Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் ரூ. 25 கோடியில் மேம்பாலம்

Print PDF

தினமணி 25.08.2009

தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் ரூ. 25 கோடியில் மேம்பாலம்

திருநெல்வேலி, ஆக. 24: திருநெல்வேலி, தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் ரூ. 25 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநகராட்சியும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் ரவுண்டானாவில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் ரூ. 25 கோடியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்குரிய பூர்வாங்கப் பணிகள் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

அவற்றைத் தொடர்ந்து மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுவது தச்சநல்லூர் ரயில்வே கேட். இந்த ரயில்வே கேட், நாள் ஒன்றுக்கு சுமார் 35 முறை மூடி, திறக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அப் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் விளைவாக மாநில நெடுஞ்சாலைத்துறை, தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான திட்டத்தை தயார் செய்துள்ளனர். அத் திட்டத்தில் மேம்பாலம் அமைக்க தோராயமாக ரூ. 25 கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கை தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கும், அரசின் அனுமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

"தமிழகத்தில் உள்ள ரயில்வே கேட்டுகளை ஆளில்லாமல் பராமரிப்பதற்கும், ரயில்வே கேட் மூலம் ஏற்படும் செலவை குறைக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் ரயில்வே கேட்கள் கண்டறியப்பட்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மாநகரில் குலவணிகர்புரம் ரயில்வே கேட், தச்சநல்லூர் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதில், குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ. 25 கோடி நிதி வந்து விட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தச்சநல்லூரில் மேம்பாலம் அமைப்பதற்கு அரசின் அனுமதிக்காக திட்ட அறிக்கையை அனுப்பியுள்ளோம். வரும் மார்ச் மாதத்துக்குள் திட்டத்துக்கு அனுமதி கிடைத்து விடும் எதிர்பார்க்கிறோம்' என நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரி தெரிவித்தார்.

இந்த பாலத்துக்கான நிதியை மாநில நெடுஞ்சாலைத்துறையும், தெற்கு ரயில்வேயும் வழங்கும். வரும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். நிதி கிடைத்தவுடன் பாலம் கட்டுமானப் பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சிக்கந்தர்சாவடியில் ரூ. 40 கோடியில் வணிக வளாகம்: ஜனவரி முதல் செயல்படும்

Print PDF

தினமணி 21.08.2009

சிக்கந்தர்சாவடியில் ரூ. 40 கோடியில் வணிக வளாகம்: ஜனவரி முதல் செயல்படும்

மதுரை, ஆக. 20: மதுரை அருகே சிக்கந்தர்சாவடியில் 30 ஏக்கர் பரப்பளவில் ரூ. 40 கோடி செலவில் மத்திய அரசு மானியத்துடன் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுவரும் வணிக வளாகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்று அதன் முதுநிலைத் தலைவர் ரத்தினவேல் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளையும், வணிக வளாகம் அமைக்கும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் மற்றும் தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க நிர்வாகிகள் புதன்கிழமை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரத்தினவேல் கூறியதாவது:

மத்திய தொழில் வர்த்தகத் துறையின்கீழ் உள்ள தொழில் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயறு, பருப்பு வகைகள் மற்றும் உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட தொழில்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய வணிக வளாகமாக இது திகழும்.

வணிக வளாகத்தில் 250 கடைகள் இடம்பெறுகின்றன. கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் வணிக வளாகம் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்குவரும்.

அதன் பின்னர் மதுரைக்குள் உள்ள நவதானிய மொத்தக் கடைகள், கிட்டங்கிகள் இந்த வணிக வளாகத்துக்கு இடம்பெயரும். இதனால் நகரில் லாரிகள் போக்குவரத்துக்கு குறையும்.

மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பணிகளை மக்களிடம் எடுத்துரைப்போம்.

வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினால் மக்களின் தினசரி குடிநீர்ப் பற்றாக்குறை நிவர்த்திசெய்யப்படும் என்பதை அறிந்தோம்.

இவை தவிர தொழில் துவங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் மாநகராட்சி செய்துவருகிறது. இதனால் பிற மாநிலத்தவரும் மதுரையில் தொழில் துவங்குவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளையும் மாநகராட்சி செய்துவருவது பாராட்டுக்குரியது என்றார்.

 

நெல்லையில் குடிநீர் சப்ளைக்கு மேலும் 4 லாரிகள்: எம்.பி.- எம்.எல்.ஏ. நிதியில் வாங்கப்படுகிறது

Print PDF

மாலை மலர் 18.08.2009

நெல்லையில் குடிநீர் சப்ளைக்கு மேலும் 4 லாரிகள்: எம்.பி.- எம்.எல்.ஏ. நிதியில் வாங்கப்படுகிறது

நெல்லை, ஆக. 18-

நெல்லை மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க மாநகராட்சி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மாநகர பகுதியில் புதிதாக 2 குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக போக்க பாபநாசம் அணையில் இருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க லாரிகள் மூலம் ஆங்காங்கே குடிநீர் வழங்¢கப்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சிக்கு சொந்தமாக 6 லாரிகளும், 1 டிராக்டரும் உள்ளன.

இந்த 7 வண்டிகள் மூலமாக மாநகர் முழுவதும் குடிநீர் சப்ளை செய்ய இயலவில்லை. இதனால் கூடுதலாக 4 குடிநீர் லாரிகள் வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

2 லாரிகளுக்கு நெல்லை எம்.பி.ராமசுப்புவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் மற்ற 2 லாரி களை அமைச்சர் மைதீன்கான், மாலைராஜா எம்.எல்.ஏ. ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்தும் நிதி ஒதுக்க கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாளை (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

 


Page 234 of 238