Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மதுரையில் விதி மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு "சீல்

Print PDF
தினமணி       27.04.2013

மதுரையில் விதி மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு "சீல்


மதுரை தெற்குமாசி வீதியில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை "சீல்' வைத்தனர்.

தெற்குமாசி வீதியில் தேவாங்கர் சத்திர வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு  உள்ளூர் குழுமத் திட்ட அலுவலகத்தில் தரைத்தளம் 4,050 சதுர அடிக்கும், ஸ்டில்ட் தளம் மற்றும் 2 ஆம் தளம் ஆக மொத்தமாக 12,150 சதுர அடிக்கும் வணிக வளாகம் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஆனால், கட்டட வரைபடம் மற்றும் மாநகராட்சி அனுமதி பெறாமல், பாதாள அறை அமைப்பதற்காக 15 அடி ஆழத்தில் தோண்டி கான்கிரீட் தூண்கள் அமைத்து கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

15 அடி ஆழத்துக்குத் தோண்டுவதால் அருகேயுள்ள கட்டடங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு விபத்துகள் நிகழவும், உயிர்ச் சேதங்களுக்கும் வாய்ப்புள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாநகராட்சியினருக்குப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால், முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், தெற்கு மண்டல உதவி ஆணையர் ஆ. தேவதாஸ்,  உதவி நகரமைப்பு அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட அலுவலர்கள் குறிப்பிட்ட கட்டடப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு நடத்தினர்.

வரைபட அனுமதியை மீறியும், மாநகராட்சி அனுமதியின்றியும் பாதாள அறை கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. அப் பணியை உடனே நிறுத்திய மாநகராட்சி அதிகாரிகள், அக் கட்டடத்துக்கு "சீல்' வைத்தனர்.

தொடரும் விதி மீறல்கள்: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மதில் சுவரிலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்கு 9 மீ. உயரக் கட்டுப்பாட்டை மீறி ஏராளமான கட்டடங்கள்  கட்டப்பட்டுள்ளன.

இதற்கு மூலகாரணமாகப் புகார் கூறப்பட்ட முன்னாள் நகரமைப்பு அலுவலர் (பொறுப்பு) முருகேசன் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில், நெருக்கடியான இப் பகுதியில் பாதாள அறைகள் கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டும் பட்சத்தில், அருகேயுள்ள பல கட்டடங்களில் சரிவு ஏற்பட்டு பெரும் விபத்துகள் நிகழவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற பகுதியில் முறைப்படி விண்ணப்பித்தால்கூட பாதாள அறைகளுக்கு மாநகராட்சியினர் அனுமதி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த விதி மீறல் பாதாள அறை கட்டடத்துக்கு "சீல்' வைத்தது பாராட்டுக்குரியது.

அதேசமயம், ஏற்கெனவே விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்த பட்டியலை விரைவுபடுத்தி, சம்பந்தப்பட்ட கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கு துணைபோன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
 

ரூ56 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கியது

Print PDF
தினகரன்        27.04.2013

ரூ56 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கியது


உடுமலை:   திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் 33 வார்டு உள்ளன. இங்கு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பபட்டது. உடுமலை &செஞ்சேரி மலை ரோடு ஏரி பாளையம் அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சுத்திகரிப்பு நிலையம்அமைக்கவும், தளி ரோட்டில் நீர் மேலோட்டம் நிலையம் அமைக்கவும் திட்டமிட்டு இதற்கான திட்ட மதீப்பீடு அனுப்பப் பட்டுள்ளது.  கட்டுமான பொருட்களின் விலை உயர்வை அடுத்து பாதாள சாக்கடை திட்டத்திற்காக மதிப்பீடு உயர்த்தப்பட்டு மீண்டும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து தற்போது பாதாள சாக்கடை திட்டத்திற்காக நகராட்சி செலுத்த வேண்டிய தொகைக்காக மக்களிடம் வரிவசூல் நடந்து வருகிறது. கட்டட அமைப்பு மற்றும் கட்டிட அளவுகளை பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் தாமதமானதால் நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் ஓடை சீரமைத்தல், சிறு பாலம் கட்டுதல் போன்ற பணிகள் தொய்வடைந்தன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், நகராட்சி தலைவர் ஷோபனா மேற்கொண்ட முயற்சியால்  பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகளை துவங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த வாரம் வழங்கியது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அளிக்கப்பட்ட ஆணையை குடிநீர் வடிகால் வாரிய உதவி கோட்ட பொறியாளர் நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். இதையடுத்து பாதாள சாக்கடை திட்டத்திற்கான ஆய்வு பணிகள் நேற்று முன்னதினம் துவங்கின. வித்யாசாகர் நகர் பகுதியில் பாதாளசாக்கடை அமைப்பதற்கான அளவீடு செய்யும் பணி துவங்கியது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ரங்கராஜன் கூறுகையில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நகராட்சி முழுவதும் அளவீடு செய்யும் பணி துவங்கி உள்ளது. விரைவில் முழு அளவிலான பணிகள் துவங்கும். பணிகள் அனைத்தும் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கப்படும் என்றார்.
 

விதிமுறை மீறல் தெற்குமாசி வீதியில் 2 மாடி கட்டுமான பணிக்கு சீல் மாநகராட்சி நடவடிக்கை

Print PDF
தினகரன்                 27.04.2013

விதிமுறை மீறல் தெற்குமாசி வீதியில் 2 மாடி கட்டுமான பணிக்கு சீல் மாநகராட்சி நடவடிக்கை

மதுரை: தெற்குமாசி வீதியில் தரை தளத்துடன் 2 மாடி கட்டிடத்திற்கு அனுமதி வாங்கிக் கொண்டு கூடுதலாக அண்டர் கிரவுண்டில் 15 அடி ஆழத்துக்கு தோண்டி நடைபெற்று வந்த கட்டுமான பணியை நிறுத்தி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரையில் நெருக்கடியான வீதிகளில் ஒன்று தெற்கு மாசி வீதி. இங்குள்ள தேவாங்கர் சத்திர வளாகத்தில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி அனுமதி பெறப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 1 கி.மீ. சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்ட தடை உள்ளது. இந்த விதிமுறைகளின்படி தரை தளத்துடன் கூடிய 2 மாடி வணிக வளாகம், ஒவ்வொரு தளமும் 4 ஆயிரத்து 50 சதுரஅடி வீதம் மொத்தம் 12 ஆயிரத்து 150 சதுரஅடி பரப்பில் கட்டிடம் கட்ட மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. கட்டிடம் விதிமுறைகளின்படி கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டார்.
அதன்படி நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி ஆணையர் தேவதாஸ் மற்றும் அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இதில் தரை தளத்துடன் 2 மாடி வணிக வளாகம் கட்டுதற்கு மாநகராட்சி அளித்த அனுமதி மீறப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக அண்டர் கிரவுண்ட் கட்ட 15 அடி ஆழம் தோண்டப்பட்டு கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டது தெரியவந்தது. இதனால் கட்டுமான பணிக்கு தடை விதித்து, ஆணையர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், Ôஅண்டர் கிரவுண்டுக்கு அனுமதியின்றி 15 ஆழத்துக்கு தோண்டியதால் மண் சரிந்து அதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு பாதுகாப்பற்ற நிலையும், சுற்றிலுமுள்ள பழமையான கட்டிடத்தின் ஸ்திர தன்மைக்கும், அதில் குடியிருப்போர் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையும் நிலவியது. எனவே சீல் வைக்கப்பட்டதுÕ என்றனர்.
 


Page 16 of 96