Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஜீவா நகர் மக்களுக்கு விரைவில் மாற்று வீடுகள்... குடிசை மாற்று வாரியத்துக்கு மாநகராட்சி பரிந்துரை

Print PDF

தினமலர்      04.05.2017

ஜீவா நகர் மக்களுக்கு விரைவில் மாற்று வீடுகள்... குடிசை மாற்று வாரியத்துக்கு மாநகராட்சி பரிந்துரை

கவுண்டம்பாளையம் ஜீவா நகரில், வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, பாதை அமைக்க வேண்டுமென்ற ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்துவதற்காக, அங்குள்ள 203 குடும்பங்களுக்கு, மாற்று வீடுகளை ஒதுக்கீடு செய்யுமாறு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு, மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது, ஜீவா நகர். கவுண்டம்பாளையம் பஞ்சாயத்தாக இருந்தபோது, வண்டிப்பாதையாக இருந்த இடத்தை ஆக்கிரமித்து, 203 பேர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, இதே பகுதியிலுள்ள புனித தாமஸ் பள்ளி, சட்டரீதியாக போராடியது. ஆனால், மாவட்ட நிர்வாகம், இதை குடிசைப் பகுதியாக அறிவித்து, வண்டிப்பாதையை 'புறம்போக்கு' நிலம் என வகைப்படுத்தியது.

முதல் தீர்ப்பு!பள்ளி சார்பில் தாக்கல் செய்த மனுவை (எண்:7769/2000) விசாரித்த ஐகோர்ட், 'ஆக்கிரமிப்புகளை ஐந்து மாதங்களுக்குள் அகற்ற வேண்டும்' என்று, 2003 மார்ச் 4ல் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட, மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட், முந்தைய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று கூறி, 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்புகள் கொடுத்து, ஆட்சேபங்களைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு' 2008 நவ.,17ல் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கம் மனுப்போர் நடத்தியது; அதன் விளைவாக, 2011 ஜன.,18ல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, ஜீவா நகர் குடிசைவாசிகளுக்கு 7 (1) நோட்டீஸ் தரப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தும் முன், தேர்தல் வந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2012 ஜூன் 19ல், அன்றிருந்த கலெக்டர் கருணாகரன், செயல்முறை ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.

கலெக்டர் உத்தரவு ரத்து!ஐகோர்ட் உத்தரவு, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் கோரிக்கை எதையும் ஏற்காத அவர், 'ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய அவசியமில்லை' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பின்பே, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகள் இழுத்த வழக்கில், கடந்த ஜன.,19 அன்று, ஐகோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், முக்கிய தீர்ப்பை வழங்கியது.

கலெக்டர் கருணாகரனின் செயல்முறை ஆணையை ரத்து செய்த ஐகோர்ட், 'ஜீவா நகரில் வசிப்போர்க்கு, மாற்று இடங்களை வழங்கி, ஒரு கி.மீ., துாரத்துக்கு இருக்கும் ஆக்கிரமிப்புகளை, ஆறு மாதங்களுக்குள் அகற்றவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, உடனடியாக, நிறைவேற்றக்கோரி, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அங்கு வசிக்கும் 203 குடும்பங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

தற்போது, அந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகளை, ஒதுக்கீடு செய்து தருமாறு, குடிசை மாற்று வாரியத்துக்கு மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் பரிந்துரைத்து, பட்டியலையும் அனுப்பியுள்ளார். மாநகராட்சி பரிந்துரையை ஏற்று, இவர்களுக்கு மாற்று வீடுகளை, குடிசை மாற்று வாரியம் விரைவில் ஒதுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால், மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோடுகளிடையே இணைப்புச்சாலை அமைப்பதற்கான சாத்தியம் உருவாகும்.

வீடுகள் ஒதுக்குவதில் பிரச்னையில்லை!ஜீவா நகர் மக்களுக்கு, மாற்று வீடுகள் ஒதுக்குவது தொடர்பாக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரிடம் கேட்டபோது, ''ஐகோர்ட் உத்தரவின்படி, மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது; சட்டரீதியாக எந்த தடையுத்தரவும் இல்லாதபட்சத்தில், பட்டியலில் உள்ள, 203 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை,'' என்றார்.

கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இதில் தடையுத்தரவு எதுவும் இனி வர வாய்ப்பில்லை; ஏனெனில், தீர்ப்பு ஜன.,19ல் வெளியானது; ஜன.,25ல் அவர்களுடைய கையில் கிடைத்துள்ளது. அதிலிருந்து, மூன்று மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்து, தடை பெற்றிருக்கலாம்; ஆனால், ஏப்., 25 உடன் அதற்கான அவகாசம் முடிந்து விட்டதால், இனி தடை வாங்க வாய்ப்பில்லை' என்றனர்.

 

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சர் வேலுமணி

Print PDF

தி இந்து        27.04.2017

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளதாகவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் இன்று சென்னை மாநகராட்சி வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசி உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பிவேலுமணி

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளது, இருப்பினும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

சென்னையை பொறுத்தவரை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஏரி தண்ணீரை முறைப்படுத்தும் திட்டம் போன்றவற்றின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

சென்னையில் வடசென்ன, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் நேற்று மின்வெட்டு ஏற்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு, "தமிழகத்தில் மின்வெட்டு என்ற ஒன்று ஜெயலலிதா ஆட்சிக்குவந்த பின்னர் இல்லை. நேற்று ஏற்பட்ட மின்தடை சீர்செய்யப்பட்டுவிட்டது" என்றார்.

 

ஆக்கிரமிப்பில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை... கண்டுபிடி! கள ஆய்வுக்கு கிளம்புகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்

Print PDF

தினமலர்          27.04.2017

ஆக்கிரமிப்பில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை... கண்டுபிடி! கள ஆய்வுக்கு கிளம்புகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்


சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில், பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பல திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள இந்த நிலங்களை, கள ஆய்வு செய்து கண்டுபிடிக்க, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சி, 2011ல், ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை சேர்த்து, 426 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சி, 15

மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

கபளீகரம்

விரிவாக்கப் பகுதிகளை மட்டும் உள்ளடக்கி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய எட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. மாநகராட்சியுடன் இந்த பகுதிகள் இணைக்கப்பட்ட போது, அடிப்படை பணியாளர்கள், அரசுக்கு சொந்தமான ஆவணங்கள், பிறப்பு, இறப்பு பதிவுகள் என, அனைத்து ஆவணங்களும், மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டன.

ஆனால், முக்கிய ஆவணங்களில், பல வகைகள் இன்னும் மாநகராட்சி வசம், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஒப்படைக்காமல் உள்ளன. இவற்றில், அரசியல்வாதி களால் கபளீகரம் செய்யப்பட்டு வரும் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களும் ஒன்று. விரிவாக்கப் பகுதிகளில், பல புதிய மனைப்பிரிவுகளுக்கான திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள், இன்னும் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.

மெத்தனம்

பழைய மனைப்பிரிவுகளுக்கு கூட, திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களுக்கான உரிய ஆவணங்கள், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை. பொதுநல சங்கங்களிடம் இருந்து, 'எங்கள் பகுதி திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது' என, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தற்போதைய மாநகராட்சி சிறப்பு அதிகாரியும், கமிஷனருமான கார்த்திகேயன், விரிவாக்கப் பகுதி திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை, கள ஆய்வு செய்து கண்டுபிடிக்க, மண்டல அளவில் ஊழியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இம்மாத இறுதிக்குள், மண்டல வாரியாக, திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களின் பட்டியல், சி.எம்.டி.ஏ., அளித்த நிலம், மாநகராட்சியிடம் உள்ள நிலம், நிலத்தின் தற்போதைய நிலை ஆகிய விபரங்களை அளிக்க உத்தரவிட்டு உள்ளார்.மொத்தம், 388 திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள், இதுவரை அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், இதில் இரு மண்டலங்களில் இருந்து மட்டும், முழு தகவல்கள், மாநகராட்சி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மற்ற மண்டலங்களில், இது குறித்த விபரங்களை சேகரிப்பதில், ஊழியர்கள் மெத்தனம் காட்டி வருவதாக தெரிகிறது.

ஒத்துழைப்பு இல்லை

குறிப்பாக, பூங்கா துறை ஊழியர்கள், வார்டு பொறியாளர்களுடன் இணைந்து, திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை கள ஆய்வு செய்ய, கமிஷனர் அறிவுறுத்தினார். வார்டு பொறியாளர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், பூங்கா துறை ஊழியர்கள், நிலங்களை சென்று பார்க்க முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், முழுமையான பட்டியல் சேகரித்த பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும், ஆக்கிரமிப்பு இல்லாத இடங்களை, சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்கவும், புதிய பூங்காக்கள் நிதி ஆதாரங்களை பொறுத்து அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆவணங்களை காக்க புதிய வியூகம்!

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும், திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களும் சர்ச்சைக்குள்ளாவதற்கு காரணமே, அது குறித்த ஆவணங்களை பாதுகாக்காமல், மாநகராட்சி தொலைத்துவிடுவதே ஆகும். பழைய சொத்துகளுக்கான பல ஆவணங்கள், நிலம் மற்றும் உடமை துறையில் இல்லை.இதனால், தற்போது புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, புதிதாக பெறப்படும் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களுக்கான ஆவணம், மண்டல அலுவலகம், நிலம் மற்றும் உடமை துறை, பூங்கா துறை உட்பட, நான்கு இடங்களில் பராமரிக்கப்படும்.

 


Page 12 of 3988