Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

குடிநீர் குழாய் மாற்றும் பணி

Print PDF
தினமணி        28.05.2013

குடிநீர் குழாய் மாற்றும் பணி


வெள்ளக்கோவிலில் ரூ.2.78 கோடி செலவில் புதிய குடிநீர் குழாய்கள் மாற்றும் பணி திங்கள்கிழமை துவக்கப்பட்டது.

புதுப்பையிலிருந்து அமராவதி ஆற்று நீராதாரம் மூலமாக குழாய் வழியாக வெள்ளக்கோவில் நகருக்கு பல ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் பழைய குழாய்கள் சேதமடைந்துவிட்டதால், வெள்ளக்கோவில் நீருந்து நிலையம் வரை புதிய குழாய்களைப் பொருத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் முழு அரசு மானியத்துடன்  ரூ.2.78 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. 9 ஆயிரத்து 480 மீட்டர் நீளத்துக்கு உயரழுத்த நைலான் பைப்புகள் பொருத்தப்படுகிறது.

இதற்கான பணிகளை காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் துவக்கி வைத்தார் . நகர்மன்றத் தலைவர் வி.கந்தசாமி தலைமை வகித்தார்.

நிலவள வங்கித் தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் பி.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் (பொ) கே.சரவணன், துணைத் தலைவர் பி.தங்கராஜ், பணி மேற்பார்வையாளர் கே.மணி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு தரைமட்டத் தொட்டி அமைக்க இடம் தேர்வு

Print PDF
தினமணி          23.05.2013

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு  தரைமட்டத் தொட்டி அமைக்க இடம் தேர்வு


குடியாத்தம் நகரில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 23 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக சந்தப்பேட்டையில் உள்ள மாட்டுச் சந்தை வளாகத்தில் இடத்தை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தேர்வு செய்தார்.

 குடியாத்தம் நகரின் குடிநீர்த் தேவைக்காக இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 86.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இந்நிதியில் 23 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி அமைத்து, அதிலிருந்து சந்தப்பேட்டையில் 4 லட்சம் லிட்டர், நகராட்சி ஆணையர் குடியிருப்பு வளாகத்தில் 3.80 லட்சம் லிட்டர், நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2.30 லட்சம் லிட்டர், போடிப்பேட்டையில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.

 இத்திட்டத்துக்கு பள்ளிகொண்டாவில் இருந்து குடிநீர் கொண்டு வரவும், நகருக்கு விநியோகிக்கவும் 22.81 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பைப்லைன் அமைத்தல் மற்றும் பழைய பைப்லைன் புதுப்பித்தல் பணிகள் நடைபெறும்.

 தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்வதில் இழுபறி நிலை இருந்தது.

 இந்நிலையில் குடியாத்தத்துக்கு புதன்கிழமை வந்த மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர், நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகம், நகராட்சி ஆணையர் குடியிருப்பு வளாகம், மாட்டுச் சந்தை வளாகம் ஆகிய 3 இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இறுதியில் மாட்டுச் சந்தைத் திடலில் தொட்டி அமைக்க முடிவெடுத்தார்.

 இதற்கான பணிகள் ஒரு சில நாள்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி. உமாமகேஸ்வரி, அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சேவியர், உதவிப் பொறியாளர் துளசிராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

வேளச்சேரியில் இஸ்லாமியர்களுக்கு மயானம்

Print PDF
தினமணி          23.05.2013

வேளச்சேரியில் இஸ்லாமியர்களுக்கு மயானம்


சென்னை வேளச்சேரி மயானத்தின் ஒரு பகுதியை இஸ்லாமியர்களுக்கான மயானமாக பயன்படுத்த சென்னை மாநகராட்சி மன்றம் அனுமதியளித்துள்ளது.

இது குறித்த தீர்மான விவரம்: வேளச்சேரியில் உள்ள இஸ்லாமியர்கள் தரமணி 100 அடி சாலையில் மயானம் ஒதுக்க கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

வேளச்சேரி தரமணி 100 அடி சாலையில் உள்ள மயானத்தை இந்து மற்றும் கிறிஸ்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மயான வளாகத்தில் ஒரு காலி குட்டை உள்ளது. அதனை சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த காலி குட்டையில் 50 சென்ட் இடத்தை இஸ்லாமியர்கள் மயானமாக பயன்படுத்த வகை செய்யப்படுகிறது என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Page 10 of 96