Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசை மாற்று வாரியம் மூலமாக 14,040 கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டம்

Print PDF
தினகரன்                 27.03.2013

குடிசை மாற்று வாரியம் மூலமாக 14,040 கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டம்


கோவை: கோவை மாவட்டத்தில் புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு 14,040 கான்கிரீட் வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் இலக்கு வைத்துள்ளது.

கோவை மாநகரில் மாநகராட்சி சார்பில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் குடிசை பகுதி வீடுகள் மேம்பாட்டு திட்டம் (பி.எஸ்.யு.பி) செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் நீர் நிலை புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் 9,600 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் உக்கடத்தில் புதை மண் இருப்பதால் அங்கே வீடுகள் கட்டும் திட்ட கூடாது என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே குடிசை மாற்று வாரியத்தினர் கட்டிய 48 வீடுகள் விரிசல் விட்டு சாய்ந்த நிலையில் இருக்கிறது. இந்த வீடுகளில் ஏழை மக்கள் குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளது.

நகர்ப்பகுதியில் குளம், வாய்க்கால், நீர் நிலைகளில் வசிக்கும் மக்களுக்காக குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மதுக்கரை எம்.ஜி.ஆர் நகரில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் 3.48 ஏக்கரில் 512 வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம்  முடிவு செய்துள்ளது.

இங்கே கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளி இன்று திறக்கப்படவுள்ளது. தரை தளம் மற்றும் மூன்று தளம் என அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு வீடு 398 சதுரடி பரப்பில் அமையும். 512வீடுகள் கட்ட 20.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கான கட்டுமான செலவில் 10 சதவீதம் பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக தரவேண்டியிருக்கும். ஒரு வீடு கட்ட சுமார் 5 லட்ச ரூபாய் செலவாகும் என குடிசை மாற்று வாரியத்தினர் தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர் நகரை தொடர்ந்து மலுமிச்சம்பட்டி, வெள்ளானைப்பட்டி, கீரணத்தம், விவோனந்தா சதுக்கம், காந்திநகர் உள்ளிட்ட பகுதியில் அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் 2013-2014ம் ஆண்டில் முதல் திட்டத்தில் 1,608 வீடுகள் மற்றும் இரண்டாவது திட்டத்தில் 2,832 வீடுகள் கட்டப்படும். முதல் திட்டத்திற்கு 62 கோடி ரூபாயும், இரண்டாவது திட்டத்திற்கு 222 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 284 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.யு.பி திட்டத்தில் 500 கோடி ரூபாய் செலவில் 9,600 வீடுகள் கட்டப்படவுள்ளது.
குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ வரும் 2017ம் ஆண்டிற்குள் கோவையில் குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் நோக்கத்தில் கான்கிரீட் வீடுகள்  கட்டும் பணி நடக்கிறது. சுகாதாரமான, அமைதியான சூழ்நிலையில் அடுக்குமாடிகள் உருவாக்கப்படுகிறது.

14,040 வீடுகள் கட்டும் பணி விரைவில் தீவிரப்படுத்தப்படும். இதை ஏழை மக்கள் கட்டாயம் வரவேற்பார்கள். அடுத்த கட்டமாக ராஜீவ்காந்தி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் பல அடுக்குமாடி வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கிறோம். புதிய கான்கிரீட் வீடுகளின் மூலம் குளம், நீர்தேக்கங்களில் உள்ள குடிசைகளை ஏழை மக்கள் காலி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. நீர் நிலையில் வசிக்கும் மக்களின் அவல நிலை மாறும், ’’ என்றார்.
 

வீடு கட்டுவதற்கு உதவித்தொகை: காங்கயம் நகராட்சி முடிவு

Print PDF
தினமணி           08.03.2013

வீடு கட்டுவதற்கு உதவித்தொகை:  காங்கயம் நகராட்சி முடிவு


காங்கயம் நகராட்சிப் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வீடு கட்டுவதற்கு மானிய உதவித்தொகை அளிக்கப்படும் என காங்கயம் நகராட்சித் தலைவர் தெரிவித்தார்.

காங்கயம் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் ஜி.மணிமாறன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் எம்.தமிழரசு முன்னிலை வகித்தார் . கூட்டத்தில் நகராட்சித் தலைவர் பேசியது:

நகராட்சிப் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் நகர்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் குளியலறை, கழிப்பறை உள்பட 270 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தில் 100 வீடுகள் கட்டித் தர அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, வீடு கட்டுபவர்கள் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, கூடுதல் விபரங்களைப் பெறலாம் என்றார்.

முதல்வருக்கு நன்றி: காங்கயம் நகராட்சிக்கு புதிதாக மேலாளர், நகராட்சி பொறியாளர், பணி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், திட்ட ஆய்வாளர் ஆகிய 5 பணியிடங்களை உருவாக்கித் தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து, நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

346 குடிசைவாசிகளுக்கு ஜூன் இறுதிக்குள் வீடுகள்

Print PDF
தின மணி           22.02.2013

346 குடிசைவாசிகளுக்கு ஜூன் இறுதிக்குள் வீடுகள்

சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே குடிசைகளில் வசிக்கும் 346 குடும்பத்தினருக்கு வரும் ஜூன் இறுதிக்குள் வீடுகள் வழங்கப்படும் என்று குடிசை மாற்று வாரியம் உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். ராஜா அண்ணாமலை மன்றம் பகுதியில் ஏராளமானோர் சாலைகளின் அருகே ஆக்கிரமிப்பு செய்து குடிசைகளில் வசிக்கின்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்திட வேண்டும் என்று கோரி 25.9.2012 அன்று அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். எனினும் வாக்கு வங்கி அரசியலுக்காக அந்த மக்களுக்கு மறுவாழ்வு மறுக்கப்படுகிறது என்று அந்த மனுவில் ராமசாமி கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி நிர்வாகம் குடிசைகள் குறித்து கணக்கெடுத்து எங்களிடம் விவரங்களை அளித்தால் அந்த மக்களுக்கு மாற்று குடியிருப்பு வசதிகளை செய்து தருவோம் என்று குடிசை மாற்று வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி என். பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை (பிப்ரவரி 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.சி. செல்வசேகரன், சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் அருகேயுள்ள முத்துசாமி சாலையில் 259 குடும்பங்களும், தங்கை முருகப்பா தெருவில் 87 குடும்பங்களும் சாலைகளை ஆக்கிரமித்து குடிசைகளை அமைத்திருப்பதாகவும், இந்தப் பட்டியல் குடிசை மாற்று வாரியத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குடிசை மாற்று வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.பி. பிரபாகரன், வரும் ஜூன் இறுதிக்குள் இந்த 346 குடும்பங்களுக்கும் குடியிருப்புக்கான மாற்று வசதிகளை வாரியம் செய்து கொடுக்கும் என்று உறுதியளித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Last Updated on Friday, 22 February 2013 11:49
 


Page 15 of 69