Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னை மாநகராட்சி சார்பில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

Print PDF

தி இந்து         13.06.2017

சென்னை மாநகராட்சி சார்பில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

சென்னை மாநகராட்சி சார்பில், உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது.

கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் (5 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள்) உள்ளனர். அதில் ஊரகப் பகுதியில் 81 லட்சம் பேரும், நகரப் பகுதியில் 20 லட்சம் பேரும் உள்ளனர். அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 20 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாரஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

நாட்டின் எதிர்கால தூண்களான குழந் தைகளை, இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் மத்தி யில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்றது. அதில் சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் பங்கேற்று, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பணிக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்ற உறுதிமொழியை வாசிக்க, மாநகராட்சி அதிகாரிகளும், பணி யாளர்களும், உறுதிமொழி ஏற்றுக் கொண் டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர்கள் எம்.கோவிந்தராவ், ஆர்.லலிதா, எம்.விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

காவல் ஆணையர்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணி யாளர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாயி, துணை ஆணையர்கள் அ.ராதிகா, ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.விமலா, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

திடக்கழிவு மேலாண்மையில் சாதிக்கிறது மதுக்கரை பேரூராட்சி: வளங்களை மீட்க வழிகாட்டுகிறது ஒரு குப்பைக் கிடங்கு

Print PDF

தி இந்து              13.06.2017

திடக்கழிவு மேலாண்மையில் சாதிக்கிறது மதுக்கரை பேரூராட்சி: வளங்களை மீட்க வழிகாட்டுகிறது ஒரு குப்பைக் கிடங்கு

மட்கும் கழிவுகளால் தயாராகும் உரப் படுக்கை
மட்கும் கழிவுகளால் தயாராகும் உரப் படுக்கை

குப்பைக்கிடங்கு என்றால் மலைபோல குவிந்திருக்கும் குப்பை, துர்நாற்றம், சுகாதாரக் சீர்கேடு ஆகியவை தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த பொதுவான கண்ணோட்டத்தை பொய்யாக்கியுள்ளது கோவை மதுக்கரை பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா.

ஆம், இங்கு வளங்களை மீட்டுத் தரக்கூடிய இடமாக ஒரு குப்பைக்கிடங்கு மாற்றப்பட்டுள் ளது. மட்கும் குப்பைகளில் இருந்து இயற்கையான மண்புழு உரம், அதன் தரத்தை நிரூபிக்க வளமான காய்கறித் தோட்டம், பிளாஸ்டிக் கழிவுகளை தார் சாலைக்கான மூலப்பொருட்களாக மாற்றும் திட்டம் என, உள்ளே வரும் அத்தனை கழிவுகளையும், பயனுள்ள பொருளாக மாற்றி அனுப்புகிறது இந்த வளம் மீட்பு பூங்கா.

குப்பைக் கிடங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க, தமிழகத்தில் 2013-14-ம் ஆண்டில் வளம் மீட்பு பூங்கா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குப்பையைத் தரம் பிரித்து, மறுசுழற்சி மூலம் அதை வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும் திட்டமிடப்பட்டு 77 பேரூராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. அதில் ஒன்றாக ரூ.57.25 லட்சம் நிதியில் தொடங்கப்பட்டதுதான் கோவை மதுக்கரை சிறப்பு நிலை பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா.

பேரூராட்சிப் பகுதியில் உள்ள 8300 வீடுகளில் இருந்து மட்கும், மட்காத குப்பையை தனித்தனியாக சேகரித்து, துப்புரவுத் தொழிலாளர்கள் மூலம் இந்த பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், மீண்டும் ஒருமுறை குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மட்கும் குப்பையை 60 படுக்கைகளில் குவித்து, தேவையான இயற்கை மூலப் பொருட்கள் சேர்த்து 45 நாட்களில் இயற்கை உரம் தயாராகிறது. பிறகு, சலித்து தூய்மைப்படுத்தி விற்பனைக்கு தயாராக்கப்படுகிறது. இதேபோல, மட்காத பிளாஸ்டிக் கழிவுகளை துல்லியமாக பிரித்தெடுத்து, இயந்திரங்கள் மூலம் சிறு, சிறு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் தார் சாலைக்கான மூலப் பொருள் தயாரிக்கப்படுகிறது. மற்றொருபுறம், 18 தொட்டிகளில் தரம் மிகுந்த மண்புழு உரம் தயாராகிறது.


பண்ணைகளை பார்வையிடும் அலுவலர்கள்

அமோக விளைச்சல்

தயாராகும் உரங்களின் தரத்தை நிரூபிக்க இவர்கள் தேர்வு செய்த முறைதான் உச்சகட்டம். மொத்தமுள்ள 1.10 ஏக்கர் நிலத்தில் குப்பை தரம் பிரிப்பு, உரத் தயாரிப்புக்கு போக, மீதமுள்ள இடம் அனைத்தையும் பசுமை நிறைந்த விளைநிலமாக மாற்றியுள்ளனர் இங்குள்ள தொழி லாளர்கள். தேர்ந்த விதைகளை விதைத்து, தாங்கள் தயாரித்த உரத் தையே அதில் இட்டு இயற்கை காய் கறிகளை அறுவடை செய்கிறார்கள். பார்வையிட வருவோருக்கு அங்கு விளைந்த காய்கறிகளை இலவசமாக கொடுத்து உதவுகின்றனர் இங்குள்ள துப்புரவுத் தொழிலாளர்கள்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தால் பல இடங்களில் உள்ளாட்சி நிர்வாகச் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், அலுவலர்கள், தொழிலாளர்கள் முயற்சியாலேயே இங்கு திடக்கழிவு மேலாண்மை திறம்பட நடக்கிறது.

பேரூராட்சி செயல் அலுவலர் டி.செல்வராஜ் கூறும்போது, ‘பேரூராட்சியில் 35,000 மக்கள் வசிக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 7.39 டன் குப்பை சேகரமாகிறது. கொஞ்சம் கூட வீணாக்காமல் தரம் பிரிக்கிறோம். 60 சதவீத மட்கும் குப்பை கிடைப்பதால் உரத் தயாரிப்பு எளிதாக இருக்கிறது. மட்காத பிளாஸ்டிக் கழிவை தார் சாலைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பே இத்திட்டத்தின் வெற்றி’ என்றார்.

திட்டம் விரிவடையும்

சுகாதார அலுவலர் எம்.திருவாசகம் கூறும்போது, ‘சுகாதாரத்தை காக்க வேண்டும் என்பதால், சுற்றிலும் 100 முள்ளில்லா மூங்கில்கள் வைத்து துர்நாற்றத்தை அறவே தடுத்துள்ளோம். நாள் ஒன்றுக்கு 200 கிலோ இயற்கை உரமும், 25 கிலோ மண்புழு உரமும் கிடைக்கிறது. இந்த உரங்களை வைத்தே வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி, புடலங்காய், பூசணி, முள்ளங்கி, மாதுளை, வாழை, மரவள்ளி ஆகியவற்றை பயிரிட்டு உரத்தின் தரத்தை நிரூபிக்கிறோம்.

உரத் தயாரிப்பால் மண் மாசடையவில்லை என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. உரத்தின் தன்மையை தனியார் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. வேளாண் துறையின் அங்கீகாரம் கிடைத்ததும், குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வருவோம். பேரூராட்சிக்கு கூடுதலாக 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

குப்பையை மலை போலக் குவித்து வைத்துவிட்டு பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, இந்த வளம் மீட்பு பூங்கா ஒரு சரியான பாடம்.

 

2011 - 16ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு செலவு...ரூ. 1,807 கோடி! குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் நம்பிக்கை

Print PDF

தினமலர்     09.06.2017

2011 - 16ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு செலவு...ரூ. 1,807 கோடி! குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் நம்பிக்கை


''பெருங்குடி, கொடுங்கையூரில் உள்ள குப்பையைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கவும், சென்னையில் தினமும் சேகரமாகும் 5,400 டன் குப்பை மூலம் மின்சாரம் தயாரிக்கவும், தனித்தனியாக திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன,'' என, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து பெற, இரண்டு வண்ணங்களில் குப்பை தொட்டிகள், மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில், நேற்று நடந்தது. விழாவில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பேசியதாவது:ரூ.303 கோடிகடந்த, 2011 - 16ம் ஆண்டுகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்காக, 1,807 கோடி ரூபாயை, அரசு செலவழித்துள்ளது. அதற்கு முந்தைய, ஐந்து ஆண்டுகளுக்கு, தி.மு.க., அரசு, வெறும், 303 கோடி ரூபாய் மட்டுமே, திடக்

கழிவு மேலாண்மை பணிகளுக்கு செலவழித்தது.

சென்னையில், நாள் ஒன்றுக்கு, 5,400 டன் குப்பையும், இதர மாநகராட்சி, நகராட்சிகளில் சேர்த்து, 7,597 டன் குப்பையும், பேரூராட்சிகளில், 1,967 டன் குப்பையும், ஊராட்சி பகுதிகளில், 2,340 டன் குப்பை என, தமிழகம் முழுவதும், மொத்தம், 17,304 டன் குப்பை சேகரமாகிறது.

குப்பை கழிவுகளை கையாள்வது சவாலான பணி. ஊரக பகுதிகளிலும், பேரூராட்சிகளிலும் சிறிய அளவில் குப்பை சேகரமாவதால், அவற்றை மறு சுழற்சி செய்யும் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், 70 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னையில், 5,400 டன் குப்பை தினசரி கையாள்வது பெரும் சவாலாகும். பல நிறுவனங்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை கொண்டு வருகின்றன. ஆனால், அந்த திட்டங்கள், சென்னையில் நடைமுறை சாத்தியம் இல்லாதவையாக உள்ளது.

மின்சாரம்

தற்போது குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்த

உள்ளது. இந்த திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில், முதல்வர் ஒப்புதல் பெற்று, கொடுங்கையூர், பெருங்குடியில் சேகரமாகியுள்ள குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், சென்னையில் தினமும் சேகரமாகும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், தனித்தனியாக திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நகராட்சி நிர்வாக துறை செயலர், ஹர்மேந்தர் சிங் பேசுகையில், ''சென்னையில் 70 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், குப்பை அகற்றும் பணியில், 18 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே ஈடுபட்டு

உள்ளனர்; ''இந்த எண்ணிக்கை போதாது. இதனால் பொதுமக்கள், தங்கள் வீடுகளிலேயே, குப்பையை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெய

குமார், பெஞ்ஜமின், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சந்திரகாந்த் காம்ளே, காக்கர்லா உஷா, கார்த்திகேயன், பிரகாஷ், மகரபூஷ்ணம், அருண்ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். -நமது நிருபர் -

 


Page 7 of 3988