும் அதில் விரைவாக பணிகள் தொடங்கும்.

ஜனவரியில் பணி முடியும்

இந்த வீடுகள் அனைத்தும் கோவை மாநகர பகுதியில் புறம்போக்கு பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இந்த வீடுகள் தொடக்க காலத்தில் ஒரு வீடு 120 சதுர அடி பரப்பளவில் தான் கட்டப்பட்டது. தற்போது ஒரு பெட்ரூம், ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பாத்ரூம் என்ற வகையில் 400 சதுரஅடி பரப்பளவில் விரிவுப்படுத்தி கட்டப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்படும் வீடு, இடநெருக்கடி இல்லாமல் வசிக்க ஏதுவாகும். இந்த கட்டுமான பணிகள் வருகிற 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்து, மார்ச் மாதத்தில் பயனாளிகளுக்கு கிடைத்து விடும் என்று அவர் கூறினார்.

 

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கான சலுகை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு

Print PDF

தினமணி               14.06.2013

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கான சலுகை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கான சலுகைகள் மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகை ஜூன் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை இருக்கும்.

மாதாந்திர தவணைக் கடன் செலுத்த தவறியதற்கான அபராத வட்டி தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி தள்ளுபடி, நிலத்தின் இறுதி மதிப்பீடு வேறுபாட்டின் பேரிலான வட்டியில் ஒவ்வோர் ஆண்டிற்கும் 5 மாத கால வட்டி தள்ளுபடி, அரசாணை (நிலை) எண். 174 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 7.2.1991-ல் வழங்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான ஒதுக்கீடு விலையில் தற்போது நடைமுறையில் உள்ள 10 சதவிகித முன்வைப்புத் தொகைக்கு மட்டும் வட்டி வசூல் போன்றவற்றை சலுகையாகப் பெறலாம்.

இந்தச் சலுகைகளை, ஒதுக்கீடுதாரர்கள் தாம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இந்த ஆணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து அதாவது மே 31-ஆம் தேதி முதல் ஆறு மாத காலத்திற்குள் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு நடைமுறையில் உள்ள தனிவட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்துவதற்கு விருப்புரிமை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதி பிரிவில் நிலத்தினை விலை இறுதியாக்கம் செய்யப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள் இச்சலுகையைப் பயன்படுத்தி அரசாணையின்படி கணக்கிடப்பட்டுத் தெரிவிக்கும் நிலுவைத் தொகையைச் செலுத்தி கிரயப் பத்திரம் பெறலாம் என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

 

நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 20 பேருக்கு ரூ.4 லட்சம் தவணைத் தொகை வழங்கல்

Print PDF
தினமணி       26.05.2013

நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 20 பேருக்கு ரூ.4 லட்சம் தவணைத் தொகை வழங்கல்


மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 20 பயனாளிகளுக்கு தவணைத் தொகையாக ரூ. 4 லட்சத்து 4 ஆயிரத்து 800 சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மாநகராட்சியின் 1 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 19 ஆவது வார்டு சம்மட்டிபுரம் பகுதியில், அழகிய மதுரை மாநகர் திட்டம் (அம்மா) சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.

இத் திட்டத்தைத் துவக்கி வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான தவணைத் தொகையாக 20 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கான காசோலைகளை வழங்கினார். மேலும், 15 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவுகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், அரசின் எந்தவொரு நலத்திட்டமும் இடையூறுகள் இன்றி மக்களுக்கு செல்லவேண்டும் என்ற நோக்கத்தில், அரசு செயல்பட்டு வருகிறது. மின்வெட்டுப் பிரச்னை வரும் ஜூன் மாதம் முதல் படிப்படியாகக் குறைந்து, டிசம்பருக்குள் முழுவதுமாக மின்வெட்டு இல்லாத நிலை ஏற்படும். மின் திட்டங்களுக்காக ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர். நந்தகோபால், துணைமேயர் ஆர். கோபாலகிருஷ்ணன், மண்டலத் தலைவர் பெ. சாலைமுத்து, நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையர் ரெகோபெயாம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
 


Page 11 of 69